தமிழகத்திலிருந்து கனடா செல்ல முயன்ற 27 இலங்கை தமிழர்கள் மதுரையில் கைது

கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 27 இலங்கையர்கள் இன்று மதுரையில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைவிட மேலும் 34 இலங்கையர்கள் மங்களூரில் வைத்து கைதாகினார்கள்.

இலங்கையில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதனால் இலங்கையவர்கள், தமிழகம் ஊடாக வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முற்படலாம் என கிடைத்த தகவல்களையடுத்து தமிழக கரையோரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினரும் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இலங்கை அரசு தமிழகத்துக்கான விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் கடல் வழியாக தமிழகம் வந்து தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல திட்டமிட்டு கடந்த 27ஆம் தேதி இலங்கை புத்தளம் மாவட்டம் சிலாபதுறையிலிருந்து 24 ஆண்கள் இரண்டு பெண்கள் ஒரு குழந்தை என மொத்தமாக 27 பேர் கடல்வழியாக சட்டவிரோதமான முறையில் தூத்துக்குடி வந்தடைந்தனர்.

தூத்துக்குடி வந்த 27 பேரும் மதுரையில் தங்கி அங்கிருந்து கேரளா வழியாக கனடா செல்ல திட்டமிடுவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. இது குறித்து க்யூ பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து இராமநாதபுரம் மற்றும் மதுரை க்யூ பிரிவு பொலிஸார் நேற்று 27 பேரையும் மதுரையில் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 27 பேருக்கு கடவுச்சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் 27 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் இருந்து கனடா செல்ல படகுகளில் மங்களூர் சென்ற 34 இலங்கையர்களும் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply