கீழடியில் செய்யப்பட்ட அகழ்வாய்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்தங்கள் ஊரில் 2,600 ஆண்டுகால வரலாறு புதைந்து கிடந்தது குறித்து கீழடியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் மகிழ்ச்சியையும் வியப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடம் ஒன்றுக்கு உரிமையாளரான கருப்பாயி பிபிசி தமிழிடம் பேசுகையில், முதலில் இந்த இடம் தென்னந்தோப்பாக இருந்தது. வறட்சியின் காரணமாக மரங்கள் கருகி போனதால் செங்கல் சூளைக்கு மணல் எடுப்பதற்காக தோண்டியபோது முதலில் செங்கல் சுவர் ஒன்று காணப்பட்டது என்றார்.
அதனை தொடர்ந்து தொல்லியல் துறை சார்பில் இங்கு பல இடங்களில் தோண்டி பார்த்ததில் பழங்கால தமிழர்கள் வாழ்ந்த சுவடுகளான உறை கிணறு, செங்கல் சுவர், எலும்பு கூடுகள் என பலவும் மண்ணுக்கு அடியில் இருந்து எடுத்து வருவதாக தெரிவித்தார்.
“இந்த ஊர் இளைஞர்கள் இங்குதான் கிரிக்கெட் விளையாடுவோம். ஒரு நாள் செங்கல் சூளைக்காக மணல் தோண்டும்போது பழங்கால சுவடுகள் கிடைத்ததின் அடிப்படையில் இந்த பகுதியில் தொடர்ந்து தொல்லியல் துறையினர் அகழ்வாராய்ச்சி நடத்தி வந்தனர்.”
“இதில் தற்போது 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் இங்கு வாழ்ந்தது தெரிவந்துள்ளது. இது எங்களுக்கு மிக பெரிய வியப்பை ஏற்படுத்தியது. காரணம் பழங்கால தமிழர்கள் வாழ்ந்த ஊரில் நாங்களும் வாழ்ந்து வருவதுதான்,” என்று பிபிசி தமிழிடம் கீழடி இளைஞர் கருப்பசாமி தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிந்து, ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி மூலம், மதம் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாமல், படிப்பறிவு பெற்றவர்களாக வாழ்ந்துவந்த பழங்கால தமிழர்களின், சங்க கால நாகரிகத்திற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
எலும்பால் செய்யப்பட்ட எழுத்தாணி ஐந்தாம் கட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை காண்பதற்காக கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடத்திற்கு உள்ளுர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரலாறு பயின்று வரும் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள்,பொதுமக்கள், தொல்லியல் ஆர்வலர்கள் என பலரும் வந்து செல்கின்றனர்.
கீழடியில் தொல்லியல் துறை கண்டெடுத்த பொருட்கள்
எலும்புகளால் செய்யப்பட்ட எழுத்தாணி, தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பு, அரவைக் கல், பானை ஓடுகள்,ச துரங்கக் காய்கள், பகடைக் காய், மண் குடுவை, சூதாட்டத்தில் பயன்படுத்தப்படும் பவள மணிகள், சுடு மண் வார்ப்பு, காளையின் தலை, மனித உடல் பாகம், மனித தலை உருவம் போன்றவைகளும் கண்டறியப்பட்டுள்ளன.
மண் பானை, கறுப்பு சிவப்பு நிறப் பானை, கூர்முனைக் கொண்ட எலும்பு கருவிகள், நூல் நூற்கும் தக்களிகள் (ஆபரண மணிகளைக் கோர்க்கும் கருவி) , தங்க அணிகலன்கள், மணிகள் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளன.
குறிப்பாக 520க்கும் மேற்பட்ட விளையாட்டு பொருட்கள், சுடு மண்ணாலான 13 மனித உருவங்கள், 35 காதணிகள், மூன்று விலங்கு உருவங்கள், தங்கம், இரும்பு, செம்பு உலோக தொல்பொருட்கள் கிடைத்தன. ஆனால் இதில் சமய சார்ந்த கடவுள் வழிபாட்டுடன் தொடர்புடைய எந்தப் பொருட்களும் கிடைக்கவில்லை என அகழ்வாராய்ச்சி முடிவில் தெரிய வந்துள்ளது.
உயர் கல்விக்கு உதவும் ஆய்வு
கீழடி அகழ்வாய்வை காண வந்த கல்லூரி மாணவி பரமேஸ்வரி பிபிசி தமிழிடம் கூறுகையில், நான் தனியார் கல்லூரியில் வரலாறு பயின்று வருகிறேன். இங்கு கீழடியில் அகழ்வாரய்ச்சி நடைபெறுவதை அறிந்து அதனை பார்ப்பதற்காக இங்கு வந்தோம்.
