ஜஸ்மின் சூக்கா மீது சிறிலங்கா அரச புலனாய்வு அதிகாரி ஐரோப்பிய ஒன்றியத்தில் முறைப்பாடு

அரசபுலனாய்வு பிரிவின் இயக்குநர் மேஜர்ஜெனரல் சுரேஸ்சால்லே சர்வதேச உண்மை மற்றும்நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக ஐக்கியநாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.

தனது சட்டத்தரணி பசன்வீரசிங்க மூலம் இலங்கையிலுள்ள ஐநா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அலுவலகங்களிற்கு சுரேஸ் சால்லே தனது முறைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

ஜஸ்மின் சூக்கா மற்றும் ஐடிஜேபி ஆகியன சமீபத்தில் செயற்பட்ட விதம் குறித்து அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

ஜஸ்மின் சூக்கா சமீபத்தில் அவதூறு பிரச்சாரம் என கருதக்கூடிய பல அறிக்கைகளை வெளியிட்டார், தனது கட்சிக்காரரின்( சுரேஸ் சல்லேயின்) அடிப்படை உரிமைகளை மீறினார் ஐசிசிபிஆர் சட்டத்திற்கு எதிராக செயற்பட்டார், சுரேஸ் சால்லேயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தினார் என

சுரேஸ் சால்லே தெரிவித்ததன் அடிப்படையில் ஐநா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவித்துள்ளதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்காக பல அமைப்புகள் ஜஸ்மின் சூக்காவிற்கும் அவரது அமைப்பிற்கும் நிதி உதவி வழங்கியுள்ளதாக ஐநாவிடமும் ஐரோப்பிய ஒன்றியத்திடமும் முறைப்பாடு செய்துள்ளதாக மேஜர் ஜெனரல் சுரேஸ் சால்லேயின் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சூக்காவினதும் அவரது அமைப்பினதும் நடவடிக்கைகள் இந்த நோக்கத்திற்கு முரணாக உள்ளவை என சுட்டிக்காட்டியுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

மாறாக இந்த நிதிகள் விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன,இலங்கையில் நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என சுட்டிக்காட்டியுள்ளதாகவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.