சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது முறையாகவும் காவல்துறையினர் விசாரணை

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் மூன்று காவல்துறை பிரிவுகளின் காவல்துறையினர் இன்றையதினம்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, வவுனியா ஆகிய  காவல்துறை பிரிவுகளின் காவல்துறையினர் இவ்வாறு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சிவசக்தி ஆனந்தனின் வவுனியாவில் உள்ள அலுவலகத்திற்குச் காலையில் சென்ற வவுனியா  காவல்துறை  பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் பங்கெடுத்தமை தொடர்பில் கேள்விகளைத் தொடுத்ததோடு நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாகவும் சுட்டிக்காட்டினர்.

இதன்போது, தனது பெயர் குறிப்பிட்டு எவ்விதமான நீதிமன்ற உத்தரவுகள் வழங்கப்படவில்லை என்றும், தாம் நீதிமன்றத்தின் கட்டளைகளை மீறி நடக்கவில்லை என்றும் மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை கோரி நிற்கையில் அரசியல் கட்சியின் பிரதிநிதியாக மக்களுடன் மக்களாக போராட்டத்தில் பங்கேற்றதாகவும் சிவசக்தி ஆனந்தன் பதிலளித்துள்ளார்.

WhatsApp Image 2021 03 02 at 1.08.24 PM 1 சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது முறையாகவும் காவல்துறையினர் விசாரணை

அத்துடன், ஒன்றுக்கு மூன்று தடவைகள் இவ்வாறு விசாரணை என்ற பெயரில் தான் உள்ளிட்ட குறிப்பிட்ட ஒரு சில அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை இலக்குவைத்து  காவல்துறையினர்  செயற்படுவது தொடர்பிலும் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதன்போது ‘மேலிடத்து உத்தரவு’ என்று காவல்துறையினர் பதிலளித்ததோடு அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களிடத்தில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பதிலளித்துள்ளனர்.

இதேவேளை, வவுனியா காவல்துறையினரின் ஒருமணிநேர விசாரணைகளைத் தொடர்ந்து பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணி தொடர்பில் ஒட்டிசுட்டான் காவல்துறையினரும், புதுக்குடியிருப்புகாவல்துறையினரும் சிவசக்தி ஆனந்தனிடத்தில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்படத்தக்கது.

Leave a Reply