அப்போது தொல்லியல் துறையால் கண்டு எடுக்கப்பட்ட பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருள்களை பார்த்தோம் இந்த பொருள்களால் பழங்கால மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் எந்த மாதிரியான ஆபாரணங்கள் பயன்படுத்தினார்கள் என்பது குறித்து தெரிய வந்தது. இது எங்களுக்கு சுவாரஸ்யமாக இருந்தது இது எங்களுடைய உயர் கல்விக்கு மிகவும் பயனுள்ளதாகவும், உதவியாகவும் இருக்கும் என்றார்.
நிலத்திற்கு கீழ் நீர் மற்றும் கனிம வளங்கள்
கீழடியில் கிடைக்கப்பெற்ற நாணயங்களை வைத்து பார்க்கும்போது பழங்கால தமிழர்கள் வணிக தொடர்புடன் வாழ்ந்தது தெரிய வந்துள்ளது. மேலும் இற்கு கண்டெடுக்கப்பட்டுள்ள உறை கிணறுகள், தமிழகத்தில் நிலத்திற்கு கீழ் கனிம வளங்கள் கிடைத்திருக்கிறது என்பதை காட்டுகின்றன.
தற்போதுள்ள சூழ்நிலையில் வைகை ஆற்றின் நீர் மட்டம் அதிக ஆழம் சென்றுள்ளதை சுட்டிக்காட்டுவதற்கு இதுவொரு சான்றாகும். அதேபோல இங்குள்ள சுவர் செங்கல் ஆகியவற்றை பார்த்தால் நிச்சயம் பழங்காலத் தமிழர்கள் கட்ட கலையில் சிறந்த திறமை படைத்தவர்கள் என்பது தெரிய வருவதாக பிபிசி தமிழிடம் கல்லூரி பேராசிரியர் செல்வி தெரிவித்தார்.
வகுப்பறைக்கும் கள ஆய்வுக்கும் உள்ள வேறுபாடு
கீழடி அகழ்வாராய்ச்சியை காண வந்த பேராசிரியர் பத்மாவதி பிபிசி தமிழிடம் பேசுகையில், “நேரடியாக கள ஆய்வை பார்ப்பதற்கும், புத்தகத்தை வைத்து மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்கும் மிக பெரிய வேறுபாடுகள் உள்ளன. கீழடியின் அகழ்வாராய்ச்சியால் மாணவர்களுக்கு வரலாற்று பாடத்தில் விருப்பம் அதிகரிப்பதுடன் வரலாற்று துறையில் ஆராய்ச்சி செய்யவும் மிகவும் உதவிகரமாக இருக்கும். மொஹஞ்சதாரோ, சிந்துவெளி நாகரிகம் குறித்து மாணவர்களுக்கு பாடம் கற்பித்து இருந்தாலும் கீழடியில் 2,600 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் வாழ்ந்தது தெரியவந்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. உலக நாடுகளில் பல நாடுகளில் உள்ள பழங்கால மக்களை குறித்து படித்து வந்த நிலையில் கீழடியில் 2600 ஆண்டு பழமையான மனிதர்கள் வாழ்ததை நேரடியாக அறிய முடிந்தது என்றார்.
இது குறித்து கீழடி அகழ்வாய்வு பொறுப்பாளர் ஆசை தம்பி பிபிசி தமிழிடம் கூறுகையில் “கார்பன் டேட்டிங் எனப்படும் கரிம பகுப்பாய்வுகள், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பீட்டா சோதனை ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தாலியிலுள்ள பைசா பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் துறையில், பானை ஓடுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன,” எனத் தெரிவித்தார்.
புனேவிலுள்ள முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான டெக்கான் கல்லூரியில் எலும்புத் துண்டுகள் பகுப்பாய்வுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த அகழ்வாய்வில் சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரிகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழ்வாராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளன என ஆசை தம்பி தெரிவித்தார்.
இங்கு கிடைக்கப்பெற்ற பொருட்கள் உலகப் புகழ்பெற்ற அறிவியல் கூடங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. கரிம பகுப்பாய்வு முறைப்படி, கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தமிழ் பிராமி எழுத்து பொறித்த பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அகழாய்வு இடத்தில் உள்ள எலும்புத் துண்டுகள் மூலம், திமிலுள்ள காளை, பசு, எருமை, ஆடு ஆகியவை வேளாண்மைக்கு உதவும் வகையில் கால்நடைகளாக வளர்க்கப்பட்டன என தெரியவந்துள்ளது.
சன்னமான களிமண், செங்கல், சுண்ணாம்பு சாந்து, இரும்பு ஆணிகள் பயன்படுத்தி கட்டுமானத் தொழில்நுட்பத்தில் வீடுகள் கட்டப்பட்டிருந்தது அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் சமய சார்ந்த கடவுள் வழிபாட்டுடன் தொடர்புடைய எந்த அடையாளப் பொருட்களும் அங்கு கிடைக்கவில்லை என கூறினார்.