தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து வலுவாக பேரம் பேசும் உத்தியாக, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தரப்பின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பில் ஏனைய தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடுவதென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று(29) தீர்மானித்துள்ளது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டம் கள்ளியங்காடு, கட்டப்பிராயிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனின் வீட்டில் நடைபெற்றது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத் தலைவா் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத் தலைவா் த.சித்தார்த்தன், பா.கஜதீபன், ஈழமக்கள் புரட்சிகரிவிடுதிலை முன்னணியின் தலைவா் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சித் தலைவா் என்.சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சித் தலைவா் வேந்தன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
மாலை 3.30 மணி முதல் 2 மணித்தியாலங்கள் வரை இந்த சந்திப்பு நடந்தது. இதன்போது, அடுத்து நடைபெறலாமென எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் அதிகபட்ச சாதகமாக பயன்படுத்திக் கொள்வது பற்றி, அனைத்து தமிழ் தரப்புக்களிற்குமிடையில் கலந்துரையாடல் நடத்தி, பொது இணக்கப்பாடு எட்ட முயற்சிப்பதென தீர்மானிக்கப்பட்டது.
தமிழ் தரப்பில் பொது இணக்கம் மேற்கொண்டு, அதன் தொடர்ச்சியாக சிங்கள பிரதான கட்சிகளுடன் பேரம் பேசலை மேற்கொள்வதே சிறந்ததென தீர்மானிக்கப்பட்டது. கடந்த ஜனாதிபதி தேர்தல், ரணில் வெற்றியீட்டிய சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் டலசை ஆதரிப்பதென ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் திரைமறைவில் மேற்கொள்ளும் பேச்சுக்கள்- பரிமாற்றங்களினால்- தமிழ் இனத்துக்கு எந்த பலனும் கிட்டுவதில்லையென்ற பட்டறிவின் அடிப்படையில், அனைத்து தமிழ் தரப்பையும் ஒன்றிணைத்து, பொதுவேட்பாளரை அறிவிக்கும் நிலைப்பாடெடுத்து, அதன்பின்னர் பிரதான கட்சிகளுடன் பேரம் பேசலை நடத்தலாமென தீர்மானிக்கப்பட்டது.