கொழும்பு தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் தவறவிடப்பட்டதன் நோக்கம் என்ன?

தெமட்டக்கொடவில் உள்ள ஆடம்பர வீடு ஒன்றின் முன்னால் வீட்டு உரிமையாளரின் வெள்ளை நிற பி.எம்.டபிள்யூ கார் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த வீட்டினுள் தற்போதும் சிறீலங்கா காவல்துறையினர் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
தாக்குதல் திட்டமிடல் மற்றும் ஒன்று கூடல்கள் என்பன அந்த வீட்டிலயே இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இசானா ஏற்றுமதி நிறுவனம் மற்றும் செப்பு உலோக உற்பத்தி நிறுவனங்களின் உரிமையாளரும் செல்வந்தருமான முஹமட் யூசூப் இப்ராகிம் என்பவரின் வீடே அதுவாகும். கொழும்பு குண்டுவெடிப்புக்களைப் பொறுத்தவரையில் அதற்கான முக்கிய காரணம் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பு என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இப்ராகிமின் பிள்ளைகள் தேசிய தௌஹீத் ஜமாஅத் என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பின் தலைவர் ஷகரான் ஹசீம் உடன் ஏற்படுத்திக் கொண்ட நெருக்கமான உறவின் பின்னரே கடந்த ஆறு மாதங்களாக இப்ராகிமின் வீட்டில் அதிக செயற்பாடுகளும், வெளியாட்களின் நடமாட்டமும் காணப்பட்டதாக அந்த பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்ட இந்த தாக்குதலானது உள்ளூர் அரசியல் மற்றும் எதிர் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டே வகுக்கப்பட்டிருந்தது. எனவே தான் தமிழ் மக்களும், வெளிநாட்டவர்களும் அதிகம் கொல்லப்படும் வகையில் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பில் அமெரிக்க புலனாய்வுத்துறை கடந்த மார்ச் மாதம் சிறீலங்கா அரசுக்கு தகவலை தெரிவித்திருந்தது. பின்னர் ஏப்பிரல் 4 ஆம் நாள் இந்தியா சிறீலங்கா புலனாய்வுத்துறைக்கு அதனை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் தகவல்களின் அடிப்படையில் கிறிஸ்த்தவ தேவாலயங்களும், ஆடம்பரவிடுதிகளும் இந்திய தூதரகமும் தான் தாக்குதல் இலக்கு. அதன் பின்னர் ஏப்பிரல் 10 ஆம் நாள் மீண்டும் தனது தகவல்களை இந்திய புலனாய்வுப் பிரிவு உறுதி செய்ததுடன், தாக்குதல் இடம்பெறப்போகும் இடங்கள் மற்றும் தாக்குதலாளிகள் தொடர்பான தகவல்களும் சிறீலங்கா தரப்புக்கு வழங்கப்பட்டிருந்தது. உதாரணமாக ஷகரானின் சகோதரர் இரவு 11 மணியளவில் வந்து தனது மனைவியைப் பார்த்ததும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இறுதியாக தாக்குதலுக்கு முதல் நாளும் இது தொடர்பில் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் அவை யாவும் சிறீலங்கா தரப்பால் புறம்தள்ளப்பட்டிருந்தன.
57882598 2606832046013532 6905242543546433536 n கொழும்பு தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் தவறவிடப்பட்டதன் நோக்கம் என்ன?அது மட்டும்லாது தேசிய தௌஹீத் ஜமாஅத் என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பின் உருவாக்கமும் தலைவர் ஷகரான் ஹசீம் இன் சடுதியான வளர்ச்சியும் கிழக்கு பகுதி மக்களிடம் அதிக சந்தேகத்தை தோற்றுவித்திருந்தது. தனக்கு என தனியான பள்ளிவாசல் நிர்மானித்துக் கொண்ட அவர் சொந்தமாக அடிப்டை சிந்தனைவாதக் கொள்கைகளையும் வகுத்துக்கொண்டதோடு கிழக்கில் உள்ள முஸ்லீம் மக்களை ஒரு ஆயுதப்போராட்டத்திற்கு தயார்படுத்தியிருந்தார்.
அவரின் இந்த நடவடிக்கைகளுக்கு எங்கிருந்து பணம் வருகின்றது என்பதை கண்டறிவதற்கு அரசு தவறிவிட்டது என்பது கூறுவதை விட அதனை கண்டுகொள்ள அரசியல்வாதிகள் விரும்பவில்லை என்றே கூற முடியும். அதற்கு காரணம் கிழக்கு மற்றும் தென்னிலங்கையில் உள்ள முஸ்லீம் அரசியல்வாதிகள் தென்னிலங்கை அரசியலில் கொண்டுள்ள அதிகாரம்.
