செயற்படுவோமா?

அமெரிக்க காங்கிரசின் வட கரோலினாவின் சனநாயகக் கட்சி உறுப்பினர் டெபோரா ரொஸ் அவர்கள், 18.05.2021 இல் அமெரிக்க காங்கிரசில் தாக்கல் செய்துள்ள, H.R 413ஆம் இலக்கத் தீர்மானம், ஈழத் தமிழர்கள் உரிமைகள் குறித்த அமெரிக்க கொள்கை உருவாக்கத்தில் வளர்ச்சிகள் ஏற்படுவதற்கான நம்பிக்கை அளிக்கும் அரசியல் செயற்பாடாக அமைந்துள்ளது.

இந்தத் தீர்மானம் இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர்களின் பாரம்பரியத் தாயகம் என ஈழத் தமிழர்களின் இறைமையின் இருப்பையும்,  ஆயுதம் தரித்த சுதந்திரப் போராட்டக் குழுவினர்” என ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் உண்மை நிலையையும் உலகுக்குத் தெளிவாக்கிய அரசியல் ஆவணமாகியுள்ளது.  இவை ஈழத் தமிழர்கள் தங்களின் வெளியக தன்னாட்சியை பெறுவதற்கான அரசியல் வழிகளைப் பலப்படுத்துகின்றன.

ஆயினும் இத்தீர்மானம் அமெரிக்க காங்கிரசிலிலும், செனற்றிலும் நிறைவேற்றப்பட வேண்டிய முன்மொழிவாகவே இன்று உள்ளது. ஆதலால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் அமெரிக்க காங்கிரசின் உறுப்பினர்களிடையிலும், செனற் உறுப்பினர்களிடையிலும் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும்படி ஊக்கப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ளனர். வேண்டுகோள்களை உருவாக்கி, அவற்றில் கையெழுத்திட்டு அமெரிக்க காங்கிரசின் உறுப்பினர்களுக்கும், செனற் உறுப்பினர்களுக்கும், அமெரிக்க ஊடகங்களுக்கும் அனுப்புவதன் மூலமே இதனைச் செய்யலாம்.

வோசிங்டனில் உள்ள சிறீலங்காத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க மூலமாக சிறீலங்கா, அமெரிக்க காங்கிரசின் வெளிவிவகார குழுவின் தலைமைத்துவப் பிரதிநிதியான நியூயோர்க் சனநாயகக் கட்சி உறுப்பினர்  கிரகெரி மீக்ஸ்க்கும், டெக்சாஸ் குடியரசுக் கட்சிச் சபை உறுப்பினரும் முன்வரிசை நிலைப் பிரதிநிதியுமான மைக்கல் மெக்கலு அவர்களுக்கும், 413ஆம் இலக்கத் தீர்மானத்தை சபையில் வாக்கெடுப்புக்கு முன்னெடுக்க வேண்டாம் என கண்டனக் கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளது. அதே நேரத்தில் சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கொழும்பிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதுவரை அழைத்து அரச நிலையில் இத்தீர்மானத்தை விவாதத்திற்கு அனுமதிக்க வேண்டாமெனக் கோரியுள்ளார்.

இந்நிலையில் ஈழத்தமிழர்கள் சனநாயக வழிகளில் எந்த அளவுக்குத் தமக்குச் சாதகமானவற்றை உள்ளடக்கப் போராடப் போகின்றார்கள்? எந்த அளவுக்கு உலக மக்களதும் நாடுகளதும் பலங்களையும், வளங்களையும் பெருக்கிக் கொள்ளப் போகின்றார்கள்? என்பதிலேயே, ஈழத்தமிழர்களின் உரிமைகளை மீள்விக்கும் ஆற்றலாக இன்றைய உலகநிலை மாற்றப்படலாம்.

மேலும், ஐரோப்பிய பாராளுமன்றத்தின் 628 உறுப்பினர்கள் சிறீலங்கா பொருட்களுக்கான ஜி. எஸ் பி பிளஸ் வரிச்சலுகையை சிறீலங்கா பெறுவதற்கான தகுதியைக் கொண்டுள்ளதா என ஆராயுமாறு நிறைவேற்றிய தீர்மானம், ஈழத் தமிழர்கள் மனித உரிமைகள் வழி சிறீலங்காவின் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்னும் பன்முகப் பண்பாட்டை மறுக்கும் நிர்வாக முயற்சிக்கான பலத்த அடியாக அமைந்துள்ளது.

அதே நேரத்தில் இங்கிலாந்தின் கோர்ன்வல் நகரக் கார்பிஸ்பே விடுதியில் இவ்வாரத்தில் இடம்பெற்ற ஜி 7 உச்சிமாநாட்டின் ‘சீனாவின் உலகச் செல்வாக்குக்கு எதிராக உலக நாடுகளின் உட்கட்டுமானங்களுக்கு அதிக செலவுகளைச் செய்தல்’ என்ற பிரகடனம், அமெரிக்கத் தலைமையை முன்னெடுக்கும் மேற்குலகின் புதிய உலக ஒழுங்கு முறையொன்றின் கட்டுமானம், கோவிட் 19இன் பின்னர்  தொடங்கி விட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் ஏற்கனவே சீனாவின் வழி தனது உட்கட்டுமானங்களை நிறுவிக் கொண்டுள்ள சிறீலங்காவினுள் இதனை எவ்வாறு ஜி 7 நாடுகள் முன்னெடுக்கப் போகின்றன என்பதில், ஈழத் தமிழர்கள் அமெரிக்காவுக்கு, இந்தியாவுக்கு அளிக்கக் கூடிய ஒத்துழைப்பே, சிறீலங்காவை இந்நாடுகள் மீளவும் சாராது, தங்கள் உரிமைகளை மீளப் பெறுவதற்கான சாதகமான சூழ்நிலைகளை ஈழத் தமிழர்களுக்குத் தோற்றுவிக்கும்.

இந்தியாவை விலத்தி மற்றைய தெற்காசிய நாடுகளிடம் உதவி பெற்று வளருதல் என்ற தனது திட்டத்தின் ஒரு அங்கமாகவே பங்களாதேசிடம் இருந்து கடன் பெறுவதற்கு கடந்த வாரத்தில் பங்களாதேசின் பிரதம அமைச்சருடன் சிறீலங்கா கொழும்பில் சந்திப்பை மேற்கொண்டது. அத்துடன் தெற்காசிய கட்டமைப்பு ஒன்றை நிறுவி, இந்திய பிராந்திய வல்லாண்மையை முறியடிக்கும் முயற்சி சிறீலங்காவின் இன்றைய இலக்கு என்பதை பொலநறுவையில் சீனாவின் ஆயிரம் கோடி ரூபாவில் நிறுவப்பட்டுள்ள சிறுநீரக நோய்களுக்கான நவீன வைத்தியசாலையைச் சிறீலங்கா தெற்காசிய மக்களுக்கான மருத்துவ சேவை என அதன் தொடக்க விழாவில் பிரகடனப்படுத்தியது. கீரிமலையில் ஈழத்தமிழர்களின் நிலப்பரப்பில் இராணுவ ஆக்கிரமிப்பால் கட்டப்பட்ட அரச அதிபர் மாளிகையைச் சீனாவுக்கு விற்பதற்கான முயற்சிகள் தமிழர் தாயகப் பகுதிகளில் இந்தியாவுக்கு எதிரான ஆற்றல்களை நிறுவுதல் என்ற சிறீலங்காவின் முயற்சியாக உள்ளது.

ஐந்து இலட்சம் வேலையாட்களாக சீனர்களையும், பல கோடி சீன முதலீடுகளையும், படுகடன்களையும்,  சீனத் தொழில்நுட்ப அறிவியல் தளங்களையும் கொண்டுள்ள இன்றைய சிறீலங்காவில் நாட்டுக்குள் நாடு என்ற பொருளாதார உத்தி முறையின் வழி சீனா தனக்கான தளத்தை அமைத்து விட்டது.

இந்நிலையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக நாட்டுக்குள் நாடாக இலங்கைத் தீவில் உள்ள ஈழத்தமிழர்களின் தாயக, தேசிய, தன்னாட்சி உரிமைகளை மீள அமைக்க உதவுதல் என்கிற அரசியல் நடவடிக்கை வழியாகவே புதிய உலக ஒழுங்குமுறையில் அமெரிக்க, இந்திய நலன்கள் இந்துமாகடலைப் பாதுகாப்பான அமைதியாகப் பேணுவதன் வழி பாதுகாக்க முடியும். இதுவே இன்றைய ஈழத் தமிழர்கள் உரிமைகள் குறித்த உலகின் புதிய ஆர்வத்தின் விளக்கமாக அமைகிறது.

இச்சமகால உலக நிகழ்வுகள், உலகத் தமிழர்களுக்கு, ஈழத் தமிழர்களின் உரிமைகளை மீட்பதற்கான சனநாயகப் போராட்டக் களமொன்று உலகளாவிய நிலையில் தோற்றிவிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்த்தி வருகின்றன. ஒன்றுபட்ட முயற்சியின் ஊடாக இதனை எதிர்கொள்ள வேண்டுமென்ற அழைப்பை இவை விடுக்கின்றன. செயற்படுவோமா?

Leave a Reply