கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகின்றமையானது மக்களின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதோடு நாட்டில் மக்களின் பாதுகாப்பு சரிவடைந்துள்ளமையையும் தெளிவாகக் காண்பிப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தவிர்ப்பதற்காக முன்னெடுக்கப்படவுள்ள நவடிக்கைகள் தொடர்பில் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் அறிவிக்குமாறு பொலிஸ்மா அதிபர் சி.டீ.விக்கிரமரத்னவிற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பொலிஸ்மா அதிபர் சி.டீ.விக்கிரமரத்னவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,
“கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு மற்றும் பாணந்துரை வடக்கு காவல்துறையினரின் பாதுகாப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் கடந்த 3 ஆம் திகதி மற்றும் 6 ஆம் திகதிகளில் உயிரிழந்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்ட மூலத்தின் 14 ஆவது உறுப்புரைக்கமைய இந்த உயிரிழப்புக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த இரு சந்தேகநபர்களும் காவல்துறையினரின் பொறுப்பிலிருந்த போது உயிரிழந்துள்ளதோடு , அவர்கள் கைது செய்யப்படும் போது கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அதற்கமைய கடந்த சில தினங்களுக்குள் காவல்துறையினரின் பொறுப்பின் கீழுள்ள சந்தேகநபர்களின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினைகள் தோன்றியுள்ளமையை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானித்துள்ளது.
1978 ஆம் ஆண்டு அரசியமைப்பின் 11, 13 (4) உறுப்புரைகள் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள வழக்கு தீர்ப்புகளுக்கமைய 2021.05.17 மற்றும் 2020.10.21 ஆகிய தினங்களில் உங்களுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காரணிகளை மீண்டும் உங்களது அவதானத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம்.
ஜனநாயக நாடொன்றில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமையானது நீதி நியாயங்கள் தொடர்பில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை இல்லதொழிந்து கொண்டிருக்கிறது என்பதே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிலைப்பாடாகும்.
எனவே இதுபோன்று சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தவிர்ப்பதற்காக உங்களால் முன்னெடுக்கப்படவுள்ள நவடிக்கைகள் தொடர்பில் நாளை ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இந்த அறிவிப்பினை 1996 (21) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே வெளியிடுகின்றோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.