ஜஸ்டின் ட்ரூடோ இரு முகம் கொண்ட நபர் – டிரம்ப்

நேட்டோ மாநாட்டில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்க அதிபர் டிரம்பை கேலி செய்வது போல் வெளியான வீடியோ ஒன்றால் ஜஸ்டின் ட்ரூடோவை இருமுகம் கொண்ட நபர் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரூடோ, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரூங் ஆகியோர் டிரம்பால் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்று குறித்து பேசி கொண்டிருப்பதாக அந்த வீடியோவில் தெரிகிறது.

நேட்டோ தலைவர்கள், ஒற்றுமையாக இருப்பது குறித்து ஒப்பந்தம் ஒன்றை ஏற்றுள்ளனர் ஆனால் லண்டனுக்கு அருகில் நடைபெற்ற 70ஆவது ஆண்டுவிழா கூட்டத்தில் பல சலசலப்புகள் ஏற்பட்டன.

அந்த கூட்டத்திற்கு பிறகு நடைபெறுவதாக இருந்த செய்தியாளர்கள் சந்திப்பை டிரம்ப் ரத்து செய்துவிட்டார்.

அவர் செய்தியாளர்களிடம், “நாம் ஏற்கனவே பல செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திவிட்டோம் என தெரிவித்திருந்தார்,”

கனடா ஊடகமான சிபிசியால் டிவிட்டரில் பதிவிடப்பட்ட அந்த வீடியோவில், ட்ரூடோ, போரிஸ் ஜான்சன், மக்ரூங், நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே மற்றும் அரசி எலிசபெத்தின் மகள் இளவரசி ஆனி ஆகியோர் பக்கிங்காம் அரண்மனையில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த வீடியோவின் தொடக்கத்தில், “போரிஸ் ஜான்சன் மக்ரூங்கை பார்த்து அதனால்தான் நீங்கள் தாமதமாக வந்தீர்களா?,” என கேட்கிறார்.

அதற்கு ட்ரூடோ, “40 நிமிடங்கள் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பால் அவர் தாமதமாக வந்துள்ளார்,” என தெரிவித்துள்ளார்.

அதற்கு மக்ரூங் ஏதோ பதிலளிக்கிறார் ஆனால் அது அந்த வீடியோவில் தெளிவாக கேட்கவில்லை. அதன்பின் ட்ரூடோ, “ஆமாம் அவர் அறிவித்திருந்தார், அவரின் குழு ஆச்சர்யத்தில் மூழ்கியதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும்,” என்று தெரிவிக்கிறார்.

ஆனால் இவர்கள் யாருக்கும் இவர்கள் பேசுவது பதிவு செய்யப்படுவதாக தெரிந்திருக்கவில்லை.

இந்த வீடியோவை குறிப்பிட்டுதான், கனடா பிரதமர் ட்ரூடோ இரு முகம் கொண்டவர் என தெரிவித்துள்ளார் டிரம்ப்.

Leave a Reply