சுவிஸ் வெளியுறவுத்துறையின் பதில் கடிதம்;வெளிப்பட்டு நிற்கும் நீதியை புறந்தள்ளும் சிறிலங்காவுடனான உறவு – அக்கினிப் பறவைகள்

26.09.19 அன்று தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவுநாளன்று அக்கினிப் பறவைகள் அமைப்பினால் ஒரு அடையாள உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது 10 கோரிக்கைகளை முன்வைத்ததோடு, சுவிஸ் அரசின் வெளியுறவுத்துறையின் மத்திய அமைச்சருக்கு  ஒரு கடிதத்தையும் அந்நாளில் அனுப்பியிருந்தது. அக்கடிதத்திற்கான   பதில் 22.10.19 அன்று, அதாவது சுவிஸ் அரசு புலம்பெயர் அமைப்புகளுடன் நடத்திய சர்ச்சைக்குரிய மாநாடு முடிவுற்ற கையோடு, அக்கினிப் பறவைகளின் கைகளுக்குக் கிடைக்கப்பெற்றது.

அரசு சார்பில் எழுதப்பட்ட அந்த பதிலில்

இலங்கையுடனான உறவு, இலங்கை தொடர்பான சுவிஸ் நாட்டின் நலன்கள் மற்றும் இலங்கை தொடர்பான சுவிஸ்நாட்டின் எதிர்காலநடவடிக்கைகள் போன்ற விடயங்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே சுவிஸ் அரசு பல புலம்பெயர் அமைப்புகளை அழைத்து ஒரு சர்ச்சைக்குரிய மாநாட்டை நடத்தியுள்ள நிலையில், அம்மாநாட்டில் புலப்பட்ட சுவிஸ் நாட்டின் அதிகாரத்திமிர், இக்கடிதத்தின் வாயிலாகவும் வெளிப்பட்டுள்ளது.

அக்கினிப் பறவைகள் எழுதிய கடிதத்தில் லெப் கேணல் திலீபன் தொடர்பாகவும், சுவிஸ் அரசினை நோக்கி முன்வைத்த 3 கோரிக்கைளைத்  தமிழ் மக்களின் இன்றைய நிலையுடன் இணைத்து விளங்கப்படுத்தியும், சுவிஸ் அரசின் இலங்கை தொடர்பான நிலைப்பாடு தொடர்பாகவும் எழுதப்பட்டிருந்தது.

குறிப்பாக சுவிஸ் அரசு இலங்கையில் நல்லிணக்கம் போன்ற விடயங்களில் முனைப்புக் காட்டி வரும் வேளையில், தமிழினவழிப்புக்குத் தீர்வினைக் காணாமலும், நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற கட்டமைப்புச்சார் இனவழிப்பினைத் தடுத்து நிறுத்தாமலும், அவ்-வினவழிப்பின் சித்தாந்தமாக விளங்கும் நிர்வாகமயப்படுத்தப்பட்ட மகாவம்சச் சிந்தனையைக் களையாமலும் எவ்வாறு வெறுமனே அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தினூடாக நல்லிணக்கம் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சுவிஸ் அரசிடமிருந்து பதில் வரவில்லை.

அத்தோடு இலங்கையை “உலக விவகாரங்களில் ஒரே அணியில் இணைந்து செயற்படும் சக்தி”யாகக் (Global Partner) கருதியதோடு, எதிர்காலத்திலும் தங்களின் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தாமல் தொடர்ந்தும் முன்னெடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

இத்தருணத்தில், சுவிஸ் நாட்டில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்ட பல தமிழ்த்தரப்புகள், அம்மாநாடு தொடர்பாக எதுவும் தெரிவிக்காமல் இருப்பது வருத்தத்திற்குரியது. ஏனெனில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தமிழ் மக்களிடம் வெளிப்படைத் தன்மையாக நடந்துகொள்ளாமல் இருப்பது, இவ்வமைப்புகள் தமிழ் மக்களிடம் சுவிஸ் அரசு போன்ற தரப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனவா? என்ற கேள்வியை எழுப்புகின்றது.

அக்கினிப் பறவைகள் எழுதிய கடிதத்திற்கு சுவிஸ் அரசிடமிருந்து வந்த பதிலின் தமிழாக்கம் கீழே இணைக்கப்பட்டுள்ளது

26.09.19 அன்று நீங்கள் எழுதிய கடிதம்

அன்புள்ள திருமால்மருகனுக்கு,

26.09.19 அன்று நீங்கள் மத்திய அமைச்சர் Ignazio Cassis அவர்களுக்கு லெப். கேணல் திலீபன் தொடர்பாகவும், தமிழ்மக்கள் தொடர்பாகவும் ஒரு கடிதம் எழுதியிருந்தீர்கள். அதற்கு எமது நன்றிகள். சுவிஸ்நாட்டின் வெளியுறவுத்துறையின் (EDA) ஒரு பகுதியே “மனிதவியற் பாதுகாப்புத்துறை” (AMS) ஆகும். அத்துறையே சுவிஸ்நாட்டின் சமாதானம், மனித உரிமை மற்றும் இடப்பெயர்வு தொடர்பான வெளியுறவு போன்ற அரசியல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பென்பதால் இக்கடிதத்திற்குப் பதிலளிப்பதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.

சுவிஸ் நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில் உலக விவகாரங்களில் ஒரே அணியில் இணைந்து செயற்படும் சக்திகளுடன் நல்லுறவைப் பேண சுவிஸ் முயற்சிக்கும். அந்தவகையிலேதான் இலங்கையுடனான உறவும் அமைகிறது. தொடர்ச்சியான உறவினூடாகவே இலங்கை தொடர்பான சுவிஸ்நாட்டின் நலன்களும், விடயங்களும் பேணப்படலாம்.

இலங்கை தொடர்பான சுவிஸ்நாட்டின் முக்கிய நலன்கள் மனித உரிமை மற்றும் இனக்குழுக்களுக்கிடையிலான நல்லிணக்கம் போன்றனவாகும். இதன் அடிப்படையிலேயே அவ்விடத்தில் சுவிஸின் பணி அமைகிறது. யாழ்ப்பாணத்தில் “மனிதவியற் பாதுகாப்புத்” தொடர்பான பணியகம் ஒன்று சுவிஸ் அரசினால் இயக்கப்படுக்கிறது. அத்துடன் வடமாகாணத்தில் இயங்கிவரும் ஒரேயொரு மேற்குலகநாடு சுவிஸ் மட்டுமேயாகும். அப்பணியகம் யாப்பை மையப்படுத்திய அரசு, அரசியல் யாப்புச்சீர்திருத்தம் மற்றும் இறந்தகாலச் சீர்திருத்தம் போன்ற விடயங்களுக்கு வேலைத்திட்டங்களினூடாக இலங்கைக்கு ஆதரவு வழங்கும்.

இலங்கையில் சமாதானம் மற்றும் மனித உரிமை தொடர்பான அரசியல் நடவடிக்கைகள் சுவிஸ் அரசினால் மட்டுபடுத்தப்படாமல் எதிர்காலத்திலும் மேற்கொள்ளப்படும்.

Brief Antwort 26.09.2019pdf சுவிஸ் வெளியுறவுத்துறையின் பதில் கடிதம்;வெளிப்பட்டு நிற்கும் நீதியை புறந்தள்ளும் சிறிலங்காவுடனான உறவு - அக்கினிப் பறவைகள்