சீனாவின் சுயாட்சி பிரதேசம் உருவாக இலங்கை நாடாளுமன்றம் ஒப்புதல்.. இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தா?

கொழும்பு துறைமுக நகரம் என்ற பெயரில் சீனாவின் சுயாட்சி பிரதேசம் உருவாக இலங்கை நாடாளுமன்றமும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக அமையும் என கூறப்படுகிறது.

ஆண்டுகளாக பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளை செய்துவரும் சீனா,  கொழும்பு துறைமுகத்தை ஒட்டி, 10, 228 கோடி ரூபாய் மதிப்பில் நகரம் ஒன்றை உருவாக்கியுள்ளது.  இந்த துறைமுக நகரத்தின் கட்டுப்பாட்டை முழுமையாக சீனாவே வைத்திருக்கும் என்பதால், இங்கு சீனா, ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மூன்று மொழிகள் மட்டுமே பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதற்கான மசோதாவுக்கு, இலங்கையில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி, அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில், சீனாவின் சுயாட்சி பிரதேசத்தால் இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இலங்கை நிலப்பரப்பில் முக்கியத்துவம் வாய்ந்த திரிகோணமலை யார் வசம் இருக்கிறதோ, அந்த நாடுதான் தெற்காசியாவில் ஆதிக்கம் செலுத்தும் வல்லமை கொண்டது என்பது நிதர்சனம்.

அந்த வகையில், தெற்காசியாவில் இந்தியாவை மீறி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த துடிக்கும் சீனா, கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை தனது எல்லை விஸ்தரிப்பு திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் எனக் கூறும் அரசியல் வல்லுநர்கள், இந்தியாவின் எல்லை பாதுகாப்புக்கு லடாக், டோக்லாம், அருணாச்சல பிரதேசங்களை விட  மிக மிக மோசமான அச்சுறுத்தல் உள்ள பிரதேசமாக வங்க கடல் உருவெடுத்திருப்பதாகவும் எச்சரிக்கின்றனர்.

எனவே, தேசப் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இன்றி இந்தியா செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

நன்றி – News 18 Tamil