சர்வதேச உலகம் இந்த இனப்படுகொலையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது – பழ. நெடுமாறன்

630 Views

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் இலக்கு மின்னிதழிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்

கேள்வி – போர் முடிந்து 12 ஆண்டுகள் கடந்த நிலையில், நினைவுகூரப்படும் இனப் படுகொலை நாளில் தமிழ் மக்கள் மற்றும் உலகத்தவர்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில் – ஈழத்தமிழ் மக்கள் இனப் படுகொலை செய்யப்பட்ட நாளான இன்று, நமது தமிழீழத்தில் சிங்கள இனவெறியர்களால் திட்டமிட்டு இனப் படுகொலை செய்யப்பட்ட நமது சகோதரத் தமிழ் மக்கள், அவர்களை நினைந்து இன்று நாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். இனப் படுகொலை என்பதற்குரிய இலக்கணத்தை ஐ.நா மனித உரிமை ஆணையம் தெளிவாக வகுத்திருக்கிறது. ஒரு மொழி பேசுகிற மக்களை, அல்லது ஒரு மதம் சார்ந்த மக்களை இன்னொரு மொழி பேசுகிற மக்கள் அல்லது மதம் சார்ந்த மக்கள் திட்டமிட்டு அழிப்பதையே இனப் படுகொலை என அதற்கு இலக்கணம் கூறியிருக்கிறது.

அந்த வகையில் பார்த்தால், மொழியாலும், சமயத்தாலும் சிங்களவர்கள், சிங்கள மொழி பேசுகிறவர்கள் மட்டுமல்ல, புத்த சமயத்தைச் சார்ந்தவர்கள். தமிழர்களில் பெரும்பாலானோர் சைவ சமயத்தைச் சார்ந்தவர்களாகவும், சிறுபான்மையோர் முஸ்லிம்களாகவும், கிறீஸ்தவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் தமிழர்கள் யாரும் பௌத்த மதத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. சிங்கள இனவெறியர்கள், மொழி வெறியோடு மட்டுமல்ல, இனவெறியோடு மட்டுமல்ல, மதவெறியோடும் தமிழ் மக்களைத் தாக்கி, திட்டமிட்டே இலங்கைத் தீவில் தமிழினம் என்று ஒன்று இருக்கக் கூடாது. அடையாளம் தெரியாமல் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து, இலங்கை விடுதலை பெற்ற நாளில் இருந்து, அதாவது 1948ஆம் ஆண்டிலிருந்து  அவர்கள் தொடர்ந்து இனப் படுகொலை செய்து வருகிறார்கள். இதில் சைவ சமயத்தைச் சார்ந்த தமிழர்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்த தமிழர்கள் ஆனாலும் இஸ்லாம் தழுவிய தமிழர்கள் ஆனாலும் அவர்களையும் சிங்கள இனவெறியர்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களையும் படுகொலை செய்கிறார்கள். இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆனால் சர்வதேச உலகம் இந்த இனப் படுகொலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததே தவிர,  இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று முன்வரவில்லை. “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற உன்னதமான கொள்கையை, கோட்பாட்டைக் கடைப்பிடித்தவர்கள் தமிழர்கள்.  “யாதானும் நாடாமல் ஊராமல்” என்று சொன்னவன் தமிழன், “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற உயர்ந்த கோட்பாட்டை வகுத்துத் தந்தவன் தமிழன். உலகம் பூராவும் ஒன்று, உலக மக்கள்  எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் எல்லாம் நம்முடைய உறவினர் என்ற, “யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற செம்மாந்தர்” என்று சொன்ன தமிழனை சிங்கள இனவெறியர்கள் திட்டமிட்டு இனப்படுகொலை செய்த போது, உலகம் என்னவென்று கேட்கத் தவறிவிட்டது. ஐ.நாப் பேரவை முடங்கிவிட்டது.

முதலாம் உலகப் போர் நடைபெற்ற போது, 1914 இலிருந்து 1918 ஆம் ஆண்டு வரையும் நடைபெற்ற அந்த உலகப் போரின் போது, ஆர்மீனிய மக்களை, துருக்கியில் வாழ்ந்தவர்களைத் துருக்கி அரசு இனப்படுகொலை செய்தது. ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. ஆனால் அந்த இனப்படுகொலை,  அது இனப்படுகொலை தான், துருக்கியில் வாழ்ந்த ஆர்மீனிய மக்கள் படுகொலை செய்யப்பட்டது; அது இனப் படுகொலை நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை இன்றைக்கு உலகம் சொல்லி, அதற்குத் துருக்கி அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தியிருக்கின்றன.

1971ஆம் ஆண்டில் ‘கிழக்குப் பாகிஸ்தான்’ என்று சொல்லப்பட்ட கிழக்கு வங்காளத்தில் வங்க முஸ்லிம்கள்  பாகிஸ்தான் இராணுவத்தால் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட போது, இந்தியா துணைநின்று, வங்க மக்களைப் பாதுகாத்தது மட்டுமல்ல, வங்கதேசம் பிறப்பதற்கும் இந்தியா துணை நின்றது. இந்தியாவில் உள்ள சகல தேசிய இனமக்களும் அதற்கு ஆதரவு கொடுத்தார்கள். இது நடந்து எத்தனை ஆண்டுகளாகியிருக்கின்றன. இன்றைக்குக் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும், அந்தத் திட்டமிட்ட இனப் படுகொலையில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று வங்க தேசம் வலியுறுத்தி, அதற்காக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுச் சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் இனப் படுகொலை புரிந்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். உலகம் பூராவும் இதைப் போல நடந்து கொண்டிருக்கிறது. மேலும் ஜப்பானியர்கள்  இரண்டாம் உலகப் போரில் கொரிய மக்களை இனப் படுகொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, ஜப்பானிய இராணுவத் தளபதிகள் தண்டிக்கப்பட்டார்கள்.

ஆனால், இலங்கையில் நம்முடைய தமிழ் மக்களைத் திட்டமிட்டு இனப் படுகொலை செய்த சிங்கள இராணுவ அதிகாரிகளோ, வீரர்களோ அல்லது அரசியல் தலைவர்களோ யாரும் இதுவரை குற்றவாளிக் கூண்டிற் கூட நிறுத்தப்படவில்லை. டப்ளின் மக்கள் தீர்ப்பாயம், பிரேமன் மக்கள் தீர்ப்பாயம், இவர்கள் எல்லாம் இலங்கையில் நடைபெற்றது இனப் படுகொலை தான்  என்பதை உறுதிசெய்த பின்னரும் கூட, அதற்குக் காரணமான குற்றவாளிகளை, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, விசாரணை நடத்தித் தண்டிப்பதற்கு உலகம் முன்வரவில்லையே ஏன்? உலகம் பூராவும் வாழ்கின்ற தமிழர்களின் உள்ளங்களில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது இந்தக் கேள்வி. எங்களுக்கு மட்டும் ஏன் இந்த அநீதியை உலகம் இழைக்கிறது?

இனப் படுகொலை நாளான இன்று உலகம் பூராவும் வாழ்கின்ற தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அவர்கள் உள்ளங்களில் இந்தக் குமுறல் பொங்கியெழுந்து கொண்டிருக்கிறது. இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, இனியாவது இலங்கையில் வாழ்கின்ற தமிழர்கள் இனப் படுகொலைக்கோ, வேறு கொடுமைகளுக்கோ ஆளாகாமல் காக்க வேண்டிய கடமை உலகத்துக்கு உண்டு என்பதை நினைவூட்டுவது தான் உலகத் தமிழர்களாகிய நமக்கு முன்னுள்ள முக்கியமான கடமை. அந்தக் கடமையை இனப்படுகொலை நாளில் நாம் இன்று உறுதியாக நிறைவேற்றுவோமாக.

Leave a Reply