கொரோனாத் தொற்றைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம் – த.காண்டீபன்

399 Views

இலங்கையில் பரவும் கொரோனா வைரஸ் வீரியம் கொண்டதென எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொற்றானது எவ்வித அறிகுறிகளும் இல்லாமலே மக்களிடத்தில் பரவி வருகின்றது என முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“கொரோனாத் தொற்றானது, தொற்று ஏற்பட்டாலும் எந்தவிதமான அறிகுறிகளையும் காட்டாமலேயே மக்களிடத்தே பரவிவருகின்ற காரணத்தினால், நாம் 14 நாட்கள் கடக்கும் வரையில் எவருக்கும் கொரோனாத் தொற்று இல்லை என்று கூறுவது கடினம்.

முக்கியமாக பி.சி.ஆர் பரிசோதனையின் பிரகாரமே அறிகுறி இல்லாதவர்களுக்கும், தொற்று இருக்கின்றதா, இல்லையா என முடிவுசெய்யவேண்டியுள்ளது.

அதேவேளை குறித்த கொரோனத் தொற்றானது பி.சி.ஆர் பரிசோதனையிலும் கிட்டத்தட்ட 70 வீதமானவர்களுக்கு தொற்று இருந்தால்கூட சாதாரண முடிவுகளைக் காட்டுகின்றது.

ஆகையினால் கொரோனாத் தொற்றைக் கண்டுபிடிப்பதென்பது மிகவும் கடினமான காரியமாகும்.

எனவே எமக்குச்சந்தேகமான அனைவரையும் சுய தனிமைப் படுத்தலிலோ, அல்லது மற்றவர்களுடன் சம்பந்தப்படாத ஓர் இடத்திலேயோ தனிமைப்படுத்துவதை நாம் வழக்கமாகக்கொண்டுள்ளோம்.” என்றார்.

அதே நேரம் களுபோவில போதனா வைத்தியாசாலையின் 15பி வோர்ட்டில் பணியாற்றிய மருத்துவர்கள் இருவரும் தாதியொருவரும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பழுதடைந்த பிசிஆர் இயந்திரம் திங்கட்கிழமையிலிருந்து மீண்டும் செயற்படும் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply