கேலிச்சித்திரங்களை முன்வைத்து அரங்கேறும் வன்முறைகளை ஏற்றுக் கொள்ள முடியாது – பிரான்ஸ் அதிபர் இமானுவேல்

373 Views

“முகமது நபி குறித்த கேலிச் சித்திர விவகாரத்தை முன்வைத்து பிரான்ஸில் நடைபெறும் வன்முறைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் இருந்து வெளியாகும் ‘சார்லி ஹெப்டோ’ என்ற வார இதழில் கடந்த மாதம்  முகமது நபிகள் குறித்த கேலிச் சித்திரம் மறுபிரசுரம் செய்யப்பட்டது. இது அங்குள்ள முஸ்லிம்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதேவேளை பாரிஸிலுள்ள பள்ளி ஒன்றில் கடந்த மாதம் 17ஆம் திகதி வரலாற்று ஆசிரியர் ஒருவர் முகமது நபிகளின் கேலிச்சித்திரத்தை மாணவர்களுக்கு காண்பித்து கருத்துச் சுதந்திரம் குறித்து பேசியதாக தகவல்கள் பரவியதையடுத்து அன்றைய தினமே ஒரு கும்பல்  அந்த ஆசிரியரின் தலையை வெட்டி அவரைக் கொலை செய்தது. பொலிசாரின் விசாரணையில் அவர்கள் ஐ.எஸ்.தீவிரவாதிகளாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பாரிஸின் நைஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் கடந்த வாரம் மர்ம நபர் ஒருவர் புகுந்து அங்கிருந்த 3 பேரை கத்தியால் தாக்கினார். அவர்கள் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். கொலையாளியை பொலிசார் தாக்கியதில் அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரும் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் நடந்த அன்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இஸ்லாம் மதம் குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரான்சிலும், மற்ற முஸ்லிம் நாடுகளிலும் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் பாரிஸில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அதிபர் அளித்த பேட்டியில் “முகமது நபி குறித்த கேலிச் சித்திரம் முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதை புரிந்து கொள்ள முடிகின்றது. அதே வேளை இந்த விவகாரத்தை முன்வைத்து நடைபெறும் வன்முறை வெறியாட்டங்களை ஒருபோதும் ஏற்க முடியாது” என்றார்.

Leave a Reply