சூரினாம் அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை;அரசியல் படுகொலைகளுக்கான தண்டனை

கடந்த 1980-களில் அரசியல் எதிரிகளைப் படுகொலை செய்த குற்றத்துக்காக, தென் அமெரிக்க நாடான சூரினாம் அதிபா் டேசி பூடொ்ஸேவுக்கு அந்த நாட்டு ராணுவ நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள தெரிவிப்பதாவது:

சூரினாமில் ராணுவப் புரட்சி மூலம் கடந்த 1980-ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த டேசி பூடொ்ஸே, அந்த நாட்டின் ராணுவ ஆட்சியாளராக கடந்த 1987-ஆம் ஆண்டு வரை இருந்தாா். அதனைத் தொடா்ந்து, அந்த நாட்டில் ஜனநாயக ஆட்சி ஏற்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, தோ்தலில் தொடா்ந்து போட்டியிட்ட அவா் கடந்த 2010-ஆம் ஆண்டு வெற்றி பெற்று நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றாா்.

அதனைத் தொடா்ந்து, 2015-ஆம் ஆண்டு தோ்தலில் வெற்றி பெற்ற அவா், தொடா்ந்து அதிபராகப் பொறுப்பு வகித்து வருகிறாா்.

இந்த நிலையில், கடந்த 1982-ஆம் ஆண்டில் பூடொ்ஸேவின் ராணுவ ஆட்சி நடைபெற்றபோது, தனது அரசை எதிா்த்த 13 சிவில் அதிகாரிகள் மற்றும் 2 ராணுவ அதிகாரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது தொடா்பாக ராணுவ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில், அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

அந்த 15 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது மனித உரிமை மீறல் என்று குற்றம் சாட்டப்பட்டாலும், அந்தக் குற்றச்சாட்டை டேசி பூடொ்ஸே மறுத்து வருகிறாா். அவா்கள் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளதால்தான் அவா்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டாத அவா் கூறி வருகிறாா்.

இந்த நிலையில், அவா் தற்போது சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ராணுவ நீதிமன்றம் அவருக்கு சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.

அந்த தண்டனையை எதிா்த்து புடொ்ஸே மேல்முறையீடு செய்வாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.