‘காந்திய தேசத்திடம் அரசியல் தீர்வுக்காக கையேந்துவது எவ்வகையில் அறம்’

589 Views

தமிழ் அரசியல் தலைமைகள் காந்திய தேசத்திடம் அரசியல் தீர்வுக்காக கையேந்துவது எவ்வகையில் அறமாகும்  என ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.

ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் துளசி  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

“உலகில் நடைபெற்ற அடக்கு முறைகளுக்கெதிரான அத்தனை போராட்டங்களும் வெற்றி பெற்றதின் பின்னர்தான் விடுதலைப் போராட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதுவரையில் அவ்வகையிலான போராட்டங்கள் தீவிரவாதம் என்றும் பயங்கரவாதம் என்றும் முத்திரை குத்தப்பட்டு இழிவுபடுத்தப்பட்டதே வரலாறு.

இலங்கை சுதந்திரத்திற்கு பின்னர் ஆட்சியாளர்கள் தமது ஆட்சியுரிமையை தொடர்ந்து கொண்டு செல்வதற்கும் தேர்தல் வெற்றிகளுக்கும் கையிலே எடுத்துக்கொண்ட கோசமே தனிச்சிங்கள பெரும் தேசியவாதமாகும். அதுவே இலங்கைத்தீவின் இற்றைவரையிலான பெரும் துயரங்களுக்கு வழிகோலியது. இனக்கலவரங்களின் உச்ச துன்பங்களை தொடர்ந்தே தமிழினம் தமை தற்காத்து கொள்வதற்காகவே ஆயுதமேந்தியது என்பதே வரலாறு.

தமது இளமைக்கால கல்வி கனவுகள் உறவுகள் அனைத்தையும் துறந்து எமது மக்கள் கௌரவமாகவும் பாதுகாப்போடும் வாழவேண்டுமென ஆயுதமேந்திய அத்தனை இளையோர்களும் மானிட விடுதலையை நேசித்தவர்களே. அந்த மானமறவர்களை நெஞ்சத்தில் இருத்தி நினைவேந்தி பூஜிப்பது தமிழினத்தின் நன்றி உணர்வையும் மன ஆற்றுகையையுமே ஏற்படுத்தும் என்பதே உண்மை.
வெளிப்படையான நினைவேந்தல்கள் எவ்வகையான பாதுகாப்பு பாதிப்புகளையும் ஏற்படுத்தபோவதில்லை.

அன்பான உறவுகளே இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றங்களும். அதற்கு வலுச்சேர்த்துள்ள 20 திருத்தச்சட்ட நிறைவேற்றமும் கருத்தில்கொள்ளபட வேண்டியவையே யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர்களே தற்போது சர்வ வல்லமையோடும் ஆட்சி அமைத்திருக்கிறார்கள்.

யார் போர்களை நடத்துகிறார்களோ அவர்களே சமாதானம் பேசவும் தகுதி உடையவர்கள். ஆகவே உசிதமான வழிமுறைகளின் ஊடாக தமிழினத்தின் உரிமைசார் விடயங்களையும் குறிப்பாக இனத்தின் எதிர்கால இருப்பையும் உறுதிசெய்யும் வகையில் இலங்கை அரசோடு நாம் பேசத்தொடங்க வேண்டும்.

தமிழர் அரசியற்தலைமைகள் தெற்கின் இரு ஆட்சியாளர்களையும் கையாளுவதில் காட்டப்படுகின்ற முரண்நிலை அரசியல்போக்கு எமது மக்களுக்கு நன்மை பயக்கபோவதில்லை. தமிழர்களது ஆயுத பலம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டதன் பின்னரும் தமிழ் மக்களது அரசியல் பிணக்கு தீர்க்கப்படவில்லை. அதற்கான முனைப்புக்களும் நம்பிக்கை தருவதாக இல்லை.

இலங்கையில் தமிழர்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட்டபோது சில ஆயிரம் மக்கள் கொண்றொழிக்கப்பட்டிருந்த நிலையில் எங்கள் இளையோர் கைகளில் ஆயுதங்களை கொடுத்தது காந்தியதேசம்.

அவர்கள் எங்களது பிணக்குகளை தீர்க்க ஆயுதங்களை தரவில்லை தங்களது பிராந்திய நலன் சார்ந்து எங்களை கையாண்டார்கள். இதனாலேயே சுமார்மூன்று தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப்போரிலே களத்திலே மரணித்த 40000 மேற்பட்டவர்கள். யுத்தவலயத்திலும் பல்வேறுபட்ட தமது சொந்த நிலங்களிலும் படுகொலை செய்யப்பட்ட பல இலட்சக்கணக்கான அப்பாவி தமிழ்மக்கள்.
இன்று பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்த பத்து இலட்சத்திற்கும் அதிகமான எமது ஈழ மக்கள் இதுவே எமக்கு கிடைத்த அவலங்கள்.

இந்த நிலைக்கு பின்னரும் தாம் இழைத்த அநீதிகளுக்கு பரிகாரம் தேடாமல் தனது சொந்த பிராந்திய நலன்களுக்கு இன்னமும் தமிழர்களது பிரச்சினைகளை கையாள முயல்வது வேதனை அளிக்கிறது.

தமிழர்களுக்கு நீதியான நியாயமான பதில்கள் இன்றுவரை காந்திய தேசத்திடம் இல்லை. இந்நிலையில் இன்றும் எமது அரசியல் அவலம் இன்னமும் தமிழ் அரசியல் தலைமைகள் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயங்களில் அவர்களிடம் கையேந்தி நிற்பது எவ்வகை அறம் என தெரியவில்லை

அன்பான உறவுகளே எம் மான மறவர்களை மனதில் பூஜிக்கும் இந்நாளில் எமது மக்களின் கௌரவமான பாதுகாப்பான இருப்புக்காக நாம் புதிய பாதைகளை திறந்தே ஆக வேண்டும். தற்போதைய சூழமைவில் இருக்கின்ற அத்தனை கதவுகளையும் நாம் திறந்து பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம். இராம இராச்சியங்களை நம்பி தொடர்ச்சியாக எமது மக்களை மோசமான இடர்பாடுகளோடே நகர்திச்செல்ல முடியாது.

புதிய ஆசிய பிராந்திய வல்லாதிக்க சக்திகளோடு தமிழர்களின் அரசியல் செல்நெறிபோக்கினை எமது இனத்தின் நலன் சார்ந்து கையாள்வதே நன்மையாகும். அதனடிப்படையில் தாயகத்திலும் சர்வதேசங்களிலும் வாழ்கின்ற
எமது மக்கள். எமது மக்களுக்காக தமது மிகச்சிறந்த வாழ் நாட்களை அர்ப்பணித்த போராளிகள். மாவீரம் சுமந்த பெற்றோர் உரித்துடையோரினையும் இணைத்து காத்திரமானதும் உண்மையானதுமான ஒரு அரசியல் பயணத்தை முன்னெடுக்க இந்த புனித நாளில் திடசங்கற்பம் பூணுகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply