காலநிலை முற்றாக சீரழியும் காலப்பகுதியில் நாம் வாழ்கின்றோம் – ஐ.நா

மனிதர்களின் வரலாற்றில் இந்த வருடமே மிகவும் வெப்பமான வருடம் என டுபாயில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகிய கோப்-28 (COP28) என்ற காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அன்ரனியோ குட்ரெறஸ் தெரிவித்துள்ளார்.

காலநிலை முற்றாக சீரழியும் காலப்பகுதியில் நாம் வாழ்கின்றோம். இதனை தடுப்பதற்கு அனைத்துலக சமூகம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அவர்களின் தற்போதைய பங்களிப்பு போதாது. அந்தாட்டிகாவில் உள்ள பனிப்பாறைகளின் அளவு மிகவும் குறைந்துள்ளது. கடல் மட்டம் உயர்ந்து வருகின்றது, அதிக வெள்ளப்பெருக்கு, மற்றும் காட்டுத் தீ என்பனவும் இந்த வரும் ஏற்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் வெப்பநிலையே வரலாற்றில் அதிகமானது என உலக காலநிலை அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த வருடம் தற்போதைய விட அதிகரிக்கலாம் எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

டுபாயில் இடம்பெற்றுவரும் இந்த மாநாட்டில் பல நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், காலநிலை செயற்பாட்டாளர்கள் என 70,000 இற்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

தான் வாழும் ஹிமாலையா பிரதேசத்தில் அதிக மாற்றங்கள் நிகழ்வதை தன்னால் காணக்கூடியதாக உள்ளதாக நேபாளத்தை சேர்ந்த 17 வயதாக சிரேயா தெரிவித்துள்ளார்.