கோட்டா வழங்கிய வாக்குறுதிகளை நினைவூட்டிய இந்தியா: தினேஷ் டில்லியில் பேச்சு

இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இந்தியாவுக்குச் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது மீனவர்கள் பிரச்சினை குறித்து விரிவாகப் பேசப்பட்டது என இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்தார்.

இதன்போது இந்திய மீன்பிடிப்படகுகளை விடுவிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷ வழங்கிய உறுதிப்பாட்டை இலங்கைக்கு நினைவுபடுத்தியதாகவும் ரவீஷ் குமார் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இந்தச் செயல்முறை நடந்து வருகிறது என்றும் விரைவில் படகுகள் விடுவிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இலங்கை காவலில் தற்போது 52 படகுகளும் 15 இந்திய மீனவர்கள் உள்ளனர் என இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்தார்.

இதேவேளை இந்தச் சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், அமைச்சர் குணவர்தனவுடன் இரு தரப்பு பிரச்சினைகள் மற்றும் பிராந்திய நலன்கள் குறித்தும் ஆக்கபூர்வமான பேச்சு இடம்பெற்றது. இந்தியா மற்றும் இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான இந்தியத் தலைவர்களின் பார்வை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply