சிறீலங்கா படையினர் வருடம்தோறும் மேற்கொண்டுவரும் நீர்க்காகம் என்ற முப்படையினரின் ஒத்திகை நடைவடிக்கையில் பங்கெடுப்பதற்காக பாகிஸ்த்தான் இராணுவத்தின் சிறப்பு படையணியின் மேஜர் ஜெனரல் தர அதிகாரியான கசெய்ன் மும்தாஸ் சிறீலங்காவுக்கு நேற்று (22) வந்துள்ளதாக சிறீலங்கா படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறீலங்காவில் போர் நிறைவடைந்த பின்னர் தனது சிங்களப் படையினரின் மேலான்மையை பிராந்தியத்தில் வெளிப்படுத்துவதற்காக சிறீலங்கா அரசினால் ஆரம்பிக்கப்பட்டதே இந்த நீர்க்காகம் என்ற படை ஒத்திகையாகும்.
சிறீலங்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனாவும், இந்தியாவுமே பின்னின்று ஆதரவு கொடுக்கின்றன. இந்த நிலையில் அதன் 10 ஆவது ஆண்டு பயிற்சி ஒத்திகையில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்த்தான் ஜெனரல் சிறீலங்கா வந்துள்ளார்.
சிறீலங்கா அரச படையினரின் இந்த ஒத்திகையில் 2400 இராணுவத்தினர், 400 கடற்படையினர், 200 வான்படையினர் ஆகியோர் பங்கு பற்றுவதுடன், இந்தியா, சீனா, பாகிஸ்த்தான், மலேசியா, இந்தோனேசியா, நைஜீரியா, சம்பியா, ரஸ்யா, மாலைதீவு, பங்களாதேஸ், நேபாளம் ஆகிய நாடுகளின் படை அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.
தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசின் போருக்கு ஆதரவுகளை வழங்கி சிறீலங்கா அரசின் இனப்படுகொலைக்கு துணைநின்ற உலக நாடுகளில் 10 மேற்பட்ட நாடுகள் இதில் பார்வையாளர்களாக பங்கு பற்றியுள்ளன.
ஆனால் இனப்படுகொலைக்கு ஆதரவு வழங்கிய மேற்குலக நாடுகள் தற்போது இந்த நடைவடிக்கையில் கலந்துகொள்ளாதது குறிப்பிடத்தக்கது.