ஆனால் மக்கள் விடவில்லை ஷகரானுக்கு எதிராக போராடினார்கள், நல்லாட்சி அரசே ஏன் ஆயுதக்கலாச்சாரத்தை ஊக்குவிக்கின்றாய் என கேள்வி எழுப்பினார்கள், மக்களாகவே ஷகரானை கிழக்கில் இருந்து துரத்தினார்கள், அதன் பின்னர் அவர் மாலைதீவுக்குச் சென்றார். இங்கு நாம் இரண்டு விடயங்களைக் கவனிக்க வேண்டும். மாலைதீவு முன்னர் சீனா சார்ப்பு அரசின் ஆதிக்கத்தில் இருந்தது. ஆனால் தற்போது இந்திய அமெரிக்க சார்ப்பு அரசு அங்கு ஆட்சியில் உள்ளது. இரண்டாவது சிறீலங்காவின் நல்லாட்சி அரசு செய்ய வேண்டிய வேலையை மக்கள் செய்திருந்தனர்.
ஆனாலும் சிறீலங்காவின் நல்லாட்சி அரசு முஸ்லீம் தீவிரவாதத்தை வளர்ப்பதை நிறுத்தவில்லை, ஷகரான்வின் நெருங்கிய நண்பரும், இனவாத சிந்தனை கொண்டவருமான ஹிஸ்புல்லவை கிழக்கு மாகாண ஆளுனராக நியமித்ததன் மூலம் மீண்டும் ஷகரானுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியது சிறீலங்கா அரசு. தன்னை துரத்திய கிழக்கு தமிழ் மக்களை பழிவாங்குவதற்கு அவர் தெரிவுசெய்ய இலக்குத் தான் மட்டக்களப்பில் உள்ள தேவாலையம்.
சி-4 எனப்படும் அதிஉயர் வெடிமருந்துகள் தலா 25 கிலோ ஒவ்வொரு தாக்குதலுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சிறீலங்கா படைத்தரப்புத் தெரிவித்துள்ளது. அதாவது ஏறத்தாள 150 தொடக்கம் 200 கிலோ வெடிமருந்துகள் சிறீலங்காவுக்குள் கொண்டுவரப்பட்டதா? அல்லது சிறீலங்கா இராணுவத்தினரிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டதா என்பது குறித்த சந்தேகமும் எழுந்துள்ளதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏனெனில் சிறீலங்கா இராணுவத்தின் புலனாய்வுத்துறையில் அதிகம் முஸ்லீம் இனத்தவரே உள்ளதும், மொஹமட் முகைடீன் என்ற முன்னாள் சிறீலங்கா இராணுவச் சிப்பாய் இந்த குண்டுவெடிப்பில் பங்குகொண்டுள்ளதும் இந்த சந்தேகத்தை வலுவாக்கியுள்ளது.
சிறீலங்கா அரசியலில் கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட விரிசலானது தற்போதும் தொடர்கின்றது. எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோத்தபாயா ராஜபக்சாவை மகிந்த தரப்பு நியமித்திருந்த நிலையில் அவரின் மீது அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது மகிந்த தரப்பை முறியடிக்கும் அமெரிக்காவின் காய்நகர்த்தல் என்பது தெளிவானது. தனது அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதாக கோத்தபாய அறிவித்த சில தினங்களில் கொழும்பில் குண்டுகள் வெடித்ததும் பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
சில வருடங்களுக்கு முன்னர் வன்னிப் பகுதியில் மீண்டும் ஆயுதப்போராட்டத்திற்கு தயாராகின்றனர் என கூறி தெய்வீகன் உட்ப 3 தமிழ் இளைஞர்கள் மீது இரவோடு இரவாக சுற்றிவழைத்து தாக்குதல் நடத்தியது சிறீலங்கா படைத்தரப்பு, அவர்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை துல்லியமாக வழங்கியிருந்தது சிறீலங்கா புலனாய்வுத்துறை.
ஆனால் தற்போது தனக்கு கிடைத்த துல்லியமான தகவல்களைக்கூட சிறீலங்கா படைத்தரப்பு புறம்தள்ளியது சிறீலங்காவில் மட்டுமல்லாது அனைத்துலக ஆய்வாளர்களைக் கூட வியப்பில் ஆழத்தியுள்ளது. அது மட்டுமல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற அமைப்பில் 66 சிறீலங்கா முஸ்லீம்கள் இணைந்திருந்ததாக தெரிவித்த சிறீலங்கா அரசு அவர்களில் பலர் நாடு திரும்பியுள்ளதாகவும் முன்னர் தெரிவித்திருந்தது.
அவர்கள் நாடுதிரும்பியுள்ளபோதும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான சட்டம் சிறீலங்காவில் இல்லை என சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா அனைத்துலக ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ள கருத்து மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 30 வருடங்கள் உள்நாட்டு போரில் ஈடுபட்ட ஒரு நாட்டிடம் அவ்வாறான சட்டம் இல்லையா என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை.
அது மட்டுமல்லாது தாக்குதல் இடம்பெற்ற போது சிறீலங்கா அரச தலைவர் நாட்டில் இல்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. அதாவது ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற அமைப்பின் பெயரில் சிறீலங்காவில் உள்ள இஸ்லாமிய அமைப்பு மேற்கொண்ட தாக்குதலானது ஏதோ ஒருவகையில் சிறீலங்காவில் உள்ள ஒரு அரசியல் தரப்புக்கும், பிராந்திய ஆதிக்க சக்தி ஒன்றுக்கும் தேவையாக இருந்துள்ளதுடன், அந்த தரப்பே சிறீலங்கா படைத்தரப்பை கையாண்டுள்ளது.
