போர்க்குற்றங்கள்
போரில் ஈடுபடும் தரப்புக்கள் செய்யும் குற்றங்கள் என்னவாக இருக்கும் என்பது எம்மிடையே பொதுவாக எழும் கேள்விகள் தான். ஆனாலும் ஈழத்தமிழர்களின் வாழ்வனுபவத்தில் போரக்குற்றமாக கண்களின் முன் என்றும் நிழலாடுவது நண்களும் கைகளும் கட்டப்பட்டு நிர்வாணமாக்கப்பட்ட போராளிகள் எனச் சந்தேகிக்கப்படும் சிலரை பிடறியில் சுட்டுக்கொல்லும் சிறீலங்கா இராணுவத்தின் காணொலியும் தலைவரின் மகன் பாலச்சந்திரனுக்கு விசுக்கோத்துகளை உண்ண்ககொடுத்ததும் பின் அந்தக் குழந்தை இறந்து கிடப்பதுமான காணொலிகளே.
அவை போர்க்குற்றங்கள் தான். ஆம். ஆரம்பத்தில் நாம் அவற்றைப் போர்க்குற்றங்களாக ஏற்றுக்கொண்டாலும் அக்கொலைகளுக்குப் பின்னாலிருக்கும் நோக்கம் இனப்படுகொலைக்கானது என்பதை பின்னொரு கட்டுரையில் நாம் பேசிக்கொள்வோம்.
ஆக மேற்சொன்ன இரண்டு விடயங்களும் போர்க்குற்றங்கள் தான் என நாம் உணர்ந்துகொண்டுள்ள போதும் அதனை அறிவுசாரந்து போர்க்குற்றமாக பொதுவெளியில் பேசுவதற்கு எமக்கு தேவையான அறிவைப்பற்றி இனித் தொடர்வோம்.
போர்க்குற்றங்கள் என்றால் என்ன என்பதை ரோம் பன்னாட்டு நடைமுறை வரைபின் அகவிதி 8 இன் பிரகாரம்:
“பன்னாட்டு மற்றும் உள்நாட்டு ஆயுத முரண்பாடுகளின் போது பிரயோகிக்கத்தக்க சட்ட நடைமுறைகளையும், மரபையும் உடைத்தெறிந்து அவற்றை மீறும் நடவடிக்கைகள் அனைத்தும் போர்க்குற்றங்கள்”
என வரையறுத்துக்கொள்ளலாம்.
போர்க்குற்றங்களை வரையறுப்பதில் மேலும் தெளிவான விளக்கமொன்றை ஹென்கேர்ட்ஸ் டோஸ்வால்ட் தருகின்றார்.
“பன்னாட்டு மனிதாபிமானச்சட்டத்தினை போர்க் குற்றங்கள் தீவிரமாக மீறுவதனால் பாதுகாப்பு வழங்;கப்பட்ட மானுடனினதும், பொருட்களினதும் மீதான பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் அல்லது மானுடப் பெறுமதியினை அறவே அற்றுப்போகச்செய்யும் செயல்கள் போர்க்குற்றங்கள்” என்கிறார் அவர்.
இதன்படி பன்னாட்டு மனிதாபிமானச்சட்டங்களினை மீறும் பொழுதே போர்க்குற்றங்கள் தோற்றம் பெறுகின்றன. அவ்வாறாயின் பன்னாட்டு மனிதாபிமானச் சட்டம் போர்களின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளையும் வகுத்திருக்க வேண்டும் அல்லவா?
1864ஆம் ஆண்டில் போர்களில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் தொடர்பாக முதற்கட்டமாக உலகலாவிய பேச்சுக்கள் எழுந்தன. அவை செயலுருப்பெற்று மேலும் தேவைக்கேற்ப புத்தாக்கப்பட்டு ஜெனீவாவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பன்னாட்டு நடைமுறை வரைபும் அதன் மேலதிக இணைப்புக்களான நெறிமுறைகளும் போர்க்குற்றங்களை இரண்டு வகையாகப்பிரித்து நோக்கின. அவை முறையே:
- பன்னாட்டு ஆயுத மோதல் குற்றங்கள்
- பன்னாடல்லாத (உள்ளநாட்டு) ஆயுத மோதல் குற்றங்கள் என்பனவாகும்.
பன்னாட்டுப் போர்களின் போது பன்னாட்டு மனிதாபிமானச் சட்டத்தை மிகத் தீவிரமாக மீறி நிகழ்த்தப்படுகின்ற குற்றங்கள் “மாபாதக விதிமீறல்” என்ற சிறப்புச் சொல்லாடலால் ஜெனீவா நடைமுறை வரைபு வெளிப்படுத்தியுள்ளது. பாதுகாக்கப்பட்ட மனிதன் மற்றும் ஆதனங்களின் மீது நிகழ்த்தப்படும் அவ்வகை மாபாதக விதிமீறல்களாக –
1.வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் கொலைகள்
2.மனிதாபிமானமற்ற பராமரிப்பு, சித்திரவதைகள், மற்றும் உயிரியல் ஆயுதப் பரீட்சிப்பு
3.உளநிலை மற்றும் மனிதவுடல் மீது வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் படுகாயங்கள், தாங்கொணாத் துன்பப்படுத்துதல்கள்.
4.ஆதனங்களை சட்டத்திற்கு புறம்பாகக் கையகப் படுத்தல், அழித்தல்.
5.போர்க்கைதிகளையும், பாதுகாக்கப்பட்ட மக்களையும் கைதிகளாக்கி பணிக்கமர்த்துதல்.
6.போர்க்கைதிகளையும், பாதுகாக்கப்பட்ட மனிதர்களையும் நீதிப்பொறிமுறைக்கு உள்ளாக்கும் உரிமையை வேண்டுமென்றே மறுத்தல்.
7.சட்டத்திற்கு புறம்பாக இடம்பெயர்த்தல், இடமாற்றுதல் மற்றும் வலுக்கட்டாயமாக தடுத்து வைத்தல்.
8.பிணைக்கைதிகளாக்குதல்.
இவற்றிற்கு மேலதிகமாக மேலும் இருபத்தைந்து யுத்த மீறல்கள் பன்னாட்டு ஆயுத மோதல்களின் போது குற்றங்களாக கொள்ளப்படத்தக்கவை என ரோம் பன்னாட்டு நடைமுறை வரைபு வகைப் படுத்தியுள்ளது.
பன்னாட்டுப் போர்கள் அல்லாத (உள்நாட்டு) ஆயுத மோதல்களின் போது போர்க் குற்றங்களெனக் கருதத்தக்க நான்கு பிரதான விடயங்களை ஜெனீவா பன்னாட்டு நடைமுறை வரைபு வகுத்துள்ளது.
அவையாவன:
1.மனித வாழ்விற்கும், மனிதனுக்கும் எதிரான தாக்குதல்கள். விசேடமாக எல்லா வகையான கொலைகள், குரூர நடத்தைகள், சித்திரவதைகள் மற்றும் அங்கவீனப்படுத்துதல்.
2.மானிடப்பண்பிற்கு ஒவ்வாதவையும், அருவருக்கத்தக்க வையுமான செயல்களைச் செய்யத் தூண்டுதல்.
3.பணயக் கைதிகளாக்குதல்
4.நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருக்காத தடுத்து வைத்தல் மற்றும் கொல்லும் தண்டனைகளைப் பிரயோகித்தல்.
ரோம் நடைமுறைவரைபானது உள்நாட்டுப் போர்களின் போது நிகழும் யுத்த மீறல்களில் பின்வரும் குற்றங்களைத் தீவிரமான போர்க் குற்றங்களாகக் கருத வேண்டும் என வரையறுத்துள்ளது.
1.போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிராத குடிமகன் அல்லது பொதுமக்கட் தொகுதியொன்றின் மீது உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள்.
2.பொதுமக்கள் பாவிக்கும் கட்டடங்கள், போக்குவரத்துச் சாதனங்கள், மருத்துவமனைகள். பொருட்கள் மற்றும் ஜெனீவா வரைவுக்கமைவாக விசேட குறியிடப்பட்டவற்றின் மீது மேற்கொள்ளப்படும் உள்நோக்கம் கொண்ட தாக்குதல்கள்.
3.போர்ப் பிரதேசத்திலுள்ள மக்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டுச் சட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள அமைப்புக்களின் அங்கத்தவர்கள், வாகனங்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமானவற்றின் மீது மேற்கொள்ளப்படும் உள்நோக்கமுடைய தாக்குதல்கள்.
4.இராணுவ நிலைகளென கொள்ளப்படாத சமய நிலையங்கள், கல்வி நிலையங்கள், கலை, விஞ்ஞான. பண்பாட்டு நிலையங்கள், வரலாற்றுச் சின்னங்கள், வைத்தியசாலைகள் உட்பட காயமடைந்தவர்களை பராமரிப்பதற்காக உருவாக்கப்பட்ட நிலையங்கள் மீது மேற்கொள்ளப்படும் உள்நோக்கங்கொண்ட கொடுந் தாக்குதல்கள்.
5.சாதாரணமாக சொத்துக்களை சூறையாடுதல் அல்லது வலிந்த தாக்குதலூடாகச் சொத்துக்களைச் சூறையாடுதல்.
6.அகவிதி 7 இன் பந்தி 2 (க) இன் பிரகாரம் மேற்கொள்ளப் படும் கட்டாயக் கருவேற்றல், வன்புணர்வு, பாலியல் அடிமையாக்குதல், மற்றும் கட்டாயக்கருக்கலைப்பு உட்பட நிகழ்த்தப்படும் பாலியல் அத்துமீறல்கள்.
7.பதினைந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை போர் நடவடிக்கையில் ஈடுபடுத்தும் முயற்சிகள்.
8.தவிர்க்க முடியாத இராணுவக்காரணங்களுக்காக அல்லது பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அல்லாமல் உள்நாட்டு யுத்தத்தை காரணம் காட்டி மக்களை இடம்பெயர்த்தல்.
9.போராளியொருவரை துரோகத்தனத்தால் கொல்தல்.
10.கருணைகாட்ட மறுத்தல்.
11.மருத்துவத்துறைக்குரியதெனவோ அல்லது ஏனைய எந்தவொருவகையிலுமோ நியாயப்படுத்த முடியாத பரிசோதனைகளின்; ஊடாக மனிதர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்தல் அல்லது உயிராபத்தை உருவாக்கும் தீவிரமான காயங்களை ஏற்படுத்துதல்.
12.யுத்தத்தின் போது சொத்துக்களை அழிக்க அல்லது கையகப்படுத்த தேவையில்லாத போதும் அவற்றை அழித்தல் அல்லது கையகப்படுத்துதல் .
ஜெனீவா மற்றும் ரோம் நடைமுறை வரைபுகளின் ஊடாக மேற்கூறப்பட்ட விடயங்களே உள்நாட்டு போர்களின் போதான போர்க் குற்றங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன.
அடுத்தவாரம் இனப்படுகொலை சம்பந்தமாகத் தெரிந்துகொள்வோமா நண்பர்களே!
முனைவர் ஸ்ரீஞானேஸ்வன் பன்னாட்டுக் குற்றங்கள் பொத்தக ஆசிரியர், பட்டய முகாமைக் கணக்காளர்