சீனாவுடன் அண்மையில் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டுக்கு அமைய, இலங்கை இராணுவத்தின் ஒரு குழுவினர், சிறப்புப் பயிற்சிக்காக அடுத்தவாரம் சீன, தலைநகர் பீஜிங்கிற்கு செல்லவுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டு, அந்நாட்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் பாதுகாப்பு விவாகரங்கள் தொடர்பில் விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அதற்கிணங்க, பாதுகாப்பு தொடர்பில் இரண்டு நாடுகளுக்குமிடையில் பரஸ்பர ஒத்துழைப்புக்களை வழங்குவது தொடர்பிலான பாதுகாப்பு ஒப்பந்தமொன்றும் கடந்த 14 ஆம் திகதி, இரண்டு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டது.
அதற்கமைய இலங்கை இராணுவத்தின் ஒரு குழுவினர் அடுத்தவாரம் சீனாவுக்கு சென்று விசேட பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மேற்கொள்ளப்படும், சீனாவின் திட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்ட விடயங்களை கொண்டதாக இந்தப் பயிற்சிகள் அமைந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சீன தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர், இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஆற்றலைக் கட்டியெழுப்பும் உதவிகளையும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கருவிகளையும் இதன்போது சீனா வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க இலங்கை இராணுவத்தினரின் முதல் தொகுதியினருக்கான பயிற்சித் திட்டம் அடுத்தவாரம் ஆரம்பமாகும் என்றும் அவர் கூறினார்.
அத்தோடு, சீனா தமது இராணுவத்தினரை இலங்கைக்குள் அனுப்பாது என்றும் அதற்குப் பதிலாக இலங்கை இராணுவத்தினரின் ஆற்றலை கட்டியெழுப்பவுள்ளோம் எனவும் குறித்த பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.