கொழும்பில் களமிறங்கத் தயாராகின்றது தமிழரசு: நேற்று ஆலோசனை

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி வடக்கு, கிழக்குக்கு வெளியே கொழும்புத் தேர்தல் மாவட்டம் உட்பட்ட மேல்மாகாணத்திலும் களமிறங்குவது குறித்துத் தீவிரமாக ஆராய்ந்து
வருகின்றது.

இது தொடர்பில் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளையின் கூட்டத்தை மாவட்டக்கிளைத் தலைவர்
ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா நேற்று
மாலை பம்பலப்பிட்டியில் கூட்டினார். அக் கூட்டத்தில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.
சம்பந்தன், தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, கூட்டமைப்புப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துரையாற்றினார்.

பம்பலப்பிட்டி அரசு தொடர் மாடிக் கட்டடத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் இந்தக் கூட்டம் நேற்று மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது.

கட்சியின் கொழும்பு மாவட்டக்கிளை உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றினர். கொழும்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி நிச்சயம் களமிறங்க வேண்டும் என்ற கருத்து அனைவராலும் முன் வைக்கப்
பட்டதாக அறியவந்தது.

எனினும், கொழும்பிலிருந்து ஏற்கனவே நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழர்
தரப்பைப் பாதிப்படையச் செய்து, ஒட்டுமொத்தத் தமிழ்ப் பிரதிநிதித் துவத்தையும் கெடுத்து விடக்கூடாது என்ற கருத்தும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஏற்கனவே மனோ கணேசன் தரப்பு தமிழர்களைக் கொழும்பில் பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றது. அவர்களும் இலங்கையில் ஒரு சிறுபான்மை இனத்தவர்கள். இன்னொரு சிறுபான்மை இனத்
தின் பிரதிநிதித்துவத்தை மற்றொரு சிறுபான்மை இனத்தவர்களான வடக்குக் கிழக்குமத் தமிழர்கள்
முறியடித்து இல்லாமலாக்கினார்கள் என்ற அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்று அங்கு பேசிய சம்பந்தன் தெரிவித்தார்.

ஆகவே, இது குறித்து அவர்களுடனும் பேசி இணக்கமான
ஓர் உடன்பாட்டுக்கு வருவதே உசிதமானது என்றார் அவர். எனவே, இந்த விடயம் குறித்து பல தரப்பினருடனும் பேச்சு நடத்திய பின்னர், விரைவில் மாவட்டக்கிளைக் கூட்டத்தைக் கூட்டி இறுதித் தீர்மானம் எடுப்பது என்று நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அறியவந்தது.