தமிழகத்தில் இலங்கையைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல்: விசாரணையில் கியூ பிரிவு பொலிசார்

457 Views

போதைப் பொருள் கடத்தல் கும்பல் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக                     கிடைத்த தகவலையடுத்து, இலங்கைக்கு சுற்றுலா சென்று வந்தவர்கள் மீது இந்தியப் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் நடைபெறும் கொலை மற்றும் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த அங்கொட லொக்கா, தமிழகக்தில் தலைமறைவாக இருந்த போது கோவையில் கடந்த ஜுலை மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அத்துடன் போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய இலங்கையைச் சேர்ந்த அலகாபெருமகா சுனில் காமினி என்ற பொன்சேகா என்பவர் போலி கடவுச்சீட்டில் இலங்கையிலிருந்து தப்பி வந்து, தமிழகத்தில் தலைமறைவாக இருந்தார். அவரை கடந்த ஒக்டோபர் 13ஆம் திகதி கியூ பிரிவு பொலிசார் கைது செய்தனர். இவ்வாறான சம்பவங்கள் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இலங்கையைச் சேர்ந்த தாதாக்கள் 10 பேர் வரையில் தமிழகத்தில் பதுங்கியிருப்பதாக சர்வதேசப் பொலிசான இன்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்வதற்கு கியூ பிரிவு பொலிசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை தமிழகத்தில் இலங்கை மக்கள் தங்கியிருக்கும் பகுதிகளிலும், முகாம்களிலும் கியூ பிரிவு பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பதுங்கியிருக்கும் இலங்கை நபர்கள் போதைப் பொருள் மற்றும் தங்கம் போன்ற கடத்தலில் ஈடுபடலாம் என்றும், அதற்காக தமிழக கடற்கரையை பயன்படுத்தலாம் என்றும் சந்தேகம் கொண்ட பொலிசார் இது குறித்து தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.

அத்துடன் இலங்கைக்கு சுற்றுலா விசாவில் சென்று வந்தவர்கள் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது. அவர்கள் உண்மையாவே சுற்றுலாவிற்காகத் தான் சென்றார்களா? அவர்கள் இலங்கையில் சந்தித்த நபர்கள் போன்றன குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரும் தமிழகப் பொலிசாரின் விசாரணைக்கு உதவி செய்து வருகின்றனர். அத்துடன் இலங்கையிலிருந்து போதைப் பொருள் கடத்தப்படுவது குறித்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply