சீன தேசியக் கொடியை அவமதித்து ஆற்றுக்குள் வீசிய ஹொங்கொங் மக்கள்

731 Views

ஹொங்கொங்கில் அரசிற்கு எதிராக தொடர்ந்து 16ஆவது வாரமாக நடந்து வரும் போராட்டங்களின் போது, சீன தேசியக் கொடி நாசப்படுத்தப்படுத்தப்பட்டதுடன், வணிக வளாகம் ஒன்றும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

சீன தேசியக் கொடி போராட்டக்காரர்களால் அவமானப்படுத்தப்பட்டு, ஆற்றுக்குள் தூக்கி வீசப்படும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

‘ஷா தின்’ எனும் இடத்தில் உள்ள நியூ டவுன் பிளாசா எனும் வணிக வளாகத்தில் நடந்த போராட்டத்தில் நகரும் மின் படிக்கட்டுகள் மற்றும் கண்ணாடித் தடுப்புகள் சேதப்படுத்தப்பட்டன. அந்த வளாகத்தில் இருந்த சீன ஆதரவு வர்த்தக நிறுவனங்களையே பெரும்பாலும் போராட்டக்காரர்கள் இலக்கு வைத்து தாக்கினர்.

‘ஷா தின்’னில் காவல்துறையால் வைக்கப்பட்டிருந்த தடுப்பு ஒன்றுக்கும் தீ வைக்கப்பட்டது.

நடைபாதைகளில் செங்கற்களை பெயர்த்து எடுத்து காவல்துறை மீது வீசிய போராட்டக்காரர்கள் மீது காவல்துறை கண்ணீர் புகை தாக்குதல் நடத்தியது.

போராட்டத்தின் முக்கியமான இடங்களில் ஒன்றான ஹொங்கொங் விமான நிலையத்தை சென்றடைவதைத் தடுக்கும் வகையில் ‘ஷா தின்’னில் இருந்து விமான நிலையம் செல்லும் எக்ஸ்பிரஸ் மெட்ரோ ரயில் தடமும் மூடப்பட்டது.

குற்றம் இழைத்தவர்களை சீனாவிற்கு நாடு கடத்தும் சட்ட வரைபை எதிர்த்தே இப்போராட்டம் தொடங்கியது. எனினும் இது ஹொங்கொங்கின் தன்னாட்சி அதிகாரத்தை பாதித்து, சீன தலையீட்டை அதிகரிக்கச் செய்யும் என்று கருதியே போராட்டங்கள் வெடித்தது.

1898 முதல் பிரிட்டனால் 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்த ஹொங்கொங், 1997இல் சீனாவுடன் இணைந்தது. எனினும் ஒரு நாடு இரு அமைப்பு முறை என்னும் கொள்கையின்படி, சட்டம் இயற்றல், நிர்வாகம் உள்ளிட்டவற்றில் ஹொங்கொங் தன்னாட்சி அதிகாரங்களைப் பெற்றுள்ளது.

இந்தத் தன்னாட்சி உரிமை 2047இல் முடிவிற்கு வரவுள்ளது. எனினும், இது எப்போதும் தொடர வேண்டும் என்றும், ஹொங்கொங் இன்னொரு சீன நகரத்தைப் போல் ஆகிவிடக் கூடாது என்றும் அந்த நகர மக்கள் விரும்புகின்றனர்.

குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை சீனாவிற்கு நாடு கடத்தினால், அது ஹொங்கொங்கின் தன்னாட்சி உரிமைகளை பாதிக்கும் என்றும் சீனாவின் தலையீட்டை அதிகரிக்கச் செய்யும் என்றும் அந்த மசோதா ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட போது விமர்சனங்கள் எழுந்தன.

சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள ஹொங்கொங்கைச் சேர்ந்தவர்களை சட்ட ரீதியாக அச்சுறுத்தவும் அந்தச் சட்டம் பயன்படுத்தப்படலாம் என்றும் ஜனநாயகத்திற்கு ஆதரவானவர்கள் கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.

அரசியல் எதிர்க் கருத்து உடையவர்களுக்கு எதிரானது என கருதப்படும் இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலட்சக்கணக்கான மக்கள் ஹொங்கொங்கில் போராடினர்.

பெரிய அளவில் நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து இந்தச் சட்ட மசோதாவை இடைநிறுத்தி வைப்பதாக அறிவித்த ஹொங்கொங் நிர்வாகத் தலைவர் கேரி லாம், அதை அறிமுகம் செய்ததற்கு மன்னிப்பும் கோரினார்.

போராட்டங்கள் தொடர்ந்ததால் அந்தச் சட்ட வரைபை விலக்கிக் கொள்வதாக கேரி லாம் அறிவித்த பின்னரும் ஜனநாயகத்திற்கு ஆதரவான போராட்டங்கள் தொடர்கின்றன. கேரி லாம் சீன அரசிற்கு ஆதரவான நிலை உடையவராக பார்க்கப்படுகின்றார்.

போராட்டக்காரர்கள் காவல் துறையால் தாக்கப்பட்டது குறித்த தன்னிச்சையான விசாரணை மற்றும் போராட்டங்களில் குற்றப் பின்னணி உடையவர்கள் ஊடுருவி போராடியவர்களைத் தாக்கியதற்கு எதிரான நடவடிக்கை ஆகியன இப்போது போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

 

 

 

Leave a Reply