சிங்கள குடியேற்றங்களை ஊக்குவிக்கவே கோட்டபாய வடக்கிற்கு பயணம் -ஊடகங்களுக்கும் அனுமதி மறுப்பு

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச வடக்கு மாகாணத்திற்கான முதல்  பயணமாக  வவுனியாவில் உள்ள சிங்கள குடியேற்ற கிராமமான கலாபோகஸ்வெவ பகுதிக்கு  பயணம் செய்தார்.

17ஆவது கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்வு வடக்கு மாகாணத்திலே முதன்முறையாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையில் நேற்று இடம்பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட கோட்டபாய ராஜபக்ச கலாபோகஸ்வெவ  பகுதி  மக்களின் குறைநிறைகள் தொடர்பாக கேட்டறிந்து,  கிராமிய அபிவிருத்தி தொடர்பிலும் கேட்டறிந்துள்ளார் என தெரிய வருகின்றது.

முதன்முறையாக வடக்கு  மாகாணத்திற்கு பயணம் செய்த  கோட்டபாய, போரினால்   பாதிக்கப்பட்ட  தமிழ் கிராமங்களுக்கு செல்லவில்லை.  ஆனால் சிங்களக் கிராமம் ஒன்றுக்கு  சென்றிருப்பது, தமிழ் மக்கள் மீதான அவருடைய வெறுப்பையே காட்டுகின்றது.

போரின் பின்னர், தமிழ் மக்களின் காணிகளை பௌத்த குருமார்கள் மற்றும் இராணுவம், காவல்துறையினரின் துணையுடன்  சிங்கள மக்கள் அபகரித்து வருகின்றனர்.

இவ்வாறு அபகரித்து உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்ற கிராமமே வவுனியா  கலாபோகஸ்வெவ. இது இவ்வாறிருக்க,   கலாபோகஸ்வெவ சிங்கள கிராமத்திற்கு கோட்டபாய  பயணம் செய்தமை குறித்த   எவ்வித  தகவல்களும் வெளியில் வந்துவிடக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு  ஊடகவியலாளர்களுக்கு அனுமதிகள் மறுக்கப்பட்டுள்ளன.

சிங்கள குடியேற்றங்களை தமிழர் தாயகத்தில் ஊக்குவிப்பதற்கும், அவ்வாறு குடியேறியவர்களுக்கு அரசின் உதவி ஒத்தாசைகளை வழங்குவதற்காகவுமே கோட்டபாயவின் பயணத்தின் நோக்கம் அமைந்துள்ளது.   இதன் ஊடாக தமிழ் மக்கள் கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து துரும்பும் எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்க்கவும் கூடாது என்பதனையே உணர்த்தி நிற்கின்றது.

Leave a Reply