கொரோனா நெருக்கடியும் கைநழுவிய போக்கும் -பி.மாணிக்கவாசகம்

379 Views

கோவிட்-19 கொள்ளை நோய் தீவிரமடைந்துள்ளது. அதன் தொற்றுப் பரவலைத் தகுந்த முறையில் தடுத்து நிறுத்த முடியாமல் இலங்கை தடுமாறிக் கொண்டிருக்கின்றது. இராணுவத்தை முதன்மை நிலையில் பயன்படுத்தி கடந்த மார்ச் மாதம் ஏற்பட்டிருந்த நோய்த்தொற்றின் முதலாவது அலையை அரசு வெற்றிகரமாகக் கையாண்டிருந்தது. அது ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியானது என்று உலக சுகாதார நிறுவனம் பாராட்டி இருந்தது.

இதனால் சினிமா கதாநாயகனைப் போன்று, ஜனாதிபதி கோத்தாபாய அரசு இறுமாப்புடன் கொலரைத் தூக்கிவிட்டுக் கொண்டது. ஆனால் ஒரு சில மாதங்களிலேயே நிலைமைகள் தலைகீழாக மாறிவிட்டன. குறிப்பாக ஒக்டோபர் மாதத்தில் கொரோனா வைரஸ் திடீரென அதிரடியாகத் தாக்கத் தொடங்கி உள்ளது. இதனால் மக்கள் நாளாந்தம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகின்ற நிலைமையும், உயிரிழக்கின்ற நிலைமையும் உருவாகி விட்டன. இந்த நிலைமையை எதிர்கொள்வதில் தளர்வான போக்கையே அரச தரப்பில் காண முடிகின்றது.

ஒக்டோபர் மாத முடிவிலும், நவம்பர் மாத முற்பகுதியிலுமான இரண்டு வார காலப்பகுதியில் மாத்திரம் 13 பேரை கொரோனா வைரஸ் பலி கொண்டிருக்கின்றது. அரச தரப்பினரால் குறிப்பிடப்பட்ட கொத்தணி நிலைமையைக், கடந்த அதன் ஒக்டோபர் மாத பாய்ச்சல் சமூகத் தொற்றாக மாறியுள்ளது. ஆனாலும் அது கொத்தணி தொற்று முறையிலேயே இருக்கின்றது என்று அரசாங்கம் பிடிவாதமாகக் கூறி வருகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றிப் பரவுவதைத் தடுப்பதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது. வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்கள் ஊரடங்கின் மூலம் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டிருக்கின்றன. மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. சில மாவட்டங்களில் இருந்து வெளியேறுபவர்களையும், உள்ளே பிரவேசிப்பவர்களையும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

முகக் கவசம் அணிதலும், இடைவெளி பேணுதலும் கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றன. இதனை மீறிச் செயற்படுபவர்களைக் கண்காணிப்பதற்காக சிவிலுடையில் படையினர் களத்தில் இறக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களால் அடையாளம் காணப்படுபவர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். இதுபோன்ற இறுக்கமான வேறு பல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது.

625.500.560.350.160.300.053.800.900.160.90 1 கொரோனா நெருக்கடியும் கைநழுவிய போக்கும் -பி.மாணிக்கவாசகம்

ஆனாலும் கொரோனா கட்டுக்கடங்கவில்லை. இதனால் கொரோனாவை நீங்களே வெற்றிகரமாக எதிர்த்து வாழுங்கள் என்று நாட்டு மக்களை நோக்கி ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ கூறும் அளவுக்கு நிலைமைகள் மோசமடைந்திருக்கின்றன. சமூகத்தொற்றாகக் கருதப்பட்ட கொரோனா வைரஸ் வீடுகளுக்குள் நுழைந்து விட்டது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் மருத்துவர் ஹரித்த அலுத்கே ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் தொற்றுக்கு இலக்காகி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒக்டோபர் மாதம் வரையில் 13 ஆகவே இருந்தது, ஆனால் நிலைமைகள் தீவிரமடைந்ததையடுத்து ஒக்டோபர் 20 ஆம் திகதிக்குப் பின்னர் 16 பேர் உயிரிழந்திருக்கின்றார்கள்.

