ஜனாதிபதித் தோ்தலில் ரணிலை ஆதரிப்பதில் முரண்பாடு – பிளவுபடும் நிலையில் பொது ஜன பெரமுன

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளது என  கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக இந்த நிலையேற்பட்டுள்ளது என டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது – எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை.

இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறக்கூடிய திறமையுடைய எவரும் கட்சியில் இல்லை  என தெரிவித்துள்ள பிரசன்ன ரணதுங்க இதன் காரணமாக கட்சி தனது வேட்பாளரை நிறுத்தக்கூடாது  என தெரிவித்துள்ளார். தேசிய அமைப்பாளராக பசில் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளதை வெளிப்படையாக விமர்சித்துள்ள அவர் அந்த பதவியை பசில் ராஜபக்சவிற்கே வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.