இருந்தபோதும் இந்த தாக்குதலில் தனது பெயர் இடம்பெறவேண்டும் என்ற ஆவல் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற அமைப்புக்கும் உண்டு. ஏனெனில் 2006 ஆம் ஆண்டு அபு ஓமார் அல் பக்தாதி தலைமையில் உருவாக்கம் பெற்ற இந்த அமைப்பு 2014 ஆண்டு காலப்பகுதியில் பிரித்தானியாவின் மொத்த நிலப்பரப்பின் அரைவாசி பகுதி அளவு நிலத்தை தனது ஆளுமையின் கீழ் கொண்டிருந்ததுடன் பல ஆயிரம் பேரையும் உலகம் முழுவதிலும் இருந்து தன்னுடன் இணைத்திருந்தது.
ஆனால் தொடர்ச்சியாக இடம்பெற்ற போரில் ஐ.எஸ்.ஐ.எஸ் தன்வசம் இருந்த இறுதியான நிலப்பரப்பையும் கடந்த மாதம் இழந்திருந்ததுடன் ஏறத்தாள 70 ஆயிரம் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளும், 20 ஆயிரம் கூட்டுப்படையினரும் கடந்த ஐந்து வருடங்களாக இடம்பெற்ற போரில் கொல்லப்பட்டனர். அதேசயம்; 30,000 பேர் தலைமறைவாகிவிட்டதாகவும், அவர்கள் ஒரு கெரில்லா போர்முறைக்கு மாற்றம் பெற்றுள்ளதாகவும் அமெரிக்க படையினர் கடந்த மாதம் தெரிவித்திருந்த நிலையில் சிறீலங்காவின் தலைநகரில் மிகப்பெரும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஆனால் சிறீலங்காவில் இடம்பெற்ற இந்த தாக்குதலுக்கும் சிரியா மற்றும் ஈராக் எல்லைப் பகுதியில் காணாமல்போன ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் நேரிடையாக தொடர்புகள் இல்லை. இருந்தபோதும் இழந்துபோன தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு இந்த தாக்குதலை உரிமைகோர வேண்டிய கட்டாயம் ஒன்று அந்த அமைப்புக்;கு தற்போது ஏற்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற அமைப்புக்கும் இது நன்மையையே கொடுத்துள்ளது. எனவே தான் சில நாட்கள் கடந்த நிலையிலும் உரிமை கோரும் படலம் நடந்துள்ளது.
ஆனால் இந்த தாக்குதலில் அதிக இழப்பைச் சந்தித்தது தமிழ் மக்கள் தான் உயிரிழப்புக்களுக்கு அப்பால் அவர்களின் உரிமைக்கும் நீதிக்குமான போராட்டம் ஒரு இக்கட்டான கட்டத்தை தொட்டு நிற்கின்றது. 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இடம்பெற்ற இரட்டைக்கோபுர தாக்குதலின் பின்னர் உலகில் விடுதலைக்கு போராடிய இனங்கள் எவ்வாறு பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்தனவோ அதனை ஒத்த ஒரு நிலையை இந்த தாக்குதல் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
colombo bomb கொழும்பு தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் தவறவிடப்பட்டதன் நோக்கம் என்ன?முள்ளிவாக்காலில் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கான நீதி கடந்த 10 வருடங்களாக கிடைக்காத நிலையில் பத்தாவது ஆண்டு நினைவு நாளை சிறீலங்கா அரசுக்கு எதிராக மிகப்பெரும் எடுப்பில் முன்னெடுக்க தமிழ் சமூகம் திட்டமிட்டுள்ள நிலையில் சிறீலங்காவுக்காக பிராத்தியுங்கள் என்ற கோசம் அனைத்துலக மட்டத்தின் முன்னெடுக்கப்பட்டுவருவது ஈழமக்களில் விடுதலை போரை பின்நோக்கி நகர்த்தியுள்;ளது.
இதனை சரிசெய்து எமது விடுதலைப்போரை முன்நகர்த்தும் மாற்றுத் திட்டங்களை அல்லது இராஜதந்திர மூலோபாயங்களை வகுத்துக்கொள்வதற்கு நாம் ஒரு அணியில் ஒருங்கிணைய வேண்டிய கட்டாயம் ஒன்று தற்போது ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் அனைத்துலக அரசியலுக்குள் சிக்கிக்கொண்டுள்ள சிறீலங்காவில் எதிர்காலத்தில் இன முரண்பாடுகள் விரிவாக்கம் பெறுமே தவிர குறையப்போவதில்லை, அதனையே இந்த பத்தி எழுதப்படும் போது கிழக்கு மாகாணத்தின் சாய்ந்தமருது பகுதியில் சிறீலங்கா படையினருக்கும் முஸ்லீம் தீவிரவாதிகளுக்கும் இடையில் இடம்பெறும் மேதல்கள் காட்டுகின்றன.
வேல்ஸ் இல் இருந்து அருஷ்