காஷ்மீர் நிலச் சட்டம் – மத்திய அரசின் விளக்கம்  பொய்

காஷ்மீரில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலம் தொடர்பான சட்டங்களுக்கு மத்திய அரசு கொடுத்துள்ள விளக்கம் “பொய்களின் மூட்டை” என்றும் குடியேற்றத்தை ஊக்குவிப்பதற்கான முயற்சி ‘ என்றும் ‘குப்கார் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி’ விமர்சித்துள்ளது.

ஏற்கனவே நடைமுறையில் இருந்த சட்டங்கள் “பழமையானது மற்றும் பிற்போக்கானது” என்று அரசின் செய்தித்தொடர்பாளர் ரோகித் கன்சாலின் கருத்திற்குப் பதில் அளித்துள்ள கூட்டணியின் செய்தி தொடர்பாளர், காஷ்மீரில் நடைமுறையில் இருந்த சட்டங்கள் “ஒட்டு மொத்த இந்தியாவிலேயே, மிகவும் முற்போக்கானவை, மக்கள் நலன் சார்ந்தவை, விவசாயிகளுக்கு ஆதரவானவை” என்று கூறியுள்ளளார்.

“அடிப்படையான நிலச்சட்டங்களைத் திரும்ப பெற்றதும், இன்னும் பிற சட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள பெரிய திருத்தங்களும், காஷ்மீர் மக்களின் உரிமையைப் பறிப்பதற்கும், குடியேற்றங்களை ஊக்குவிக்கவும் மேற்கொள்ளப்பட்டதாகும்” என்று கூறியுள்ள அவர் இதற்கு முன் நடைமுறையில் இருந்த சட்டம் “மறைமுக நிலபிரபுத்துவ” சுரண்டலை ஒழித்ததாகவும் கூறியுள்ளார்.

“இதைப் பழமையான சட்டம் என்று கூறுபவர்கள், காஷ்மீரின் வரலாற்றை மதிக்காத குற்றத்தைச் செய்கிறார்கள். சரியான தருணத்தில் செய்யப்பட்ட நில சீர் திருத்தங்கள்தான் ஜம்மு காஷ்மீரில் பசியால் உயிரிழப்பு மற்றும் விவசாயிகள் தற்கொலையை இல்லாமல் செய்தது” என்ற குப்கார் பிரகடனத்திற்கான கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

அரசியல் சாசனம் பிரிவு 370ன் கீழ், காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்து சிறப்பு அந்தஸ்தைக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி மத்திய பாஜக அரசு திரும்ப பெற்றது.

சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்கும் நோக்கத்தில் காஷ்மீரில் செயல்படும் 6 முக்கிய அரசியல் கட்சிகள் உட்பட பல அமைப்புகள் ஒருங்கிணைந்து குப்கர் பிரகனடத்தை வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து சமீபத்தில் ‘குப்கார் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.