ஜேர்மன் நகரில் ஒரு தமிழ் பாடசாலை

ஏப்ரல் 01ஆம் திகதியிலிருந்து ஜேர்மன் வாழ் தமிழ் மக்கள், இந்தியா தஞ்சைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து முன்சென் தமிழ் கல்விக் கழகத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

இது சாதாரண கல்விக் கழகமாக இல்லாது, பல்கலைக்கழக தரத்தில் கலை மற்றும் கலாசாரம், பண்பாடு, நாட்டுப்புற கலைகள், இலக்கியம், நூல் நிலையம் என்று ஒரு பல்கலைக்கழக துறைகள் அனைத்தையும் உள்ளடக்கியதான கல்விக் கழகமாக அமைந்துள்ளது.

ஒரு பல்கலைக்கழக நிர்வாகம் போன்று கல்வி மற்றும் பாடப்பிரிவுகள், மாணவர் சேர்க்கை, கட்டண விகிதம் என அனைத்தையும் இவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம். ஒரு வருடத்திற்கும் மேலாகப் பலரின் கடின உழைப்புக்குக் கிடைத்த பலன்தான் இந்த கல்விக் கழகம்.

2018ஆம் ஆண்டு முன்சென் தமிழ் கல்விக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட போதே, இந்த தமிழ் கல்விக் கழகத்திற்கான ஆரம்பம் நிர்ணயிக்கப்பட்டது.

இது தொடர்பாக நிறுவன ஆர்வலரான செல்வகுமார் பெரியசாமி குறிப்பிடுகையில், அமெரிக்கா, லண்டன், சிங்கப்éரில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் பற்றி விசாரித்து அறிந்து கொண்டதாகவும். பின்னர் இந்தியா தஞ்சைப் பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்டு கல்விக் கழகம் அமைப்பது தொடர்பாக தெரிந்து கொண்டதாகவும். அதன் பின்னர் தங்களுக்கு அனுமதி கிடைத்ததாகவும் தெரிவித்தார்.

தமிழ் டிப்ளோமா மற்றும் இளங்கலை பாடத்திட்டங்களை முன்னெடுப்பதே தங்களின் நோக்கம் என்று கூறினார்.

திலக் சிறிராம் முன்சென் நகர அலுவலகங்களில் அனுமதி வாங்குவது, குழந்தைகளுக்கான பாதுகாப்பு முறைகள், மக்கள் தொடர்பு போன்ற பல வேலைகளை கவனிக்கின்றார். நிர்மல் ராமன் கழகத்தின் கட்டமைப்பு, செயல்முறை, வடிவமைப்பு மற்றும் திட்டமிடல் சம்பந்தமான வேலைகளை கவனித்துக் கொள்கின்றார்.

அருண் சின்னமணி என்பவர் தெரிவிக்கையில், முன்சென் நகர நிர்வாகம், தங்களுக்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1மணிவரை “Grundschule an der Swanthalerstr” என்ற அரசுப் பள்ளியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்திருப்பதாகக் கூறுகின்றார்.

தன்னார்வ தொண்டர்கள் பலரின் முயற்சியில், ஜேர்மனியில் அமைந்துள்ள இந்தியத் தூதரகம் ஆலோசனைகளை வழங்கி பக்க பலமாக திகழ்கின்றது.

கழகத்திற்குத் தேவையான இசைக் கருவிகளை வாங்கிக் கொடுக்கும் எண்ணமும் அவர்களுக்கிருப்பதாக அறிய முடிகின்றது.

ஜேர்மனியில் கல்வியாண்டு செப்டெம்பர் ஆரம்பிக்கப்படவுள்ளதால், இந்த கல்விக் கழக வகுப்புகளையும் அதே மாதத்தில் ஆரம்பிக்கவுள்ளனர். இதுவரையில் 40 பிள்ளைகள் பதிவு செய்திருக்கின்றனர். 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பாடல்கள் சொல்லிக் கொடுப்பது என்றும் 6 தொடக்கம் 11வரை உள்ள பிள்ளைகளுக்கு எழுதுவது  படிப்பது என்றும் . இதுபோன்ற பல திட்டங்கள் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.