குடியுரிமை மசோதாவை வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள்- வைகோ

412 Views

குடியுரிமை திருத்த மசோதாவை வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள் என்று ராஜ்யசபாவில் மதிமுக செயலாளர் வைகோ முழக்கமிட்டார்.

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா கடந்த 09ஆம் திகதி பாராளுமன்ற மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இன்று மாநிலங்கள் அவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இன்று மாலை 6மணியளவில் இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.

அந்த விவாதத்தில் வைகோ உரையாற்றும் போது,

நீண்ட காலமாக இந்தியாவில் இருக்கின்ற, இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் இந்தியாவில் குடியுரிமை கோருவதை இந்தத் திருத்தம் தடை செய்கின்றது.

ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகி, எங்கள் பெண்கள், எங்கள் சகோதரிகள், எங்கள் மக்கள் படுபயங்கரமாக, குரூரமாகக் கொலை செய்யப்பட்டனர். ஏதிலிகளாக வந்த அவர்களைப் பற்றி இந்த அரசிற்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் குடியுரிமையைப் பற்றி யோசிக்கக்கூட இவர்களுக்கு மனமில்லை.

இரத்தம் தோய்ந்த கரங்களோடு வந்த இலங்கை அதிபரோடு கைகுலுக்கி, கொஞ்சிக் குலாவத்தான் உங்களுக்கு நேரம் இருந்தது. ஈழத் தமிழர்களைப் பற்றி உங்களுக்கு கவலை இல்லை. இந்தச் சட்டத்தை வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள் என்று வைகோ ஆவேசமாக பேசினார்.

இதேவேளை, வைகோவிற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றுகையில், இலங்கையிலிருந்து வரும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண கடந்த காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது. இப்போது மற்ற மூன்று நாடுகளிலிருந்து வருபவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சட்டம் உருவாகின்றது. இலங்கைத் தமிழர்களுக்கு பாகுபாடு இல்லை. முன்னுரிமை மற்றும் சூழ்நிலையைப் பொறுத்து அகதிகளுக்கு இடமளிக்க நாடு சார்ந்த சட்டங்களை நாம் இந்த அவையில் எப்போதுமே இயற்றி வந்துள்ளோம். எனவே, வைகோ, திருச்சி சிவா போன்ற உறுப்பினர்களுக்கு இதுவே எனது பதிலாக இருக்கும் என்று கூறினார்.

Leave a Reply