காந்தள் கிழங்குகளே -வெற்றிச்செல்வி

காந்தள் கிழங்குகளே

மனசுக்குள் புதைந்திருக்கும் காந்தள் கிழங்குகளே

மழையின் துளிர்த்தலால் சிலிர்க்கும் மண்ணிலே

நீங்கா இடம் பிடித்து நின்றுலவும் உங்களது

கனவுகள் சுமந்தபடி பயணம் தொடர்கிறோம்.

 

ஆக்க நினைத்ததும் நீக்க நினைத்ததும்

ஆகும் நீங்கும் என்ற கனவில் விழி மூடினீர்கள்.

விழித்த மனதில் புதிய விதையாய் நிலை நாடினீர்கள்

கனவின் தொடர்ச்சி நீளும் நாளுமெனச் சுடராகினீர்கள்.

 

அக்கினிக் குஞ்சென வாழ்ந்தீர் இருள் எரிக்க

ஆகாய விரிப்பில் மலர்ந்தீர் வீரம் சிறக்க

காற்றின் மொழியில் கடலில் அலையில் கடும்

கானகம் வெளியில் புயலில் வெய்யிலில்…

 

சிவப்பு மஞ்சள் நிறங்களிலே காற்றின் கொடிகள் படபடக்க

நாளும் பொழுதும் மாலையிட்டு உம்முன் மண்டியிடவில்லை.

மனதுக்குள் புதைத்து வைத்த காந்தள் கிழங்குகளே நீங்கள்

பெருநெருப்பாய் பூத்திருக்க நாங்கள் பணிசுமந்தே பாதையெங்கும்…