சிறைச்சாலைக்குள் ஹெரோயின் கொண்டு சென்ற உத்தியோகத்தர் கைது

மட்டக்களப்பு சிறைச்சாலைக்குள் ஹெரோயின் போதைப் பொருளை கொண்டு செல்ல முற்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர், 35 மில்லி கிராம் போதைப் பொருளுடன் நேற்று (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறைச்சாலையில் கடமைபுரியும் சிறைச்சாலை உத்தியோகத்தர் அம்பாறை, அக்கரைப்பற்று நீதிமன்றத்திற்கு வழக்கிற்கான சிறைக்கைதிகளை பஸ் வண்டியில் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று பின்னர் சிறைச்சாலைக்குள் நேற்று திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் வெளியில் சென்று சிறைச்சாலைக்குள் இரவு திரும்பியுள்ள உத்தியோகத்தர்களை, சிறைச்சாலை அதிகாரியினால் சோதனை மேற்கொண்ட போது, அதில் ஒருவரிடம் 35 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளை அவர் தன்வசம் மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து குறித்த நபரை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் பொலன்னறுவையைச் சேர்ந்த 34 வயதுடையவர் எனவும், இவரை நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply