கோத்தபயா ராஜபக்ஸவின் இரட்டைப் பிரஜாவுரிமை குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அவர் இலங்கைப் பிரஜைதான் என்பதை உறுதி செய்தது. அதேநேரம் மனுவை தள்ளுபடி செய்து, நீதிமன்றம் ஏகமனதாக இந்த முடிவை அறிவித்தது.
கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி சற்று முன்னர் கலகமடக்கும் பொலிசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கோத்தபயா ராஜபக்ஸவின் இலங்கைப் பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை தீர்ப்பு இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாகவே அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இதற்கிடையில், தீர்ப்பு வந்ததை தொலைபேசியின் மூலம் அறிந்து கொண்ட மகிந்த வெற்றி பெற்ற உற்சாகத்தில் கைகளை தூக்கி தமது வெற்றியை வெளிப்படுத்தினார்.
பின்னர் கோத்தபயாவும் மகிந்தவும் கட்டிப்பிடித்துக் கொண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். இவை சமூகவலைத் தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது.
இதேவேளை, நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த கோத்தபயாவின் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.