கோத்தபயாவிற்கு வாழ்த்துத் தெரிவித்த வடமாகாண ஆளுநர், முன்னாள் முதலமைச்சர்

இலங்கையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று, இன்று பதவியேற்ற கோத்தபயா ராஜபக்ஸவிற்கு வடக்கின் ஆளுனர் சுரேன் ராகவன் அவர்களும், வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

வடக்கின் தற்போதைய ஆளுநர் சுரேன் ராகவன் தனது வாழ்த்துச் செய்தியில், சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் தனக்கான ஒரு இடத்தினை மீண்டும் நிலைநாட்டிக் கொள்வதற்கு புதியதொரு வழிகாட்டலும், தூர நோக்கும் அர்ப்பணிப்பு நிறைந்த கடின உழைப்பும் நமது தாய் நாட்டிற்கு தற்போது அவசியமாக இருக்கின்றது. இன மத அரசியல் பேதமின்றி இலங்கையின் அனைத்து மக்களையும் தனது வெற்றிப் பயணத்தில் இணைத்துக் கொண்டு முன்னோக்கி செல்வதற்கு புதிய ஜனாதிபதிக்கு தைரியமும் நம்பிக்கையும் கிடைப்பதற்கு வடமாகாண மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தனது வாழ்த்துச் செய்தியில், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபயா ராஜபக்ஸவிற்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும், அதே சமயம் அவர் தமது பொறுப்புக்களை உணர்ந்து சிறப்பான ஒரு ஆட்சிக்கு வித்திடுவார் என்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.