சுதந்திர தமிழீழத்திற்கான சூழ்நிலை உருவாக வேண்டும் – திருமுருகன் காந்தி

407 Views

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி அவர்கள் இலக்கு மின்னிதழிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்

கேள்வி – போர் முடிந்து 12 ஆண்டுகள் கடந்த நிலையில், நினைவுகூரப்படும் இனப் படுகொலை நாளில் தமிழ் மக்கள் மற்றும் உலகத்தவர்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில் –

தமிழினப் படுகொலை நடந்து பன்னிரண்டு ஆண்டுகளை கடந்து கொண்டிருக்கின்றோம். இனப் படுகொலைக்காக இலங்கை அரசின் மீது சர்வதேச அளவிலான சுதந்திரமான விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும். அத்துடன் சுதந்திர தமிழீழத்திற்கான சூழ்நிலை உருவாக வேண்டும் என்ற இரட்டைக் கோரிக்கையோடு தமிழீழம் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக நீதிக்குப் போராடி வருகின்றது. இந்தக் கோரிக்கைகளை வலுப்படுத்துகின்ற விதமாக நாம் வாழுகின்ற நாடெங்கும் இதற்குரிய அழுத்தங்களை, தொடர் போராட்டங்களை, நினைவெழுச்சிக் கூட்டங்களை நாம் நடத்துவது மிக முக்கியமானதாக அமைகிறது.

அந்த வகையில் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் தினத்தன்று உலகெங்கிலும் வாழ்கின்ற தமிழ் சொந்தங்கள், இந்த இனப் படுகொலையை பிற இன மக்களுக்கும், பிற சமூகத்திற்கும் தெரிவிக்கின்ற வகையிலே நினைவுக் கூட்டங்களை அல்லது நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதன் மூலமாக நமது கோரிக்கைகளை நினைவுபடுத்த முடியும்.

அது மட்டுமல்லாமல், இதற்கென்று இந்தியா முழுவதும் இருக்கக் கூடிய பல்வேறு முற்போக்கு ஆற்றல் கொண்ட தொடர்புகளுடன் இருக்கக் கூடியவர்களின் ஆதரவைத் திரட்டுவதும், அதேபோன்று சர்வதேச அளவிலே இதே போன்ற ஆதரவுகளைத் திரட்டுவதுமாக தொடர்ச்சியாக இயங்கினால் மட்டும் தான் இதற்கான ஒரு வலிமையான தளத்தை நாம் அமைக்க முடியும். அத்துடன் இலங்கை அரசை தனிமைப்படுத்த முடியும். இனப்படுகொலை அரசான இலங்கை அரசை அம்பலப்படுத்தி, நமக்கான நீதியை பெறுகின்ற ஒரு உறுதிமொழி ஏற்பாக இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் ஊடாக நாம் உலகிற்கு அறிவிப்போம். சக தமிழர்களுக்கும் இந்த கோரிக்கையின் நியாயங்களை மீண்டும் வலியுறுத்துவோம். நாம் ஒன்றுபட்ட சாதி, கட்சி, மத எல்லைகளைக் கடந்து தமிழினமாக திரண்டெழுவோம். நமது உரிமைகளை வென்றெடுப்போம் என்ற உறுதிமொழியை எடுப்போம்.

Leave a Reply