குர்தீஸ்-ஈழத்தமிழர் கூட்டாெருமை எதற்காக? – ந. மாலதி

714 Views

குர்தீஸ் மக்களை போன்ற பலமற்ற மக்களுடன் நிற்பது வெற்றிக்கான திட்டம் போல தெரியாது தான். ஆனால் போராட்டம் என்பதே பலமற்ற மக்களின் கூட்டொருமையில் உருவாவது தான்.முள்ளிவாய்காலின் போதும், குர்தீஸ் மக்கள் உட்பட, அவர்களைப் போன்ற போராடும் மக்களே எம்மோடு நின்று தெருக்களில் போராடினார்கள். இன்றும் குர்தீஸ் மக்கள் எம்மோடு நிற்கிறார்கள்.

பல தசதப்தங்களாக, இன்னும் சொல்லப்போனால் பல நூற்றாண்டுகளாக தொடரும் ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றை இலகுவாக புரிந்து கொள்ள முடியாது என்பதை இதன் திருப்பங்களையும் திரிபுகளையும் தெரிந்தவர் அறிவார்கள். வலிமை மிக்க அரசுகளின் தலையீடுகள் உள்ள பல போராட்டங்களின் வரலாறுகளும் இவ்வாறு இலகுவாக புரிந்து கொள்ள முடியாதவை தான்.

வலிமை மிக்க அரசுகள் தங்கள் நலனுக்கு அமைய போராட்டத்தை திருப்ப முயல்வதாலேயே இவை புரிவதற்கு கடினமான வரலாறுகளாக உள்ளன. இவ்வலிமை மிக்க அரசுகள் மக்கள் போராட்டங்கள் தோல்வி அடைவதையே விரும்பும். அதற்கு பல காரணங்கள் உண்டு.

குர்தீஸ் மக்களின் போராட்டமும், குறிப்பாக இப்போது உலக செய்திகளில் தலைப்பு செய்தியாக இடம் பிடித்திருக்கும் கோபானே பிரச்சனையும், இப்படியானது தான்.

கோபானே சிரியா-துருக்கி எல்லையில் உள்ள நகரம். இதன் வரலாற்று திருப்பங்களையும் திரிபுகளையும் ஆழமாக நாம் அறிந்திராவிட்டாலும், இவர்களுடைய வரலாறு எமது வரலாறு போன்றதே என்பதை ஓரளவு இலகுவாக புரிந்து கொள்ளலாம். கோபானே நகரம் தாக்குதலுக்கு உள்ளாகுவதும், முள்ளிவாய்காலில் நாம் அனுபவித்து போன்றது தான்.

கோபானேயிலுள்ள குர்தீஸ் மக்கள், “மலைகள் மட்டுமே எமக்கு நண்பர்கள். வேறு நண்பர்கள் கிடையாது.” என்று சொல்கிறார்கள். நாமும் நண்பர்கள் அற்றவர்கள் தானே.

முள்ளிவாய்காலின் போதும், குர்தீஸ் மக்கள் உட்பட, அவர்களைப் போன்ற போராடும் மக்களே எம்மோடு நின்று தெருக்களில் போராடினார்கள். இன்றும் குர்தீஸ் மக்கள் எம்மோடு நிற்கிறார்கள். குர்தீஸ் மக்கள் போராட்டத்தின் வெற்றியும் ஈழத்தமிழர் போராட்டத்தின் வெற்றியும் நாம் ஒருவரை ஒருவர் ஆதரித்து சேர்ந்து போராடுவதிலேயே தங்கி உள்ளன. குர்தீஸ் மக்களை போன்ற பலமற்ற மக்களுடன் நிற்பது வெற்றிக்கான திட்டம் போல தெரியாது தான். ஆனால் போராட்டம் என்பதே பலமற்ற மக்களின் கூட்டொருமையில் உருவாவது தான்.

இப்படியான கூட்டொருமை ஊடாகவே போராட்டங்கள் வெற்றியடைகின்றன. பலமற்ற போராடும் மக்களுடன் இணையாத போராட்டம் போராட்டமல்ல. அவை அதிகாரத்திற்கான போர் மட்டுமே.

குர்தீஸ் மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் இச்சமயத்தில், அம்மக்களுடன் எமது கூட்டொருமையை வெளிப்படுத்தி அவர்களுடன் நின்று போராடுவோம்.

தற்போதைய கோபானே பிரச்சனையின் பின்னணி

சில வருடங்களுக்கு முன், இஸ்லாமிய ஐசிஸ் தீவிரவாதிகள் உலக செய்திகளில் தலைப்பு செய்திகளாக வந்தது பலருக்கும் நினைவிருக்கும். ஐசிஸ் தீவிரவாதத்தை உலகில் எல்லோருமே ஒரு பிரச்சனையாகத்தான் பார்த்தார்கள். ஐநா, ஐ-அமெரிக்கா, குர்தீஸ் மக்கள் எல்லோருமே. ஐசிஸ்ஐ தோற்கடிப்பதற்கு பலரும் ஒருங்கிணைந்த முயற்சி எடுக்கப்பட்டது.

