திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பகுதியில் கடந்த மூன்று தினங்களாக குடி நீர் இன்றி மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊடான நீர் வெட்டு மூன்று நாட்கள் அமுலில் இருந்த நிலையில் குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனை நிவர்த்திக்கும் வகையில் இன்று (09)கிண்ணியா நகர சபை ஊடாக 6000 லீற்றர் கொள்ளளவு கொண்ட பவுசர் மூலமாக குடி நீர் விநியோகிக்கப்பட்டது. பொது மக்களின் முறைப்பாட்டுக்கமைய கிண்ணியா நகர சபை செயலாளர் எம்.கே.அனீஸ் அவர்களின் அதிரடி நடவடிக்கையால் பெரியாற்று முனை,பெரிய கிண்ணியா உட்பட பல பகுதிகளில் உள்ள மக்களுக்கு நீர் விநியோகிக்கப்பட்டன.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மூலம் தம்பலகாமம் பகுதியில் திருத்த வேலை காரணமாக நீர் துண்டிக்கப்பட்டாலும் கூட உரிய நேரத்துக்கு நீர் வழங்க முடியாமல் போனதால் குடி நீருக்கான தட்டுப்பாடு நிலவியுள்ளதுடன் இதனால் பாடசாலை மாணவர்கள் ,அரச உத்தியோகத்தர் உட்பட சரியான நேர காலத்துக்கு பாடசாலை அலுவலகம் செல்ல முடியாது தவிக்கின்றனர்.
கிண்ணியாவில் தொடர்ந்தும் இந்த நிலை அடிக்கடி ஏற்படுவதுடன் சீரான குடி நீர் விநியோக முறை இன்மையாலும் மக்கள் அவதியுறுவதாக தெரிவிக்கின்றனர். பல வருட காலமாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊடான நீர் விநியோகம் சீராக இயங்குவதில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர். நீர் கட்டணத்தை மாத்திரம் அதிகரித்து விட்டு நீர் விநியோகத்தில் மந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அடிக்கடி திருத்த வேலை நீர் வெட்டு என மக்களை தொடர்ந்தும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி வருகின்றனர் நீண்ட காலமாக இந்த பிரச்சினை தீராத பிரச்சினையாக உள்ளது.எனவே குடி நீர் சீராக தடைப்படாலம் முன் அறிவித்தலின்றிய நீர் வெட்டு போன்றவற்றை கவனத்திற் கொண்டு சீரான குடி நீரினை தினமும் பெற்றுத் தருமாறு உரிய அதிகாரிகளிடத்தில் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்