இந்த நிலையில் வீடுகளுக்குள் புகுந்த கொரோனாவினால் ஒரே தினத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவமும் இடம்பெற்றிருக்கின்றது. இந்த ஐந்து பேரும் வெளியில் நடமாடியவர்கள் அல்ல. வீடுகளுக்குள்ளேயே நோய்வாய்ப்பட்டிருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எவ்வாறு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகினார்கள் என்பது உடனடியாகக் கண்டறியப்படவில்லை. இதற்கான புலன் விசாரணைகள் ஆரம்பிக்கப்படுமா என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. இது கொரோனா வைரஸ் பரவலில் இதுவரையிலும் ஏற்படாத மிக மோசமான நிலைமை. உயிரிழப்புக்கள் அதிகரிக்கப் போவதற்கான அறிகுறியாகும்.

கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை திடீரென 29 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 500 ஐயும் கடந்து நாளாந்தம் அதிகரித்துச் செல்வது நோய்த் தொற்று நிலைமையைக் கட்டுக்கடங்காமல் செய்யக் கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தத் தீவிர நிலைமைக்கு அரசினதும் அரச அதிகாரிகளினதும் விழிப்புணர்வற்ற செயற்பாடுகளே காரணம் என கூறப்படுகின்றது. நாட்டு மக்களின் பொறுப்பற்ற தன்மையும் இதற்குத் துணை புரிந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. கொத்தணி முறையில் இருந்து முன்னேறி குடும்பங்களை கொத்து கொத்தாகப் பற்றி பரவத் தொடங்கியுள்ள நிலையில்தான், நாட்டு மக்களே வைரஸ் தொற்று அதிகரிப்பதற்கான காரணம் என குற்றம் சுமத்தியுள்ள ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ, கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரையை வழங்கியுள்ளார்.

உலகில் எங்குமே இல்லாதவாறு இலங்கையில்தான் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இராணுவத்தின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனானப்பட்ட விடுதலைப்புலிகளை மௌனிக்கச் செய்ததைப் போன்று இராணுவம் கொரோனாவின் பிடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் என்ற அரசியல் வேதாந்த நிலையில் இருந்து அரசு இன்னும் மாறவில்லை.

கொரோனா விடயத்தில் சுகாதாரத்துறையினரிலும் பார்க்க அரசாங்கம் இராணுவத்தின் மீது தங்கியிருந்ததன் – தங்கியிருப்பதன் விளைவே கொரோனா வைரஸின் தீவிர தொற்று நிலைமையாகக் கருதப்படுகின்றது. மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையினரின் வழிகாட்டல்களில் அரசு உரிய கவனம் செலுத்துவதில்லை என்று ஆரம்பத்திலேயே குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

தொற்றுத் தடுப்புக்கான பிசிஆர் சோதனைகளை அதிகரிக்க வேண்டும். வென்டிலேட்டர் என்ற மூச்சுதவி இயந்திரங்கள் மற்றும் முன்னிலையில் செயற்படுகின்ற மருத்துவர்கள், தாதியர், மருத்துவ ஆய்வுகூடத்தினர், சுகாதாரப் பரிசோதகர்கள் போன்றவர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களும் சாதனங்களும் அவசரமாகக் கொள்வனவு செய்யப்பட வேண்டும் என்ற சுகாதாரத்துறையினருடைய கோரிக்கைகளுக்கு அரசு உரிய முறையில் செவிசாய்க்கவில்லை.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதார மருத்துவ துறைசார்ந்த செயற்பாடுகளிலும் பார்க்க போர் முறை சார்ந்த நடவடிக்கைகளிலேயே அரசு அதீத நம்பிக்கை கொண்டிருக்கின்றது. ஆனால், இராணுவ பாணியிலான ஆட்சி நிர்வாகத்தையும் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான இராணுவ தலைமையிலான செயலணிச் செயற்பாட்டையும் கொரோனா வைரஸ் எகிறியிருக்கின்றது.

வகைதொகையின்றி வைரஸ் தொற்றிப் பரவுவதைத் தடுப்பதிலும் கொரோனாவின் பாதிப்புகளில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டிய சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மந்திரிக்கப்பட்ட நீரை ஆற்றில் கரைத்ததும், கடலில் பாய்ந்து உயிரை மாய்த்தாவது கொரோனாவைக் கட்டுப்படுத்துவேன் என்று சூளுரைத்திருப்பதும் எதிர்க்கட்சியினருடைய நையாண்டி அரசியலுக்குத் தீனி போட்டுள்ளது.

அவருடைய செய்கை பௌத்த தர்மத்திற்கு முரணானது. அதனை ஏளனப்படுத்துவது என்ற தொனியில் கருத்துரைத்து பௌத்த பிக்குகளும் அவருக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். கொரோனாவின் கெடுபிடிக்குள் சிக்கியுள்ள நிலையில் தனது முக்கிய அமைச்சராகிய சுகாதாரத்துறை அமைச்சர் வெளிப்படுத்தியுள்ள கருத்து குறித்து அரசு அலட்டிக்கொள்ளவில்லை. அது அரசாங்கத்தின் கருத்து என்று கருதத் தக்க வகையில் அமைதியாக இருக்கின்றது.

1601895011935788 0 கொரோனா நெருக்கடியும் கைநழுவிய போக்கும் -பி.மாணிக்கவாசகம்

நல்லாட்சி அரசாங்கத்தினால் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து நாட்டைப் பாதுகாக்க முடியாமல் போனமையே ராஜபக்ஷக்களின் அரசியல் அதிகார மீள்வருகைக்கு உந்து சக்தியாகியது. தேசிய பாதுகாப்பை உறுதி செய்து நாட்டை அழிவில் இருந்து பாதுகாப்போம் என்ற ஆணையே ராஜபக்ஷக்களை தேர்தல்களில் வெற்றிபெறச் செய்தது. சிங்கள பௌத்த தேசியம் என்ற தனி இனத்தேசிய இனவாத கோஷமும் இதற்குத் துணை புரிந்தது.

தேசிய பாதுகாப்பு என்பது நாடு பிளவுபடுவதைத் தடுத்து, நாட்டின் ஆட்புல ஒருமையைப் பாதுகாப்பது மட்டுமல்ல. ஆயுத ரீதியாக மட்டுமல்லாமல் எந்த வழியிலும் நாட்டு மக்கள் கொல்லப்படாமல் பாதுகாப்பதும் அதன் முக்கிய பொறுப்பாகும். நல்லாட்சி அரசாங்கத்தைப் போலல்லாமல் தேசத்தைப் பாதுகாப்போம், தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்துவோம் என்று சூளுரைத்த ராஜபக்ஷக்கள் கொரோனா வைரஸ் என்ற கோர அரக்கனிடம் இருந்து மக்களைப் பாதுகாக்க முடியாமல் தவிக்கின்றனர்.

அதன் தாக்கத்தினால் தேச மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை – தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைத் தடுப்பதற்கு முதலாவது அலையில் செயற்பட்டது போன்ற செயற்பாட்டை அரச தரப்பிடம் காண முடியவில்லை. மாறாக அந்த அரக்கனுடன் சமரசம் செய்து கொண்டு வாழப்பழகிக் கொள்ளுங்கள் – வாழுங்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளதன் மூலம், மக்களைப் பாதுகாக்கின்ற தனது தலையாய பொறுப்பை அரசு கைகழுவி விட்டிருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.

Leave a Reply