ரோஜாவா சிரிய நாட்டின் ஒரு பகுதி. இது குர்தீஸ் மக்களின் அமைப்பான YPG இனது கட்டுப்பாட்டில் இருக்கிறது. ரோஜாவாவின் நகரமான கோபானே துருக்கியின் எல்லையில் உள்ளது. 2015 இல் ஐசிஸ் கோபானே மேல் மேல் தாக்குதல் நடத்தி அதை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நிலைக்கு வந்தது. அப்போதுதான் ஐ-அமெரிக்கா YPG க்கு ஆயுதங்கள் கொடுத்து ஐசிஸ்ஐ YPG தோற்கடித்தது. இன்றும் பல ஆயிரக்கணக்கான ஐசிஸ் அமைப்பை சேர்ந்தவர்களை குர்தீஸ் மக்கள் முகாம்களில் கண்காணித்து வந்தார்கள்.download 1 குர்தீஸ்-ஈழத்தமிழர் கூட்டாெருமை எதற்காக? - ந. மாலதி

ஐ-அமெரிக்காவும் துருக்கியும் குர்தீஸ் மக்களை எதிரிகளாகத்தான் கையாளுகின்றன. YPG உம் துருக்கியை மையப்படுத்திய குர்தீஸ் மக்களின் PKK அமைப்பும் சகோதர அமைப்புக்கள். PKK ஐ-அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட அமைப்பு. இப்போ கோபானேயின் குர்தீஸ் மக்களை அழிப்பதற்கு துருக்கிக்கு வழிவிட்டு ஐ-அமெரிக்கா விலகியிருக்கிறது. துருக்கியின் தாக்குதலுக்கு பின்னர் முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த ஐசிஸ் அமைப்பை சேர்ந்த பலர் தப்பி வெளியேறிவிடதாக சொல்லப்படுகிறது.

குர்தீஸ் பகுதிகளை தாக்குவதற்கு துருக்கிக்கு பச்சை வெளிச்சம் காட்டி விலகிய ஐ-அமெரிக்கா இப்போது துருக்கியின் தாக்குதலை நிறுத்த முயற்சிப்பது போல நடக்கிறது. ஏனெனில் YPG உடன் போட்ட ஒப்பந்தம் பிரகாரம் ஐ-அமெரிக்க பகைமை நாடுகளான சிரியாவும் சிரியாவின் நட்பு நாடான ரசியாவும் இப்போது ஐ-அமெரிக்கா விட்டுவெளியேறிய குர்தீஸ் பகுதிகளில் வந்திறங்கியிருக்கிறார்கள். துருக்கியின் தாக்குதல்கள் தொடர்கின்றன.

துருக்கியா, ஐசிஸ் அமைப்பா, சிரிய படைகளோ மிகவும் மோசமானவர்கள் என்று கேட்டபோது இவை மூன்றும் ஒரேயளவு மோசமானவையே என்கிறார்கள் குர்தீஸ் மக்கள்.

நாம் அறிந்திருக்க வேண்டிய ரோஜாவே முயற்சி

YPG உம் துருக்கியை மையப்படுத்திய குரதீஸ் மக்களின் அமைப்பான PKK உம் இணைந்தே செயற்படுகின்றன. 15 வருடங்களாக துருக்கி சிறையில் உள்ள PKK தலைவர் ஒசலான் சிறையிருந்து பல ஆக்கபூர்வமான சிந்தனைகளை எழுதி வருகிறார். பெண்களை மையப்படுத்திய சமூக புரட்சி பற்றியும் “மக்களால் சனநாயகம்” நடத்துவது பற்றியும் அவர் முன்வைக்கும் கருத்துக்கள் முக்கியமானவை. பெண்களை மையப்படுத்திய சமூகப்புரட்சி பற்றிய அவரது நூல், “சிறகு விரிக்கும் வாழ்வு” என்ற தலைப்பில் தமிழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

2015 இல் YPG ஐசிஸ்ஐ தோற்கடித்த பின்னர், ஒசலானின் சிந்தனைகளுக்கு அமைய குர்தீஸ் மக்களால் ரோஜாவாவில் எடுக்கப்படும் சமூக பரிசோதனைகள் பற்றி பரவலாக எழுதப்பட்டது.FB IMG 1570911331993 1 குர்தீஸ்-ஈழத்தமிழர் கூட்டாெருமை எதற்காக? - ந. மாலதி

தமிழீழத்தின் நடைமுறை அரசு என்ற பரிசோதனை எவ்வாறு அழிக்கப்பட்டதோ அதே போன்றுதான் இப்போது ரோஜாவாவின் பரிசோதனையும் அழிக்கப்பட போகிறது. அதனால்தான் இப்போது கோபானேயில் நடக்கும் அழிவு ஒட்டுமொத்த ஒடுக்கப்படும் மக்களின் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நிகழ்வு.

ஈழத்தமிழர் ஆகிய நாம் இதை புரிந்து கொண்டு இந்த மக்களுடன் கைகோர்த்து நிற்போம்.

 

Leave a Reply