கிழக்கில் 127 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

308 Views

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் கொரோனா தொற்றுள்ளவர்கள் 127பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

நேற்று மூன்று நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,

“நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் ஒருவர் அக்கரைப்பற்றில் அடையாளம் காணப்பட்டவர்.இவர் கொழும்பு-அக்கரைப்பற்று தனியார் பஸ் சாரதியாக கடமையாற்றுபவர்.குறித்த சாரதியுடன் நேரடியாக தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பேலியகொட மீன்சந்தையுடன் நேரடியாக தொடர்புபட்டவருக்கு தொற்று உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கெனவே சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்.

அதேபோன்று ஆரையம்பதி சுகாதார பிரிவின் ஒல்லிக்குளம் பகுதியில் 37வயதுடைய பெண்னொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரும் கொழுப்புக்கு சென்றுவந்தவர். இவருடன் நேரடியாக தொடர்புகொண்டவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணாத்தில் ஐந்து வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். பேலியகொட கொத்தனியின் பின்னர் இதுவரையில் 881பேர் எங்களால் பராமரிக்கப்பட்டுள்ளனர். ஐந்து வைத்தியசாலையில் இன்றைய நிலவரத்தில் 228நபர்கள் தற்போது சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

இதேபோன்று இன்னும் மேலும் நான்கு வைத்தியசாலைகள் தயார்படுத்தப் பட்டு வருகின்றன. குச்சவெளி வைத்தியசாலை, பெரியகல்லாறு வைத்தியசாலை, பாலமுனை வைத்தியசாலை, தமன வைத்தியசாலை என நான்கு வைத்தியசாலைகள் 450 நோயாளர்களை பராமரிக்ககூடியவாறு தயார் படுத்தப்படடு வருகின்றது.

எதிர்வரும் காலத்தில் அனைத்து வைத்தியசாலைகளிலும் 950 கொரோனா தொற்றாளர்களை தொற்று இருக்கலாம் என சந்தேகிப்பவர்களையும் பராமரிக்கின்ற வைத்தியசாலைகளாக செயற்படவுள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் கிழக்கு மாகாணத்திற்கு வெளியே சென்று இங்கு தொற்றினை கொண்டுவந்துள்ளார்கள். யாராவது வெளி மாகாணத்தில் இருந்து எமது மாகாணத்திற்கு வரும்போது தாங்களாகவே தங்களை அடையாளப்படுத்துங்கள். அதன் பின்னர் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் உங்களை தனிமைப்படுத்துவதா இல்லையா என்பதை தீர்மானிப்பார்கள்.

நாங்கள் இந்த கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த வேண்டுமானால் கிழக்கு மாகாணத்தில் காத்திரமான முடிவுகளை கிழக்கு மாகாணத்தில் எடுக்கவேண்டியுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் அனைத்து போக்குவரத்து பாதைகளும் பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் பொதுச்சுகாதார பரிசோதகரின் வழிகாட்டலின் கீழ் ஐந்து நபர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுக்கள் தொடர்ச்சியான கண்காணிப்பில் ஈடுபடுகின்றது.

எங்களால் வழங்கப்படும் அனைத்துவிதமான சுகாதார வழிமுறைகளையும் கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டிய நிலையுள்ளது. கொரோனா தொடர்பில் ஆரம்பத்தில் விழிப்புணர்வுடன் செயற்பட்டாலும் ஆனால் தற்போது மீண்டும் பழைய நிலையில் செயற்படுகின்றனர்.

ஆனால் தொற்றின் தாக்கம் அதிகரித்துச் செல்கின்றது. மேல்மாகாணத்தில் தினமும் அதிகளவில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். குறித்த பகுதியுடன் கிழக்கு மாகாணத்திற்கு தொடர்புகள் காணப்படுகின்றன. தினமும் பிராயணங்கள் நடைபெறுகின்றன. இவற்றினை நாங்கள் நூறுவீதம் தடுக்கமுடியாது.

சரியான சுகாதார வழிமுறைகளையும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளையும் தொடர்ச்சியாக கண்காணிக்கும்போது தொற்றினை கிழக்கில்   தடுக்கமுடியும்” என்றார்.

Leave a Reply