சிங்களச் சிறைக்குள் சிதையுறும் வாழ்வு;ஒரு அரசியல் கைதியின் உள்ளக் குமுறல்

‘கடந்த 6 மாதங்களுக்கு முன்னரும்கூட,14 ஆண்டுகள் அரசியல் கைதியாக இருந்து உயிரிழந்த ஒருவருக்கு இரங்கல் எழுதிய இந்தக் கட்டுரையாளன் இதற்கு 11 அசியல் கைதிகளின் அகாலச் சாவுகளைக் கண்டுவிட்டான்…’

அன்னை, தந்தையுடன் ஆசைத் தங்கையின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கிறான். கஸ்டப்பட்டு உழைத்து குடும்பத்தின் பாமரத்தனத்தைப் போக்கி, சிறியதொரு வீட்டை அழகுறக் கட்டி அன்புத் தங்கையை அறிவுயரப் படிப்பித்து இஷ்டமாக வாழ வேண்டுமென்று கனவு கண்டான் மகேந்திரன்.

1993.09.27 அன்று அதிகாலை முறக்கொட்டாஞ்சேனைக் கிராமம் முப்படைகளின் சுற்றிவளைப்பிற்குள் சிக்கிக் கொள்கிறது. ஆவணச் சோதனையில் சந்தேகம் கண்ட ஏராளமான இளைஞர்களை அன்று இராணுவம் கைது செய்தது. அதில் சுசி என்ற மகேந்திரனும் ஒருவனாகிறான். தடுப்புக் காவல், புலன் விசாரணை, விளக்கமறியல், நீதிமன்றம் எனப் பகுதி பிரித்து காலம் தன் கடமையைச் செய்து கொண்டிருந்தது.

சோற்றுக்கே சாத்திரம் பார்க்கும் நிலையிலிருந்த வறுமைக் குடும்பத்தால், கோட்டேறி வாதாடி சட்டத்தோடு பேராடி எதையும் சாதிக்க முடியாது போக, நீதியின் பலிபீடம் அவனுக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய ஐம்பது வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

பெற்ற உள்ளங்கள் துடித்துப் போய் நாளடைவில் பிணி தொற்றிப் பரிதவித்தார்கள். வறுமையும் துயரமும் அவர்களை வறுத்தெடுக்க ஊரும் உறவும் தூரமாய்ப் போனது. வேதனையிலும் சோதனையிலும் தாய்க்குத் துணையாக இருந்த தந்தை, 2000ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டுப் பிரிய கை விலங்குடன் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கின்றான் மகேந்திரன். திலகமிழந்த தாய் தனிமையில் வாடினாள்.

போர்ச் சுவாலை பற்றியெரிந்து நீறுபூத்த நெருப்பாக தூர்ந்து போன நிலையில், ஜோசியம் பார்த்து தேசியம் பேசுபவர்களின் அரசியல் கரும பீடங்களை நாடி இடருதவி கோரினாள் தாய். அதன் போதெல்லாம் ஏமாற்றம் மட்டுமே இலவசமாய்க் கிடைத்தது. என்ன செய்வதென்று விதியை நொந்து கொண்ட அரசியல் கைதியின் தாய், 2015ஆம் ஆண்டு ஆயுள் கைதியான தன் பிள்ளையை தனியாக தவிக்க விட்டுவிட்டு தெய்வலோகம் சென்றடைந்தாள்.81df69b4f9603314ce851d47305510a9 XL சிங்களச் சிறைக்குள் சிதையுறும் வாழ்வு;ஒரு அரசியல் கைதியின் உள்ளக் குமுறல்

பெற்றவளுக்கு ஒருபிடி சோறு போட முடியாத பாவியாகி விட்டேனே என்கின்ற பெருந்துக்கத்தோடு விலங்கு பூட்டிய கைகளால் தாயின் சிதைக்குத் தீயை மூட்டிவிட்டு ஈர விழிகளுடன் சிறைச்சாலை நோக்கித் திரும்பினான் மகேந்திரன்.

”இனிமேல் எனக்கென்று யார் இருக்கிறார்கள்…? நான் யாருக்காக இருக்க வேண்டும்…? விடுதலை இன்றி தினம் ஒரு நோயினால் அணுவணுவாகச் சாவதைப் பார்க்கிலும் ஒரேயடியாக செத்துவிடலாம் போலுள்ளது. இறைவா அதனையாவது தருவாயா…?” என விரக்தியில் உரத்துப் புலம்பினான். அவனது உள்ளக் குமுறல் உயர்ந்த மதிற் சுவர்களில் பட்டுத் தெறித்து எதிரொலித்தது. தட்டுங்கள் திறக்கப்படும் என்றார்கள். தட்டிய போதெல்லாம் சிறைக் கதவுகளுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் போட்ட இறைவன், கேட்ட சாவினை மட்டும் இத்தனை விரைவில் தந்து விடுவான் என்று எவர் கண்டார்.

ஆம், அதீத மன அழுத்தம், நீரிழிவு அதனால் சுகம் பெறாதிருந்த உடற்புண், கடந்தகால காச நோயின் தாக்கம் என மொத்த சரீரத்தையும் நோய் தீண்டியதால் மருந்து வில்லைகளை விருந்து போல உண்டு வாழ்ந்த மகேந்திரன், எழுந்து நடமாட முடியாது தள்ளாடினான். உடனிருந்த தோழமைகள் உபதேசம் செய்து வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர்.

இரண்டரை தசாப்தங்களுக்கும் மேல் ஒன்றாக உண்டுறவாடிப் பழகிய சகாக்களின் முகங்களை, மகேந்தினின் விழியிரண்டும் ஒரு தடவை உலாவ அவனை தூக்குப் படுக்கையில் கிடத்தி காவிச் செல்கின்றார்கள் காவலர்கள். ஓரிரண்டு நாட்களுக்குள் உடல்நிலை மோசமடைகிறது. ஆயுள் சிறை அனுபவிக்கும் ஒரு அரசியல் கைதி என்ற அடிப்படையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து, 01.01.2020 அன்று இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவனது உயிர் பிரிந்து விட்டது.7120 4 சிங்களச் சிறைக்குள் சிதையுறும் வாழ்வு;ஒரு அரசியல் கைதியின் உள்ளக் குமுறல்

காலம் என்பது மனிதனுக்கு கொடுக்கப்பட்ட ஒரே செல்வம். கல்லறைக் கற்கள் பிறந்த நாளையும் இறந்த நாளையும் காட்டுகின்றன. இந்த இரண்டு நாட்களுக்கும் இடைப்பட்ட மகேந்தினின் வாழ்நாட்கள் இப்படி இரும்புச் சிதைக்குள்ளேயே மாண்டு போய்விடுமென்று யார் கண்டது.

சிறையறைக்குள் அவனுறங்கும் சிறு இடத்தில் மனமுருகி விழி கசிந்து மலர்தூவி அஞ்சலிக்கின்றனர் சக தோழர்கள். அவர்கள் மனங்களில், “எமக்கும் ஒருநாள் இந்தக் கதிதானா..?” என்கின்ற கேள்வி எழுவதை முகங்கள் காட்டிக் கொடுக்கின்றன.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னரும்கூட, 14 ஆண்டுகள் அரசியல் கைதியாக இருந்து உயிரிழந்த ஒருவருக்கு இரங்கல் எழுதிய இந்தக் கட்டுரையாளன் இதற்கு 11 அசியல் கைதிகளின் அகாலச் சாவுகளைக் கண்டுவிட்டான் என்பது பொதுச் சோகம்.

ஆட்சியாளர்களே! சடலமாக விடுதலை பெற்று பேழையில் வீடு செல்லும் அரசியல் கைதிகளின் பட்டியலுக்கு இத்தோடு முடிவு கிட்டுமா…? இல்லை, இன்னுமின்னும் நீண்டு செல்லுமா…?

சிறிலங்கா சிறையிலிருந்து
விவேகாந்தனூர் சதீஸ்