கொடிய போரிலும் கிடைத்த வளங்களைக் கொண்டு பட்டினிச் சாவைத் தவிர்த்த தமிழீழ அரசு

472 Views

உலகில் போர்கள் இடம்பெறும் போது நேரடியான போரில் மட்டுமன்றி பட்டினி ,நோய் போன்றவற்றாலும் அதிகளவு மக்கள் உயிரிழப்பது நாமறிந்த வரலாறு.

ஆனால் பாரிய பொருண்மியத் தடைகளை ஏற்படுத்தி, உணவுப் பொருட்களை அனுப்பாது, மக்களிடம் இருந்த உணவுக் களஞ்சியங்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டு மக்களின் வாழ்வாதாரங்களை முற்றாக அழித்தவாறு  ஒரு இனஅழிப்பு போரையே மேற்கொண்து சிறீலங்கா அரசு. ஆனால் அதனை எதிர்கொண்டு தமது மக்களை பட்டனிச்சாவில் இருந்து காப்பாற்றியிருந்தது எங்களது விடுதலை அமைப்பு.

தமிழீழ நிர்வாகக் கட்டமைப்பு தம்மிடம் இருந்த வளங்களைப் பயன்படுத்தி எவ்வாறு மக்களைப் பட்டினிச் சாவினைத்தவிர்த்தனர், விடுதலைப் புலிகள் சாவின் விழிம்பில் நின்று போராடிய போதும் மக்களுடன் இணைந்து கிடைத்த வளங்களைக் கொண்டு எவ்வாறு உணவைப் பகிர்ந்து கொண்டனர் என்பது தொடர்பிலும் தமிழீழ நிர்வாகக் கட்டமைப்பின் திட்டமிடல் பணிப்பாளராக பணியாற்றிய மூத்த போராளி ஒருவர் தெரிவித்த கருத்துக்களை இங்குதருகின்றோம்.

2009 ஆம் ஆண்டு போர் உக்கிரமாக இடம்பெற்ற போது மக்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது நாம் இரணைப்பாலைப்பகுதியில்  தங்கியிருந்தோம். இடம்பெயர்ந்த மக்கள் மாத்தளன் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். மிகவும் களைப்பாக இருந்த மக்கள் பட்டினியுடனே தமது பயணத்தை மேற்கொண்டு வந்தனர். இவர்களில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் நிலை மிகவும் வேதனை தந்தது.

எனவே இந்த மக்களின் பட்டினியை போக்கி அவர்களை காப்பாற்றும் திட்டம் தொடர்பில் சிந்தித்தோம். ஆனால் அப்போது எம்மிடம்  இருந்தஉணவுக் கையிருப்பு, அதனை இலகுவாக தயாரித்து  எல்லா மக்களுக்கும் வழங்குவதற்குரிய உரிய நடைமுறைச் சாத்தியம் குறித்தும் கஞ்சி தயாரித்து வழங்குவது குறித்தும் ஆலோசித்தோம்.அந்த யோசனை எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. நாம் வழங்கும் ஒரு வேளைக் கஞ்சி அவர்களின் பசியை ஒரளவேனும் போக்குவதுடன் அவர்களின் உணவுடன் சேர்வதால் பட்டினிச்சாவில் இருந்து மக்களை காப்பாற்றும் என நாம் நம்பினோம்.97510754 3684875641525992 505803996208824320 n கொடிய போரிலும் கிடைத்த வளங்களைக் கொண்டு பட்டினிச் சாவைத் தவிர்த்த தமிழீழ அரசு

அதற்கான வளங்கள் மற்றும் இதர ஏற்பாடுகள் திட்டமிடல்கள் தொடர்ந்தன. முதலில் இரணைப்பாலையில் உள்ள  ஒரு கொட்டகையில் நாம் தயாரித்த  கஞ்சியை வழங்கினோம். அப்போது எம்மிடம் போதிய பொருட்கள் இருந்ததால் சுவையான பால் கஞ்சியை வழங்கினோம். அதிகளவில் பசியால் வாடிய சிறுவர்களும் குழந்தைகளும் அதனை விரும்பி உண்டனர்.

இதனை அவதானித்த விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர்  பா.நடேசன் அவர்கள் மக்களின் பசியை போக்கும் இந்தத் திட்டத்தில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தையும் ஈடுபடுத்தியதுடன், தம்மாலான உதவிகளையும் வழங்கினார்.

ஆனந்தபுரத்தில் பிடுங்கப்பட்டதேங்காய்கள், தமிழீழ அரசிடம் இருந்த அரிசி, காடுகளில் சேகரிக்கப்பட்ட விறகு மற்றும் தண்ணீர் என்பவற்றை இந்த நிலையங்களுக்கு விநியோகம் செய்வதற்கு தனித்தனி குழுக்களைஅமைத்தோம்.

ஒரு நிலையம் பின்னர் 3 ஆக மாறியது, அதுவே பின்னர் பல இடங்களில் விரிவாக்கம் பெற்றது. போராளிகள் மட்டுமல்லாது மக்களும் எமதுநிலையங்களுக்கு வந்து உதவினார்கள். அரச பணியாளர்கள், கூட்டுறவுச்  சங்க உறுப்பினர்கள் என பெருமளவானவர்கள் மக்களின் பசியை போக்கி சிறீலங்கா அரசு எதிர்பார்த்த பட்டினிச் சாவை வரவிடாமல் தடுத்தனர். எமது போராட்டத்தை நாம் வெல்ல வேண்டும் என்ற மனநிலை எல்லா மக்களிடமும் இருந்ததை நாம் கண்டபோது எமக்குப்  பெருமையாகஇருந்தது.

எதிரி எமது உணவுக் களஞ்சியங்களைஅழிப்பான் என்பது எமக்கு தெரியும், எனவே நிர்வாக சேவையிடமும், புனர்வாழ்வுக்கழகத்திடமும் இருந்த வாகனங்களில் தான் நாம் உணவை சேமித்து வைத்திருந்தோம். இந்த உத்தியானது உணவுக் கையிருப்பை எதிரியிடம் இருந்து பாதுகாப்பதற்கும் மக்கள் இடம்பெயரும்போது அங்குஉடனடியாக நகர்த்துவதற்கும் உதவியது.

சிறீலங்கா அரசின் போர் உக்கிரமடைய எமது மக்களின் நெருக்கடிகள் மேலும் அதிகரித்தது. அவர்களுக்கான உணவுத் தேவையும் அதிகரித்தது. மூன்று நிலையங்கள் 22 நிலையங்களாக மாற்றம் பெற்றது. ஒவ்வொரு நிலையத்திலும் 3 கிடாரங்களில் கஞ்சி தயாரிக்கப்பட்டது. மக்களிடம் இருந்து அதற்குரிய கிடாரங்களை பணம் கொடுத்தே வாங்கினோம். எந்த பொருளையும் இலவசமாகப் பெற எமது நிர்வாகம் விரும்பவில்லை.

புனர்வாழ்வுக்கழகம் கஞ்சிக்கு அப்பால் தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர் ஆகாரமும் வழங்கியது. அதே சமயம் கிடைத்த கோதுமை மாவைக் கொண்டு வாய்ப்பன் தயாரித்து வாகனங்களில் கொண்டு சென்று மக்களுக்கு வழங்கினோம். ஓவ்வொரு குடும்பத்துக்கும் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்கினோம்.

இரணைப்பாலை பகுதியில் நாம் இருந்தபோதே சிறீலங்கா அரசின் இறுதியான உணவுப் பாரஊர்தி வந்தது. அதற்கு பின்னர் அரசின் உணவு விநியோகம் பெரிதாக இருக்கவில்லை கடற் பகுதியில் இருந்து சில பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. 70 ஆயிரம் மக்களே உள்ளனர் என மக்களின் எண்ணிக்கையை குறைவாக கூறிய அரசு, அவர்களுக்கு போதுமான உணவு உள்ளது எனத் தெரிவித்து உணவு விநியோகத்தை நிறுத்திக் கொண்டது.

