சவுதி ஏமன் எல்லையில் நடைபெற்ற பெரும் தாக்குதலையடுத்து பெரும் எண்ணிக்கையிலான சவுதி படைகளைப் பிடித்து வைத்துள்ளதாக ஹுதி கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
நஜ்ரான் என்னும் சவுதி நகரத்தின் அருகில் சவுதி அரேபிய படைகள் சரணடைந்ததாக ஊடகங்களுக்கு அறிவித்த ஹுதி கிளர்ச்சியார்களின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆயிரக் கணக்கான சவுதி படைகளை தாங்கள் பிடித்ததாகவும், பலர் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஆனால் சௌதி அரசாங்கம் இதனை உறுதிப்படுத்தவில்லை.
இருதரப்பினரிடையே சண்டை தொடங்கியதிலிருந்து, இப்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைதான் பெரியது என ஹுதி கிளர்ச்சியாளர்களின் செய்தித் தொடர்பாளர் கூறுகின்றார்.
பெரியளவில் உயிர்ச்சேதத்தையும், ஆயுதங்களையும் சவுதி படைகள் இழந்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
பிடிபட்ட சவுதி படைகளின் அணிவகுப்பை ஹுதி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்படும் அல் மசிரா தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
செப்டெம்பர் 14ஆம் திகதி சவுதியின் அரம்கோ எண்ணெய் வயல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலை தாங்கள்தான் நடத்தியதாக ஹுதி கிளர்ச்சியாளர்கள் உரிமை கோரினர்.
இந்த தாக்குதலானது உலக எண்ணெய் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், இந்த தாக்குதலை ஈரான் தான்மேற்கொண்டதாக சௌதி, அமெரிக்கா, பிரிடடன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் குற்றஞ்சாட்டின.
ஏமனில் 2015ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபர் மன்சூர் ஹதி மற்றும் அவரது அமைச்சரவை ஏமன் தலைநகரை விட்டு வெளியேற்றப்பட்டது. இவர்களை ஹுதி கிளர்ச்சியாளர்களே வெளியேற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சவுதி ஹதியை ஆதரிக்கின்றது. ஈரான் ஹுதி கிளர்ச்சியாளர்களை ஆதரிக்கின்றது.
சவுதி தலைமையிலான படை தினமும் ஏமன் மீது வான் தாக்குதல் தொடுக்கின்றது.
இந்தப் பிரச்சினையின் காரணமாக 2016ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 70,000 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. கூறுகின்றது.