பத்துவருடங்களுக்கு மேலாக மேற்குலகத்தின் தடையினால் நாட்டைவிட்டு வெளியேறாது இருந்த சிரியாவின் அதிபர் இந்தவாரம் சீனாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (22) சீன அதிபரை சந்தித்த சிரிய அதிபர் பசார் அல் அசாட் இரு தரப்பு உறவுகள் தொடர்பில் பேச்சுக்களை மேற்கொண்டதுடன், சிரியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா விரும்புவதாக சீனா அதிபர் தெரிவித்துள்ளார்.
சிரியாவின் மீள் கட்டுமானத்திற்கு சீனா உதவுவதுடன், வெளிநாடுகளின் தலையீடுகள், ஒருதலைப்பட்சமான அழுத்தங்கள் போன்றவற்றில் இருந்தும் சிரியாவை பாதுகாப்பதற்கு சீனா உதவும் என சீன அதிபர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் மூலம் சிரியாவுக்கான உதவிகளை மேற்கொள்ள சீனா திட்டமிட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு ஆரம்பமாகிய அரபு உலகத்தின் வசந்தம் என்ற நடவடிக்கையை தொடர்ந்து சிரியாவில் இடம்பெற்ற மோதல்களில் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதுடன், சிரியாவும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. பல மில்லியன் மக்களும் இடம்பெயர்ந்திருந்தனர். ஆனால் இழந்த தனது பகுதிகளில் கணிசமான பகுதிகளை மீண்டும் கைப்பற்றிய சிரியா தற்போது அனைத்துலக தொடர்புகளையும் ஏற்படுத்தி வருகின்றது.