ஆனாலும் தமிழீழ நிர்வாக சபையின் சிறந்த திட்டமிடலினால் எம்மிடம் மே 15ஆம் நாள்  வரை விநியோகம் செய்வதற்கான பச்சை அரிசி போதிய அளவில் இருந்தது. ஆனால் உப்பு, தேங்காய் போன்றவற்றை பெற முடியவில்லை. எனவே இறுதி நாட்களில் உப்பு மற்றும் தேங்காய் பால் இல்லாத சுவையற்ற கஞ்சியையே நாம் வழங்கினோம்.mu lll கொடிய போரிலும் கிடைத்த வளங்களைக் கொண்டு பட்டினிச் சாவைத் தவிர்த்த தமிழீழ அரசு

எல்லா நிலையங்களையும் சென்று பார்வையிட்டு தேவைப்படும் விநியோகங்களையும் சீர்படுத்தினோம். காலை வேளையில் எறிகணைத்தாக்குதல்  குறைவாக இருந்தால் எல்லா நிலையங்களுக்கும் நீர், அரிசி மற்றும் விறகு போன்ற தேவையான பொருட்களை அதிகாலையில் விநியோகம் செய்து வந்தோம்.

காலை 10 மணிக்கு முன்னர் மக்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும்,வைத்தியசாலை பணியாளர்கள் மற்றும் வைத்தியர்களுக்கும் நாம் கஞ்சியை வழங்கி விடுவதுண்டு.
ஒரு கட்டத்தில் களஞ்சியங்களில் இருந்தபொருட்களை எம்மால் எடுக்க முடியாது போனபோது, நாம் வாகனங்களில் சேமித்தஉணவுப் பொருட்களை பயன்படுத்தினோம்.

தமது வயிற்றுப் பசிக்காக கஞ்சியை வாங்குவற்கு வரிசையில் நின்றவர்கள் மீதும் வேவு விமானம் மூலம் தகவல்களைத் திரட்டிய சிறீலங்கா அரசு எறிகணைத்தாக்குதல்களை மேற்கொண்டது. சிறுவர்கள் உட்பட பலர் பலியாகினர், பலர் காயமடைந்தனர். இது பல நிலையங்களில் இடம்பெற்றது.

எனது நிலையத்தில் உணவுக்காக காத்திருந்த வயோதிபர் ஒருவர் எறிகணைத் தாக்குதலால் தனது காலை இழந்த சோகம் தற்போதும் எனதுமனதில்  உள்ளது. இருந்த போதும் எமது மக்களை நாம் பட்டினிச்சாவில் இருந்து காப்பாற்றிய மன நிறைவு எங்களிடம் இப்போதும் உண்டு. மிலேச்சத்தனமான, மனித நேயமற்ற தாக்குதல்களுக்கும் இறுக்கமான பொருளாதாரத் தடைகளுக்கும் மத்தியில் ஒரு பட்டினிச்சாவு கூட இடம் பெறாமல் எமது விடுதலை அமைப்பு மக்களைக் காத்தது.

இந்த விடயத்தில் நாம் சிறீலங்கா அரசுக்கு தோல்வியையேகொடுத்திருந்தோம்.
இதில் மக்கள், போராளிகள், அரசபணியாளர்கள், நிர்வாகக் கட்டமைப்புக்கள்,கூட்டுறவு  சங்கங்கள் என எல்லோரினதும் பங்களிப்பு அளப்பரியது, யாரும் அங்கு சுயநலம் பார்க்கவில்லை. இரவு பகலாக பணியாற்றினார்கள். நாம் ஒற்றுமையாக நின்று எமது மக்களை காப்பாற்றினோம்.

எத்தனையோ விடுதலைப் போராட்டங்களில் மக்களின் உணவை கொள்ளையடித்த சம்பவங்கள் நிகழ்ந்தன. பெருமளவானவர்கள் பட்டினியால் மடிந்த சரித்திரங்களும் உண்டு. ஆனால் எமது விடுதலைப் போரில் தான் போரளிகள் மக்களுடன் இணைந்து தமக்குக் கிடைத்த உணவை பகிர்ந்து உண்டனர். மக்களை காப்பாற்றி தமதுஉயிரைத் துறந்தனர்

Leave a Reply