கைதிகள் பரிமாற்றத்திற்கு இணங்கிய இஸ்ரேல்

இஸ்ரேல்- பாலஸ்தீனப் போரில் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்வதுடன், கைதிகளை பரிமாற்றம் செய்வதற்கும் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் அரசுகள் உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டார் அரசின் அனுசரணையுடன், அமெரிக்கா மற்றும் எகிப்த்து ஆகிய நாடுகள் இந்த முயற்சியில் தீவிரமாக ஈடபட்டிருந்தன.

படைத்துறை மற்றும் பொருளாதார ரீதியில் இஸ்ரேல் சந்தித்துவரும் இழப்புக்கள் மற்றும் பிணைக்கைதிகளை விடுதலை செய்யக்கோரி அவர்களின் உறவினர்கள் இஸ்ரேல் அரசின் மீது மேற்கொண்டுவரும் அழுத்தங்களே இஸ்ரேலின் இந்த முடிவுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஹாமாஸ் தன்னிடம் உள்ள பெண்கள் மற்றும் 18 வயதிற்கு குறைவானவர்கள் உட்பட 50 கைதிகளை விடுவிப்பதுடன், இஸ்ரேல் தன்னிடம் உள்ள 150 பாலஸ்தீனியர்களை விடுவிப்பது என்ற உடன்பாடு எட்டப்பட்டுள்ளதுடன்இ 4 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தத்தை மேற்கொண்டு உதவிப் பொருட்கள் காசா பகுதியை சென்றடைவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவது எனவும் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் அரசுகளுக்கு இடையிலான இந்த உடன்பாட்டை அமெரிக்கா, சீனா, ரஸ்யா, ஐக்கியநாடுகள் சபை உட்பட பல நாடுகள் வரவேற்றுள்ளன. மேலும் அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் அந்தோனி பிளிங்டனும் அடுத்த வாரம் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.