சிரிய இராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை

சிரிய அதிபர் ஆசாத்திற்கு துணையாக இருக்கும் இராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “10 ஆண்டுகளாகத் தொடரும் சிரிய உள்நாட்டுப் போரைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஆசாத் அரசு ஈடுபட வேண்டும். இல்லையெனில், பொருளாதாரத் தடைகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும், சிரிய அதிபர் ஆசாத்திற்கு துணையாக இருப்பவர்கள் மீது தொடர்ந்து பொருளாதாரத்தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரிய அதிபர் ஆசாத்திற்கும், ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக நடந்து வரும் சண்டை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. ஆசாத்திற்கு ரஷ்யா ஆதரவளித்து வருகின்றது. கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கின்றது.

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரச கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன. ஆனால் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் இடங்களில் அவ்வப்போது சண்டைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த உள்நாட்டுப் போரினால், இலட்சக் கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இலட்சக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரியப் போரில் ஆசாத்தின் அரசுப் படைகள் அப்பாவிப் பொது மக்களைக் கொன்று குவித்ததாக அமெரிக்கா குற்றம் சுமத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply