நீராவியடி பிள்ளையார் ஆலய சூழலில் வைத்து சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாக ஊடகங்களில் வெளியாகிய காணொளிகள் மற்றும் ஒளிப்படங்களைப் பெற்றுக் கொள்வதற்கு அனுமதியளிக்கக் கோரி முல்லைத்தீவு முல்லைத்தீவு தலைமையகப் பொலிசார் இன்று (02) நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஊடாக விண்ணப்பம் செய்திருந்தனர். இந்த ஒளிப்படங்கள், காணொளிகளை பெற்றுக் கொள்வதற்கு நீதிமன்றம் பொலிசாருக்கு அனுமதியளித்தது.
பொலிசாரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த முல்லைத்தீவு நீதவான் எஸ்.லெனின்குமார், அதற்கான அனுமதிக் கட்டளையை பொலிசாருக்கு வழங்கினார். நீதிமன்றின் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியை அடையாளம் காட்டுவதற்காக சட்டத்தரணிகள் நீராவியடி பிள்ளையார் ஆலயப் பகுதிக்குச் சென்றிருந்தனர்.
அதன் போது, சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் மற்றும் மூவர் பௌத்த பிக்குவால் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக அன்றைய தினமே சட்டத்தரணி கே.சுகாஸ், முல்லைத்தீவு தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதேவேளை சட்டத்தரணி மீதான தாக்குதல் தொடர்பாக முல்லைத்தீவு நீதிமன்றில் தனியாக பி அறிக்கை ஒன்றை பொலிசார் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு முல்லைத்தீவு நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
தாக்குதல் நடத்தியவர்களை மன்றில் முற்படுத்தினால் அவர்கள் அடையாளம் காட்டத் தயார் என சட்டத்தரணிகளால் எடுத்துக் கூறப்பட்டது. சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக காணொளி மற்றும் ஒளிப்பட ஆதாரங்கள் உள்ளன. அவற்றை வைத்து சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்துவோம் என்று பொலிசார் எடுத்துரைத்தனர். அதனால் வழக்கு விசாரணை எதிர்வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.