சீனா-இரசியா எல்லா வகையிலும் ஒத்துழைப்பது அவசியம் – வேல் தர்மா

397 Views

2019 சூன் 5-ம் திகதி இரசியாவின் சென். பீற்றர்ஸ்பேர்க்கில் நடந்த பன்னாட்டு பொருளாதார மாநாட்டிற்கு சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆயிரம் அரசுறவியலாளர்கள் புடைசூழ கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டார். அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, வர்த்தகப் போர் மற்றும் படைத்துறை நெருக்குவாரங்கள் போன்றவற்றை இரசியாவும் சீனாவும் எதிர் கொண்டிருக்கும் வேளையில் இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றதாக அமைந்திருந்தது. 2014 இரசியா கிறிமியாவைத் தன்னுடன் இணைத்த பின்னர் மேற்கு நாடுகள் இரசியா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையை எதிர் கொள்ள இரசியா சீனாவுடன் தனது வர்த்தகத்தையும் படைத்துறை ஒத்துழைப்பையும் அதிகரித்ததில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையில் உறவு மிக நெருக்கமாகிக் கொண்டிருக்கின்றது.

அமெரிக்கா பங்குபற்றாமல் தவிர்த்த சென். பீற்றர்ஸ்பேர்க் மாநாட்டில் உரையாற்றிய இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் அமெரிக்கா சீனா மீது தொடுத்துள்ள வர்த்தகப் போரும் சீனத் தொடர்பாடல் நிறுவனமான உவாவே மீது அது விதிக்கும் தடைகளும் அமெரிக்காவின் உலகப் பொருளாதாரத்தின் மீதான ஆதிக்கத்தை நிலை நிறுத்தவே செய்யப்படுகின்றன என்றார். மேலும் அவர் அமெரிக்காவின் அந்த வலிய நகர்வுகள் உலக வர்த்தகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றன என்றார். ஜீ ஜின்பிங்கும் தன் பங்கிற்கு அமெரிக்காவின் தனியாதிக்கத்தையும் உலகமயமாதலுக்கு எதிரான அதன் செயற்பாடுகளையும் தாக்கியதுடன் இரசியா ஒரே மாதிரியான மனப்பாங்கு கொண்ட நம்பிக்கையான பங்காளி என்றார்.Huawei Trump சீனா-இரசியா எல்லா வகையிலும் ஒத்துழைப்பது அவசியம் - வேல் தர்மா

2016-ம் ஆண்டு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடந்த நோபல் பரிசு மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்காவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சீன இரசிய கேந்திரோபாய உறவையிட்டு வாஷிங்டன் கவனமாக இருக்க வேண்டும் என்றார். மேலும் அவர் வளரும் அந்த உறவைவிட ஆபத்தான ஒன்று அமெரிக்காவிற்கு இருக்காது என்றார்.

சீன அதிபர் ஜீ ஜின்பிங் அதிகப் பயணங்கள் மேற்கொண்ட தலைநகராக மொஸ்க்கொ இருக்கின்றது. இரசிய அதிபரும் சீன அதிபரும் 27 தடவைகளுக்கு மேல் சந்தித்து உரையாடியுள்ளனர்.

2016-ம் ஆண்டு 69.6பில்லியன் டொலர்களாக இருந்த இரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகம் 2017-ம் ஆண்டு 84.2 பில்லியனாகி 2018-ம் ஆண்டு 107.1பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. 2016-ம் ஆண்டு சீனாவிற்கு அதிக அளவிலான மசகு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாக இரசியா உருவெடுத்தது. 2019- ஆண்டு முதல் 2029-ம் ஆண்டு வரை 1.3 ரில்லியன் கன அடி எரிவாயுவை சீனாவிற்கு விற்பனை செய்யும் ஒப்பந்தத்தை இரசியா கைச்சாத்திட்டுள்ளது.

இரசிய மக்களிடையே எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் 54 விழுக்காட்டினர் அமெரிக்காவை வெறுக்கின்றனர். ஆனால் 12விழுக்காட்டினர் மட்டுமே சீனாவை வெறுக்கின்றனர். துருவ ஆதிக்கம் என்பது எத்தனை நாடுகள் உலகெங்கும் தமது படைத்துறை மற்றும் பொருளாதார வலிமையால் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது சம்பந்தமானது. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வல்லரசு நாடுகளின் ஆதிக்கத்தின் கீழ் உலகம் இருப்பதை பல்துருவ உலகம் என்பர். 1815இல் இருந்து 1945-ம் ஆண்டு வரை உலகம் பல்துருவ ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அந்தக் கால கட்டத்தில் இருந்த வல்லரசு நாடுகளிடையேயான நட்புறவை பொறுத்து ஆதிக்கச் சமநிலையும் மாறிக் கொண்டே இருந்தது. நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து பிரித்தானியா, இரசியா, பிரசியா, பிரான்ஸ், டென்மார்க்-ஹங்கேரி ஆகியவை உலக வல்லரசுகளாக இருந்தன. கிறிமியாவை துருக்கியிடமிருந்து மீளப் பெற எடுத்த முயற்சி அப்போது இருந்த பல் துருவ உலகச் சமநிலையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. பின்னர் ஹிட்லர் தலைமையில் ஜேர்மனி மற்ற வல்லரசு நாடுகளை ஆக்கிரமிக்க எடுத்த முயற்ச்சியால் உருவான இரண்டாம் உலகப் போர் பல் துருவ உலக ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் தமது உலக ஆதிக்கத்தை வளர்த்துக் கொள்வதில் போட்டியிட்டன. அவை இரண்டின் பின்னால் பல நாடுகள் ஆதரவாக இணைந்து கொண்டன. அது இரு துருவ உலகத்தை உருவாக்கியது.

