சன்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்தா விக்கிரமதுங்காவின் கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த சிறீலங்கா குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரி நிசாந்தா சில்வா தனது குடும்பத்துடன் சிறீலங்காவை விட்டு நேற்று (24) வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
தற்போதைய சிறீலங்கா அரச தலைவர் கோத்தபயா ராஜபக்சா பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட லசந்தா விக்கிரமதுங்காவின் படுகொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த சிறீலங்கா குற்றப்புலனாய்வுத்துறை திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியான நிசாந்தா தனது குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.
அவர் அங்கிருந்து வேறு நாடுகளில் அரசியல் புகலிடத் தஞ்சம் கோரும் நடவவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் மைத்திரிபால சிறீசேன இவரை நீர்கொழும்பு பிரிவுக்கு இடமாற்றம் செய்தபோதும், அனைத்துலக மன்னிப்புச் சபை உள்ளிட்ட பல மனித உரிமை அமைப்புக்கள் தமது எதிர்ப்புக்களை தெரிவித்ததால் இடமாற்றம் கைவிடப்பட்டிருந்தது.
லசந்தா விக்கிரமதுங்கா கொலை, ஊடகவியலாளர் கெயித் நொயர் மீதான தாக்குதல், கொழும்பில் சிறீலங்கா கடற்படையினரால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 11 தமிழ் இளைஞர்கள் தொடர்பான விசாரணை, உள்ளிட்ட பல விசாரணைகளில் நிசந்தா ஈடுபட்டிருந்தார்.
சிறீலங்கா குற்றப்புலனாய்வுத் துறை பணிப்பாளர் சானி அபயசேகரா அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.