காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் – சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கோரிக்கை

204 Views

சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னெடுக்கும் முகமாக வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் உறவுகளால் முன்னெடுக்கப்படும் அடயாளப் போராட்டத்திற்கு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு முழுமையான ஆதரவினைத் தெரிவித்துக்கொள்கின்றது என அவ் அமைப்பின் தலைவர் க. ஆனந்தக்குமாரசுவாமி, இணைச் செயலாளர்கள் ச. தனுஜன் மற்றும் அ. சீவரத்தினம் ஆகியோரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ் அறிக்கையில், யுத்தம் முடிந்து பதினொரு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், போரின்போது வலிந்து காணாமல் செய்யப்பட்டோர் மற்றும் போர் முடிவின்போது கையளித்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான எந்தவொரு ஆக்கபூர்வமான பதிலையோ அல்லது பாதிக்கப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையிலான தீர்வையோ, இதுவரை இருந்துவந்த அரசாங்கங்கள் எவையும் முன்வைக்காமை கண்டனத்திற்குரியது. எனவே, இந்த நிலை இனியும் தொடராமல் இப்போதைய அரசாங்கம் விரைந்து, உறவுகளைத் தேடும் மக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் கருத்துகளையும் உள்வாங்கி, அவர்களின் பிரச்சினைக்குத் தீர்வை வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.

அத்தோடு, பதவிகளில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மட்டும் இவற்றைப் பேசுவதுடன் நின்றுகொள்ளாது, தமது பதவிகளைப் பணயம் வைத்து, இழப்புகளைச் சந்தித்து நிற்கும் இவ் உறவுகள் நிம்மதியாக வாழ ஆவன செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும், பாதிக்கப்பட்டவர்கள் மட்டும்தான் அப் பாதிப்புகளுக்கு எதிராகப் போராட வெண்டும் என்கிற நிலையை மாற்றிப் பேதங்கள் மறந்து, பாதிப்பின் வலி உணரக்கூடிய அனைவரும் ஒன்றிணைந்து இத்தகைய மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும். அத்துடன், போராடும் மக்கள் அவர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தியும், அந்நிய சக்திகளுக்கு ஆதரவாகப் பிழையாக வழிநடத்திக் குளிர்காய நினைக்கும் சதிகாரரின் வலையில் சிக்கிக்கொள்ளாது, அத்தகையோரின் மக்கள் விரோத உள்நோக்கங்களை இனங்கண்டுகொள்ளுதலும் வேண்டும்.

எனவே, கடந்த காலங்களைப் போலவே, எமது அமைப்பானது தொடர்ந்து அநீதிகளை எதிர்த்தும், பாதிப்புகளுக்கு நீதி கோரியும் போராடிவரும் மக்களுடன் இணைந்து கரம்கோர்த்து நிற்கும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply