கலைப் படைப்புக்கள், மக்களை போரட்டத்தின்பால் ஒருங்கிணைக்க வேண்டும் என்பது எம் தலைவரின் சிந்தனை. எம் தேச விடுதலைக்கு கலைஞர்களாகிய நாம் எம் படைப்புக்கள் மூலம் உற்சாகமூட்டுவோம். அதுவே கலைஞர்கள், படைப்பாளிகளின் மகத்தான பணியுமாகும்.
நாம் எமது படைப்புக்கள் மூலம் இன்னும் எம் தேசம் எங்கும் ஒலித்துகொண்டிருக்கும் மாண்ட ஆத்மாக்களின் சுதந்திர தாகத்தை எம் அடுத்த தலைமுறைக்கு கடத்தவே முயல்கின்றோம். இந்த மண்ணின் செடிகளுக்கான இளங்கனவுகளை பிரசவம் செய்யவே துணிகிறோம்.
ஒரு போராளியின் சினமாக, இனத்தின் சினமாக பல்வேறு நெருக்கடிகள், போராட்டங்களை கடந்து, இரத்தமும் சதையுமான கதையை பெரும் உழைப்பின் மத்தியில் சினம்கொள் திரைப்படமாக மக்களிடம் கையளிக்கின்றோம். சினம்கொள் இது வலி கடந்த வலிய இனத்தின் போராடு காதை.
எந்த வித்திலும் சமரசமற்ற இந்த திரைப்படைப்பு அழகியல் குறையாத திரைக்காவியமாக உங்கள் மனங்களை நிறைக்கும். முதன் முதலில் இந்திய தணிக்கை துறையால் “யு” திரைச்சான்றிதழைப் பெற்றதொரு திரைப்படமாகவும் பெருமையை பெறுகின்றது.
உண்மையில், சினம்கொள் ஒரு வரலாற்றை படைப்பதற்குக் காத்திருக்கின்றது. ஈழ வரலாற்றில், ஏன் இலங்கை வரலாற்றில், முதன்முதலாக ஒரு திரைப்படம் ஒரே காலத்தில் பல நாடுகளில் பல திரையரங்குகளில் வெளியானதே இல்லை. அச்சாதனையை ஒரு சிங்கள படம்கூட செய்யவில்லை. ஆனால் ஈழ தேசத்தின் – ஈழ சினிமாவாக சினம்கொள் அந்த சாதனையை படைக்க தயாராகியுள்ளது என்பதை நிமிர்வோடும் மகிழ்வோடும் அறிய தருகிறோம்.
புலம்பெயர் நாடுகளில் இடம்பெற்ற சிறப்பு திரையிடல்கள், இணையத்தில் வெளியான முன்னோட்டங்கள் மற்றும் பாடல்களுக்கு கிடைத்த மகத்தான வரவேற்பை பொதுதிரையிடல்களிலும் எட்ட வேண்டும். அது சினம்கொள் திரைப்படத்தின் வெற்றி மாத்திரமல்ல. ஈழத் திரையின் வெற்றியுமாகும்.
‘பாதையை தேடாதே உருவாக்கு’ என்ற பொன்மொழிக்கு ஏற்ப நாம் நமக்கான ஈழ சினிமாப் பாதையை உருவாக்கி ஜனவரி 3இல் கையளிக்கிறோம். பாதையின் இரு பக்கமும் கூடி நின்று எம்மை ஆதரிக்க வேண்டியது மக்களாகிய உங்கள் கைகளில் தான் இருக்கின்றது.
தாயகத்தில், புலத்தில் வாழும் கலைஞர்களாகிய நாம் களத்தில் இறங்கி சுதந்திர பயிர் விதைக்க தொடங்கிவிட்டோம், வளர்ச்சி என்னும் நீர் பாய்ச்சுவதற்காய் மக்களாகிய நீங்கள் திரையரங்கு நேக்கி விரைந்து வாருங்கள், உங்களுக்காய் இன்னும் பல படைப்புக்கள் வெளிவரக் காத்திருக்கின்றன.
அரசியலில், பொருளாதரத்தில், கல்வியில், கலையில் நாம் பலம் அடைவதன் மூலமே எம் சுதந்திர தேசத்தை கட்டி எழுப்ப முடியும்.
ஈழம் காத்திருக்கிறது விடுதலை தாகத்தோடு.
சினம்கொள்; ஈழத்தின் வலியை மாத்திரம் பேசவில்லை, வலிமையையும் பேசும் ஒரு திரைப்படைப்பு.
வாருங்கள் ஈழத் திரையின் காட்சியில் சந்திப்போம்…
-ரஞ்சித் ஜோசப்
இயக்குனர்- சினம்கொள்.