செல்லாக்காசாகும்  தொழிற்சங்கங்கள் – துரைசாமி நடராஜா

உலகளாவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் நலன்கருதி பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகின்றன. இந்த வகையில் மலையக மக்களின் அபிவிருத்தியில் தொழிற்சங்கங்களின் வகிபாகம் சற்று அதிகமாகவே காணப்படுகின்றது. இதனிடையே தோட்ட நிர்வாகங்களின் கெடுபிடிகள் சமகாலத்
தில் அதிகரித்து வரும் நிலையில் தொழிற் சங்கங்களை மேலும் பலப்படுத்த வேண்டிய தேவை மேலெழுந்துள்ளதாக மூத்த தொழிற் சங்கவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் காவலர்கள் என்பார்கள். தொழிலாளர்களின் இன்னோரன்ன செயற்பாடுகளிலும் அபிவிருத் தியை ஏற்படுத்த தொழிற்சங்கங்கள் முனை ந்து வருகின்றன. தொழிலாளர்களின் தொழில் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் பணி தொழிற் சங்கங்களைச் சார்ந்ததாகவுள்ளது. இதனடிப் படையில் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் சுமூகமான பேச்சுவார்த்தைகள், வேலை நிறுத்தப் போராட் டங்கள், மெதுவாக பணி புரியும் போராட்டம், சட்ட ரீதியான முயற்சிகள் என்று பல்வேறு அணுகுமுறைகளின் ஊடாக தொழில் பிரச்சி னைகளுக்கு தீர்வு எட்டப்படுகின்றது. இவை தவிர தொழிலாளர்களின் பொதுக்கல்வி, தொழிற்
சங்கக்கல்வி, கலை மற்றும் கலாசார மேம் பாடு, விளையாட்டு என்பன கருதியும் தொழிற்சங்கங்கள் பல்வேறு செயற்பாடுக ளையும் மேற்கொண்டு வருவதும் நீங்கள் அறிந்ததேயாகும். அத்தோடு தொழில் துறையில் தொழிலாளர்களின் தொழில் உரிமைகளைப் பாதுகாத்து தொழில் நிலைமையையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவதே ஒரு தொழிற்சங்கத்தின் பிரதான குறிக்கோளாகும்.
தொழில் பாதுகாப்பு அங்கத்தவர் ஒருவரைப் பாதுகாப்பது தொடக்கம் தொழிற்சங்கம் அவர்கள் மத்தியில் பூரண விழிப்புணர்வைக் கொண்டு வரும் முயற்சி யில் ஆரம்ப முதலே தனது பங்களிப்பை மேற்கொள்ளுகின்றது.  ஆட்பலம், அறிவியல் பலம் என ஒரு நிலையான சக்தியை ஒன்றா
கக் கூட்டி தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தொழிற்சங்கம் சிறப்பான பங்கினை வகிக்கின்றது என்பது பெரும் பாலானோரின் கருத்தாகும்.
மேலும் தொழில் தளங்களில் ஏற்படும் தொழில் தகராறுகளுக்கு தனியொரு தொழிலாளியினால் தீர்வுகளைக் காண்பது இலகுவான விடயமல்ல. இந்நிலை மையில் இருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்கக் கூடிய ஒரே சக்தி தொழிற்சங்கமேயாகும் என்பதும் இவர்களின் கருத்தாகும். இவற்றுடன் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப் பதற்காக அரசியல் ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு தொழிலாளர்கள் தொடர்பான சட்டங்கள், விதிமுறைகள், தீர்மானங்கள் என்பவற்றை ஆக்குவதிலும் முறையாக நடைமுறைபடுத்து வதிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டு வருகின்றன.
நாட்டின் அல்லது சமூகத்தின் அபிவிருத்தி யில் இளைஞர்களின் வகிபாகம் அதிகமாக காணப்படுகின்றது. இளைஞர்களுக்கு இடமளிக் காத நாட்டின் அல்லது சமூகத்தின் எதிர்காலமும் சமகாலமும் கேள்விக்குறியாகும் என்பதனை புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தவகை யில் இளைஞர்களின் சக்தியை ஊக்குவித்து அவர்களுக்கு உரிய வழி காட்டும் வகையில் தொழிற்சங்கங்களில் இளைஞர் அணி ஏற்படுத்
தப்பட்டு செயற்பட்டு வருகின்றது.
இதைப்போன்றே மகளிரின் திறமைகளை ஊக்குவிக் கும் நோக்கில் தொழிற்சங்கங்களில் மகளிர் அணி ஏற்படுத்தப்பட்டு இயங்கி வருகின் றது. தலைமைத்துவ அனுபவத்தைப் பெற்றுக் கொடுத்தல், தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைக ளைகளை பெண்கள் துணிந்து கூறுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல் என்பவற்றுடன் பல துறைகளில் அனுபவ ரீதியான அறிவினைப் பெற்றுக் கொடுப்பதும் தொழிற் சங்க மகளிர் அணியின் நோக்கமாகும். எனினும் இவற்றின் நோக்கங்கள் சிறப்பானதாக இருப்பி
னும் செயற்பாடுகள் எந்தளவுக்கு ஆக்கப்பூர் வமானதாக காணப்படுகின்றது என்பது குறித்து விமர்சனங்கள் இருந்து வருகின்றன.
இந்த வகையில் மலையக மக்களை எடுத்து நோக்குமிடத்து அவர்களுக்கும் தொழிற்சங் கங்களுக்கும் இடையிலான தொடர்பு மிகவும் நெருக்கமானதாகும். தொழிலாளர்களுக்கு நல் வழி காட்டி ‘கலங்கரை விளக்கமாக’ இருந்து தொழிற்சங்கங்கள் செயற்பட்டன என்றால் மிகையாகாது. மலையக மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து அவர்களுக்கு தோள் கொடுத்த பெருமைக்குரியனவாக தொழிற்
சங்கங்கள் விளங்குகின்றன. எனினும் தோட்டங்களில் தொழிற்சங்கங்கள் உள்நுழைவ
தென்பது அவ்வளவு இலகுவான காரியமாக இருக்கவில்லை என்பது யாவரும் அறிந்ததே யாகும்.
தொழிற்சங்கங்கள் தோட்டங்களில் உள் நுழையுமானால் அது தமது நிர்வாக ரீதியான செயற்பாடுகளுக்கு பல்வேறு வகையிலும் இடையூறினை ஏற்படுத்தும். இதனால் தாம் பெரும் சவால்களை சந்திக்க வேண்டி நேரிடும் என்ற நிர்வாகத்தின் சிந்தனை தொழிற்சங்கங்களை உள்நுழையவிடாது தடுத்து நிறுத்தியது. நகர்ப்புற தொழிற்சங்க கூட்டங்களில் பங்கேற்க விடாது தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்
களுக்கு தடை விதித்திருந்தன. எனினும் இத்தகைய தடைகளையெல்லாம் மீறி தோட்டங் களுக்குள் தொழிற்சங்கங்கள் உள்நுழைந்த வரலாறு மிகவும் முக்கியமானதாகும்.
சௌமியமூர்த்தி தொண்டமான் மலையக மக்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான தொடர்பு ஒரு காலத்தில் மிகவும் உன்னதமானதாகக் காணப்பட்ட போதிலும் பின்வந்த காலத்தில் இவ்விடயத்தில் ஒரு சறுக்கல் நிலை அல்லது விரிசல் நிலை ஏற்பட்டதையும் இங்கு குறிப்பிட்டாதல் வேண்டும்.
தொழிற்சங்கவாதிகள் தொழிற்சங் கத்தை ஏணியாக வைத்து அரசியல் பிரவேசம் செய்தனர். இந்நிலையில் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய சில தொழிற்சங்கவாதிகள் தமது தொழிற்சங்கத்தைச் சார்ந்தவர்களுக்கே அதிக நலன்களைப் பெற்றுக் கொடுப்பதாகவும், ஏனைய தொழிற்சங்கத்தினரை புறக்கணித்து செயற்படுவதாகவும் கண்டனங்கள் முன்வைக் கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வீடுகளை தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுத்தல், அரசாங்கம் வழங்கும் உதவிகள் (உதாரணமாக அஸ்வெசும திட்டம்) உள்ளிட்ட பலவற்றில் ஒரு குறிப்பிட்ட தொழிற்சங்க ஆதரவாளர்களுக்கே கூடுதலான முன்னுரிமைகள் வழங்கப்படுவதாக அண்மையில் கூட பாரிய குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டு வந்ததையும் அவதானிக் கக் கூடியதாக இருந்தது. இக்குற்றச்சாட்டின் நம்பகத்தன்மை குறித்து பலர் தமது கருத்துக்களை யும் ஆவணங்களையும் முன்வைத்திருந்தனர்.
இவற்றுடன் மலையகத்தில் தொழிற்சங் கங்களின் பெருக்கமும் தொழிற்சங்க கலா சாரத்தை கேள்விக்கு உட்படுத்தி இருந்தது. ஒரு காலத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சக்திமிக்க தொழிற்சங்கமாக மலையகத்தில் ஆதிக்கம் செலுத்தியது. இத்தொழிற்சங்கத்தில் அதிகமான அங்கத்தினர்கள் அங்கம் வகித்த நிலையில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் தொழிலாளர் சக்தியை மையப்படுத்தி பல்வேறு நலன்களையும் தொழிலாளர்களுக்குப் பெற்றுக் கொடுத்தார். பேரம் பேசும் சக்தி அக்கால அரசியலில் முக்கிய திருப்பு முனையை ஏற்படுத்தி இருந்தது. எனினும் பிற்காலத்தில் மலையகத்தில் தொழிற்சங்கங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. தொழிற்சங்கவாதிகளின் அரசியல் மோகமும் இதற்கொரு காரணமாகும் என்பதை மறுப்பதற்கில்லை.
இத்தகைய நிலைமைகள் தொழிலாளர்களின் ஐக்கியத்தை பல சந்தர்ப் பங்களில் சீர்குலைத்திருந்தன. மலையக மக்களின் பலமும் இதனால் சீர்குலைந்தது. இதனிடையே அண்மைக்காலத்திலும் இன்னுமொரு புதிய தொழிற்சங்கத்தை மலையகத்தில் ஆரம்பிப் பதற்கான முன்வைப்புக்கள் இடம்பெற்று வருவதாக செய்திகள் உலாவின. இத்தகைய முன் னெடுப்புக்கள் தொடர்பில் நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது. சுய நலன்களுக்காக அப்பாவி மக்களை பலிக்கடாவாக்கும் இத்தகைய போக்குகள் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். தொழிற்சங்கம் இருந்தால்தான் அரசியல் செய்ய முடியும் என்ற பிழையான எண்ணக்கரு மாற்றப் பட வேண்டும்.
நிலவுரிமைச் சமூகம் தொழிற்சங்கங்கள் பல பாரம்பரிய நடவடிக் கைகளில் இருந்தும் விடுபடாது இன்னும் பாரம்பரியத்திலேயே மூழ்கிப்போய் இருக்கின்றன. காலமாற்றத்துக்கேற்ப இத்தொழிற்சங் கங்கள் தம்மில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. இதன்காரணமாக சில தொழிற்சங்கங்கள் மக்களிடையே செல் வாக்கிழந்து செல்லாக்காசாகி வருகின்றன. இதனிடையே கம்பெனிகள் வெளியார் உற்பத்தி முறையின் அவசியம் தொடர்பில் அதிகமாக வலியுறுத்தி வருகின்றன.   இலங்கையில் சுமார் நான்கரை இலட்சம் சிறுதோட்ட உரிமையாளர்கள் காணப்படுகின்றனர்.
தென்பகுதியி லேயே இவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின் றது. இந்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றியமைப்பதன் மூலமாக, அம்மக்கள் நிலவுரிமையைப் பெற்றுக் கொள்ள அது உந்துசக்தியாக அமையும் என்றும் கருத்துப்பகிர்வுகள் இருந்து வருகின்றன. இவ்வாறாக சிறுதோட்ட உரிமையாளர்களாக பெருந்தோட்ட மக்களின் கட்டமைப்பு மாற்றம் பெறுகையில், தொழிற்சங்கங்கள் மேலும் வலுவிழக்கும் அபாயநிலை காணப்படு வதாகவும் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனிடையே தோட்டங்களில் நிர்வாகத் தின் கெடுபிடிகள் அண்மைகாலமாக அதிகரித்து வருகின்றன. தொழிலாளர்களின் பல்வேறு நலன்களையும் உறுதிப்படுத்தும் கூட்டு ஒப்பந்த சரத்துக்களை நிர்வாகங்கள் மீறி வருவதாக தொழிலாளர்கள் கண்டனங்கள் பலவற்றையும் முன்வைத்து வருகின்றனர். தோட்ட நிர்வாகத் தினரின் இத்தகைய செயற்பாடுகளைக் கண்டித்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட் டங்களில் ஈடுபட்டதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இந்நிலையில் தோட்ட நிர்வாகங் களின் கெடுபிடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த விடயத்தில் தொழி லாளர்களும் தொழிற் சங்கங்களும் ஒற்றுமையாக செயற்பட்டால் மட்டுமே தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பிலிப் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நியதிமேலும் கடந்த ஆண்டு தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் 1350 ரூபாவாக அதிகரிக்
கப்பட்ட போதிலும் அனைத்து தொழிலாளர் களுக்கும் இச்சம்பள உயர்வு கிடைப்பதில்லை. தோட்ட நிர்வாகங்களின் அளவுக்கு மீறிய கெடுபிடிகளே இதற்கு காரணமாகும். சம்பள உயர்வுக்குப் பிறகு நாளொன்றுக்கு நபர் ஒருவர் 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என்று சில தோட்டங்களில் தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அவ்வாறு 20 கிலோ பறிக்கத் தவறுமிடத்து அவர்களின் வேதனம் 1200 ரூபாவாக குறைக்கப்படுவதாகவும் சுட்டிக் காட்டப்படுகின்றது. இது தொழிலாளர்களின் அடிப்படை உரிமையினை மீறுகின்ற செயற் பாடாகும்.
உலகளாவிய ரீதியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் ஆகும். அந்த தினத்தில் ஓய்வாக இருந்து தமது ஆரோக்கியத்தை பேணிக் கொள்ள வேண்டும் என்பதே விடுமுறையின் நோக்கமாகும். எனவே அந்த தினத்தில் தொழி லாளர்கள் வேலை செய்ய வேண்டுமாயின் அவர்களுக்கு ஒன்றரை நாள் சம்பளம் வழங்
கப்பட வேண்டும் என்பதே சர்வதேச நியதியா கும். ஆனால் இந்த நியதியை தோட்ட நிர்வாகங் கள் பின்பற்றத் தவறி விடுகின்றன.
தொழிலாளர்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதையும் வேலைப்பளு அதிகரிக்கப்
படுவதையும் அவர்களுக்கு அநியாயம் இழைக் கப்படுவதையும் தொடர்ந்து அனுமதிக்க முடியாது. எனவே அந்தந்த தோட்டங்களில் தொழிலாளர்களும் தோட்டக்கமிட்டித் தலை வர்களும் விழிப்புடன் இருந்து அநீதிக்கு எதிராக குரல்கொடுத்து தட்டிக் கேட்க முன்வர வேண்டியது அவசியமாகும் என்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் தெரிவித்துள்ளார்.
இருப்பும் அடையாளமும்எவ்வாறாயினும் தொழிற்சங்கங்களின் சமகால  செயற்பாடுகள் தொடர்பில் மக்களிடையே ஒரு அதிருப்தியான வெளிப்பாடுகளே காணப் படுகின்றன. சில தொழிற்சங்கங்களின் பின்னடைவான செயற்பாடுகள் தொழிற்சங்க கலாசாரத் தின் இருப்பினை கேள்விக்குறியாக்கி வருகின்றன. தொழிற்சங்க கலாசாரம் மற்றும்  தொழிற்சங்கங்கள் மீதான தொழிலாளர்களின் நம்பகத்
தன்மை வலுவிழப்பதற்கும் இது வலுச்சேர்ப்ப தாக உள்ளது.
தொழிற்சங்கவாதிகள் ஒருவருக் கொருவர் சேறுபூசிக் கொள்ளும் கலாசாரமானது மூன்றாவது தரப்பினர் மலையக மக்களை எள்ளி நகையாடுவதற்கும், உரிமைகள் பறிபோவதற்கும் வாய்ப்பாகின்றது. இதனிடையே தொழிற் சங்கங்களின் இருப்பு தொழிலாளர்களுக்கு பல விதத்திலும் நன்மை பயக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. இதனை கருத்தில் கொண்டு ஐக்கியத்துடன் செயற்பட்டு தொழிற் சங்கங்களின் இருப்பை தக்க வைத்துக் கொள்ள மலையக மக்கள் உறுதிபூண வேண்டும். அரசியல் வாதிகளும் இவ்விடயத்தில் உரிய கவனம் செலுத்துவது அவசியமாகும்.