1991 இல் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னர் அமெரிக்காவின் ஆதிக்கத்தில் உலகம் கொண்டு வரப்பட்டு ஒரு துருவ உலகம் உருவானது. அதன் பின்னர் சீனா சோவியத் ஒன்றியத்திற்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தனக்கு ஏற்படக்கூடாது என்பதை உணர்ந்து தனது பொருளாதாரக் கொள்கையை மாற்றிக் கொண்டது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக இரசியா தனது படைத்துறை வலிமையை அமெரிக்காவிற்கு சவால் விடக்கூடிய வகையில் வளர்த்து வருகின்றது. 2020-ம் ஆண்டு இரசியாவை உலகின் முன்னணிப் படைத்துறை நாடாக மாற்ற புட்டீனும் 2030-ம் ஆண்டு அதே நிலைய சீனாவை அடைய வைக்க ஜின்பிங்கும் உறுதி பூண்டுள்ளனர். புட்டீனின் திட்டம் பெரிதும் நிறைவேறிவிட்டது என்பதை அவர் உக்ரேனிலும் சிரியாவிலும் மேற்கொண்ட நகர்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.hqdefault சீனா-இரசியா எல்லா வகையிலும் ஒத்துழைப்பது அவசியம் - வேல் தர்மா

இரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவில் தடைக்கற்களாக இருப்பவற்றில் முக்கியமானது மத்திய ஆசிய நாடுகளாகும். முன்னாள் சோவியத்ஒன்றிய நாடுகளாக இருந்த மத்திய ஆசிய நாடுகளில் நிலப்பரப்பில் பெரிய கஜகஸ்த்தான் எரிபொருள் யூரேனியம், தங்கம் உட்பட பல கனிம வளங்களைக் கோண்டது. உஸ்பெக்கிஸ்த்தானிலும் தேர்க்மெனிஸ்த்தானிலும் எரிபொருள் நிறைய இருக்கின்றது. தஜிகிஸ்த்தானிலும் கிரிகிஸ்த்தானிலும் உள்ள மலைகள் தரும் நீரால் விவசாயம் செழிக்கும். பெருமளவு பருத்தி அந்த இருநாடுகளிலும் பயிரடப்படுகின்றன.

வேலை என்றால் இரசியாவிற்குச் செல்லும் மத்திய ஆசிய நாட்டுமக்கள் இரசியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த ஐந்து மத்திய ஆசிய நாடுகளும் வடக்கிலும் மேற்கிலும் இரசியாவும் கிழக்கில் சீனாவும் தெற்கில் பாக்கிஸ்த்தான், ஈரான், ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகளும சூழ இருக்கின்றன. சீனா தனது Belt & Road Initiative என்னும் புதிய பட்டுப்பாதை திட்டத்தில் இந்த நாடுகளை இணைத்து அவற்றின் மூலவளங்களை சுரண்டுவதும் அவற்றில் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதையும் இரசியா கரிசனையுடன் பார்க்கின்றது. ஆனால் சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டத்தில் இரசியா முழுமனதுடன் ஒத்துழைக்கின்றது. 2017 சூலை மாதம் இரசிய சீனக் கடற்படைகள் இணைந்து வரலாற்றில் முதற் தடவையாக ஒரு போர்ப்பயிற்சியைச் செய்தன.2018 04 13 44139 1523602428. large சீனா-இரசியா எல்லா வகையிலும் ஒத்துழைப்பது அவசியம் - வேல் தர்மா

இரசியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் சீனாவால் இரசியாவிற்கு ஏற்படும் ஆபத்தைச் சமாளிக்க சோவியத் ஒன்றிய காலத்தில் இருந்தே கிழக்கு (Vostok) என்னும் பெயரில் செய்து வந்த போர்ப்பயிற்சியில் 2018-ம் ஆண்டு செப்டம்பரில் சீனப்படைகளையும் இணைத்துக் கொள்ளப்படும் அளவிற்கு சீனாவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான உறவு சுமூகமடைந்துள்ளது.

அமெரிக்காவின் படை வலிமை முக்கியமாக கடற்படை வலிமை, உலகெங்கும் அமெரிக்கா வைத்துள்ள படைத் தளங்கள், அமெரிக்காவிற்கு ஜப்பான் முதல் பிரித்தானியா வரையும் நியூசிலாந்து முதல் பெரு வரையும் இருக்கு நட்பு நாடுகளின் கூட்டம், பல்வேறு நாடுகளுடன் அமெரிக்கா செய்துள்ள படைத்துறை மற்றும் பொருளாதார உடன்படிக்கைகள், உலக நாணயப் பரிமாற்றத்தில் அமெரிக்கா செலுத்தும் ஆதிக்கம், அமெரிக்காவின் தொழில்நுட்ப மேம்பாடு போன்றவற்றை தகர்க்காமல் அல்லது அவற்றிற்கு இணையான நிலையை தாமும் எய்தாமல் இரசியாவோ சீனாவோ இரு துருவ அல்லது பல் துருவ ஆதிக்க நிலையை உருவாக்க முடியாது. அதனால் இரு நாடுகளும் உலக அரங்கில் எல்லா வகையிலும் ஒத்துழைப்பை அதிகரிப்பது தவிர்க்க முடியாத ஒன்று.

Leave a Reply